This article is from Feb 26, 2022

ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக பரவும் தவறான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் !

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. ரஷ்யாவின் படைகள் உக்ரைன் நாட்டை தாக்க தொடங்கியதில் இருந்து எண்ணற்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மக்களின் மனதை உருக வைத்தது.

எனினும், உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பாக சில பழைய மற்றும் தவறான வீடியோக்கள், புகைப்படங்களும் உலக அளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

ராணுவர் வீரர்களுக்கு விடை கொடுக்கும் காதலிகள் :

உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்கள் காதலிகளிடம் இருந்து கண்ணீருடன் விடைப்பெற்றதாக சிறு வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைன் தொடர்பாக புதியதலைமுறை வெளியிட்ட செய்தியிலும் இக்காட்சி வெளியாகி இருக்கிறது.

ஆனால், அந்த வீடியோ உக்ரைன் மீதான சமீபத்திய தாக்குதலின் போது எடுக்கப்பட்டது அல்ல. 2017-ல் “ The War of Chimeras ” எனும் உக்ரேனிய திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளே அது.

கேம் வீடியோ :

வான்வெளியில் விமானம் மூலம் நடத்தப்படும் தாக்குதலை விமானங்களை அழிக்கும் ஆயுதம் மூலம் தடுப்பதாக ரஷ்யா மற்றும் உக்ரைன் போரைக் குறிப்பிட்டு வீடியோ கேம் ஒன்றின் காட்சி இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது.

2022 ஜனவரியில் ” A-10 Warthog Missile Gun Run – C-RAM – Military Simulation – ArmA 3 ” என யூடியூப் சேனலில் வெளியான வீடியோ தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

ராணுவ உடையில் உக்ரைன் அதிபர் :

உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி ஆயுதத்துடன் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக ராணுவ படையுடன் முன் வரிசையில் களம் இறங்கி உள்ளதாக அவர் பாதுகாப்பு உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Facebook link

விளாடிமீர் ஜெலன்ஸ்கி புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 டிசம்பர் 6-ம் தேதி உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட எல்லைக்கு அருகே உள்ள போர் நிலைகளில் ஆயுதப்படை தினத்தன்று நாட்டிற்காக சேவை செய்யும் உறுப்பினர்களை சந்தித்ததாக “ Getty image தளத்தில் விளாடிமீர் ஜெலன்ஸ்கி பாதுகாப்பு உடையில் இருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

போர் சூழல் நிலவுவதால் கிடைக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் உண்மைத்தன்மையை அறியாமலும் இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். உலகம் முழுவதும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராக மக்களுக்கும் குரல் கொடுத்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

Please complete the required fields.




Back to top button
loader