பதில் அளிக்காமல் நிலுவையில் இருக்கும் 32,000 ஆர்.டி.ஐ மனுக்கள் – ஒன்றிய அரசு தகவல் !

இந்திய அரசு துறைகளிடம் கேள்வி எழுப்பும் வகையில் ஆர்டிஐ எனும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயல்பட்டு வருகிறது. ஆர்டிஐ மூலமே பல உண்மை தகவல்களும், அறியப்படாத தகவல்களும் பொது மக்களுக்கு தெரிய வருகிறது. ஆனால், ஆர்டிஐ மூலம் தாக்கல் செய்யப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விடுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் 30,000க்கும் அதிகமான ஆர்டிஐ மனுக்கள் பதில் அளிக்கப்படாமல் நிலுவையிலேயே இருந்து வருகிறது.

ராஜ்ய சபாவில் ஆர்டிஐ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ” ஒன்றிய தகவல் ஆணையத்திடம்(CIC) 2019-20ம் ஆண்டில் 35,178, 2020-21ம் ஆண்டில் 38116 மற்றும் 2021-ல் டிசம்பர் 6-ம் தேதி வரை 32,147 ஆர்டிஐ மனுக்கள் நிலுவையில் இருக்கிறது ” என ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் கிடைப்பதில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மெல்ல மெல்ல அழிந்து வருவதாகவும் கண்டனங்கள் எழுவதை பார்க்க முடிகிறது.

ராஜ்ய சபாவில் ஒன்றிய அரசு அளித்த தகவலின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நிலுவையில் இருக்கும் ஆர்டிஐ மனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது என்பது தெளிவாகி உள்ளது.

Link : 

https://pqars.nic.in/annex/255/AU2214.pdf

Please complete the required fields.
Back to top button