This article is from Oct 10, 2018

சபரிமலை கோவிலில் நடிகைகளை வைத்து சினிமா ஷூட்டிங் நடந்ததா ?

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதை சபரிமலை தேவசம் போர்ட் நீண்ட காலம் கடைபிடித்து வந்தனர். ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலத்திற்கு பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவால் நிறைவேறியுள்ளது.

தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் ஒருமித்த கருத்து தெரிவிக்க, பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்காததே சரியானது என்று தீர்ப்பு வழங்கினார். இருப்பினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் கருத்திற்கு பிறகு இனி அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த தீர்ப்பிற்கு சபரிமலை தந்திரிகள், தேவசம் போர்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சபரிமலை கோவில் விவகாரத்தில் இதற்கு முன்பாக 10-50 வயதுக்குட்பட்ட பெண்கள் எப்பொழுதும் அனுமதிக்கபடவில்லை என்கிறார்கள் தந்திரிகள். இதில், தந்திரி குடும்பத்தை சேர்ந்த ராகுல் ஈஸ்வர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1812-ல் கூட குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறினார். எனினும், சபரிமலையில் 10- 50 வயதுக்குட்பட்ட பெண்களும் நுழைந்த சம்பவம், யார் முதலில் வழக்கு தொடர்ந்தது பற்றி பார்ப்போம்.

TKN நாயர் :

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் முன்னாள் ஆலோசகரான TKN நாயர், 1940-ல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற மதசடங்கின் போது அவரது அம்மாவின் மடியில் அமர்ந்து இருந்தது குறித்து தகவல் தெரிவித்து இருந்தார்.

சபரிமலையில் திரைப்பட ஷூட்டிங் :

1986 ஆம் ஆண்டில் சபரிமலை ஐயப்பனின் பக்தர் கே.சங்கரன் இயக்கிய “ நம்பினோர் கெடுவதில்லை “ என்ற திரைப்படத்தின் காட்சிகள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் எடுக்கப்பட்டன. இதற்காக, நடிகைகள் ஜெயஸ்ரீ, சுதா சந்திரன், அனு, வடிவுக்கரசி, மனோரமா, இயக்குனர், தேவசம் தலைவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றம் ஜெயஸ்ரீ, சுதா சந்திரன், அனு, வடிவுக்கரசிக்கு ரூ.1000, இயக்குனர் கே.சங்கரனுக்கும் அபராதம் விதித்தது. இதில், மனோரமா அவர்கள் மட்டுமே 50 வயதை கடந்ததால் அவருக்கு மட்டும் அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

மேலும், இயக்குனர் கே.சங்கரனிடம் இருந்து ரூ.7500 பெற்று அனுமதி அளித்ததால் சபரிமலை தேவசம் நிர்வாகத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1986-ல் சபரிமலையில்  தமிழ் திரைப்படம் ஷூட்டிங் நடைபெற்றது பற்றி கேரள எழுத்தாளர் என்.எஸ் மாதவன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

முன்னாள் திரைப்பட நடிகை மற்றும் கர்நாடகாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஜெயமாலா 1986 ஆம் ஆண்டு தன் கணவருக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றதாக 2006 ஆம் ஆண்டில் தெரிவித்து இருந்தார். இதற்காக அவர் மீது கடுமையான கண்டனங்கள் குவிந்தன. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

பெண்கள் நுழைய தடை விதிக்க வழக்கு :

1990 ஆம் ஆண்டில் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைந்த செய்தி புகைப்படம் செய்தித்தாளில் வந்ததை அறிந்த மகேந்திரன் என்பவர் பெண்கள் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார். தேவசம் முன்னாள் கமிஷனர் சந்திரிகாவின் பேத்தியினுடைய முதல் அரிசி உணவு வழங்கும் நிகழ்ச்சியில் அவரது மகள் பேத்தியுடன் வெளியான புகைப்படத்தால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடுத்தார்.

1991 ஆம் ஆண்டில் கேரளா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல தடை விதித்து தீர்ப்பளித்தது. இதன்பிறகு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோவிலுக்குள் செல்ல கடுமையான கட்டுபாடுகளை தேவசம் கடைபிடித்து வருகிறது.

பெண் மாவட்ட ஆட்சியர் கோவிலுக்குள் சென்ற சம்பவம் :

1990 ஆம் ஆண்டிற்கு பிறகு பதனம்திட்டா மாவட்ட ஆட்சியர் கே.பி. வல்சலா குமாரி நிர்வாக ரீதியாக சபரிமலை கோவிலுக்குள் செல்ல நேர்ந்த போது அனுமதி மறுக்கப்பட்டு பின்பு நீதிமன்ற சிறப்பு உத்தரவால் ஐயப்பன் கோவிலுக்குள் சென்றார்.

42 வயதாக இருந்த மாவட்ட ஆட்சியருக்கு கோவிலுக்குள் செல்ல பலரும் கண்டனம் தெரிவித்தனர். எனினும், ஐயப்பன் கோவிலின் 18 படி இருக்கும் பகுதிக்கு செல்ல கூடாது, உடன் பெண் யாரையும் அழைத்து செல்ல கூடாது, கடவுளை வணங்க கூடாது என்பது போன்ற விதிகள் அவருக்கு விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பலமுறை பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. சபரிமலை கோவிலுக்கு குறிப்பிட்ட வயது பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது 1990-க்கு முன்பே இருந்து வந்தாலும்  பெண்களின் வயது வரம்பு குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு நிர்வாகத்தால் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

2018 செப்டம்பர் உச்ச நீத்மன்றம் இந்திய அரசியலமைப்பு article 14, 25,26-ன் படி சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என அனுமதி அளித்துள்ளது.

Once Slammed For Entering Sabarimala, Minister Jayamala Hails Verdict

S. Mahendran vs The Secretary, Travancore … on 5 April, 1991

Sabarimala cinema shoot involving actresses forced rigid curbs on women..

Ban on women of prohibited age group visiting Sabarimala shrine comes under scrutiny

Sabarimala verdict: It was Mahendran who began legal battle seeking ban on women entry

Please complete the required fields.




Back to top button
loader