90 நாட்களில் பேஸ்புக் விளம்பரத்திற்கு ரூ.1.26 கோடி செலவு – இந்திய அளவில் ஜக்கி வாசுதேவ் முதலிடம்!

இன்றைய நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்துமே இணையத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்க தொடங்கிவிட்டது. 2ஜி, 3ஜி என வளர்ந்து இன்று 5ஜி வரை வளர்ச்சி கண்டிருக்கிறோம். சமீபத்தில் 5ஜி அலைக்கற்றையை ஒன்றிய அரசு ரூ.1.50 லட்ச கோடி என்ற குறைந்த தொகைக்கு ஏலம் விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய இணைய வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. தொழில் முனைவோர், ஊடகங்கள், கட்சிகள், கட்சி பிரமுகர்கள், தனிநபர்கள் என அனைவருமே தங்களது படைப்புகளையும், கருத்துக்களையும் பல்வேறு தரப்பு பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க இச்சமூக ஊடகங்கள் பெரும் உதவியாக உள்ளது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம், மோஜ் என எத்தனை புதுப்புது சமூக ஊடகங்கள் வந்தாலும் பேஸ்புக்கிற்கு எப்போதும் தனி இடமுண்டு.

இத்தகைய சமூக வலைத்தளங்களில் நாம் இடும் பதிவுகள் அதிக பார்வையாளர்களைச் சென்று சேர பேஸ்புக் நிறுவனத்திடம் பணத்தைக் கட்டி paid promotion செய்யலாம். அவ்வாறு செய்தவர்களின் பட்டியலை மெட்டா வெளியிட்டது. இந்திய அளவிலான இப்பட்டியலில் ஜக்கி வாசுதேவ் முதலிடத்தினை பிடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 27 முதல் ஜூலை 25 வரையிலான 90 நாட்களில் 12,863 விளம்பரதாரர்கள் மெட்டாவில் விளம்பரம் செய்துள்ளனர். இவர்கள் விளம்பரம் செய்த மொத்த மதிப்பு ரூ.13.94 கோடியாகும். இப்பட்டியலில் சத்குரு என்ற பெயரில் ஈஷா அவுட்ரிச் செய்த விளம்பர தொகை ரூ.99 லட்சமாகும். Conscious Planet என்ற பெயரில் ரூ.21 லட்சமும், சத்குரு தெலுங்கு என்ற பெயரில் ரூ.5 லட்சத்து 10 ஆயிரமும் விளம்பரத்திற்காகச் செலவிடப்பட்டுள்ளது.

ஈஷா அவுட்ரிச் என்ற பெயரில் பேஸ்புக் விளம்பரத்திற்குச் செலவு செய்யப்பட்ட மொத்த தொகையானது ரூ.1.26 கோடி (99,27,933 + 21,66,146 + 5,10,710) என அறிய முடிகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1.40 லட்ச ரூபாயை பேஸ்புக் விளம்பரத்திற்கு ஈஷா செலவு செய்கிறது.

மரம் நடுவதற்காக மக்களிடமிருந்து மரம் ஒன்றுக்கு ரூ.42 ஈஷா பவுண்டேஷன் வசூலிக்கிறது. அதே சமயத்தில் நாள் ஒன்றுக்கு பேஸ்புக் விளம்பரத்திற்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது.

வேறு யாரெல்லாம் பேஸ்புக் விளம்பரத்திற்கு எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்பதைத் தேடியதில், பாரதிய ஜனதா கட்சி ரூ.15.70 லட்சமும், குஜராத் பாஜக ரூ.15.61 லட்சமும் செலவு செய்துள்ளது. இவை தரவரிசை பட்டியலில் முறையே 13 மற்றும் 14 இடங்களைப் பெற்றுள்ளன. தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை DIPR TN என்ற பெயரில் ரூ.3.2 லட்சத்திற்கு பேஸ்புக் விளம்பரம் செய்துள்ளது.

ஊடகங்கள் மற்றும் கட்சிகளைத்தாண்டி ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்களும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகத்தின் வாயிலாக தங்களின் புகழைப் பிரபலப்படுத்திக்கொள்ள கோடிக்கணக்கில் செலவு செய்வதை வைத்து சமூக ஊடகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது.

Links : 

Facebook Ad Library Report_Pyrite Technologie

Pyrite Technologies

Please complete the required fields.




Back to top button
loader