காவிக் கொடி எதிர்காலத்தில் தேசியக் கொடியாக மாறலாம் : கர்நாடகா பாஜக அமைச்சர் !

கர்நாடகா பாஜகவின் மூத்த தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறையின் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, ” பகவா த்வாஜ் (காவிக் கொடி) “எதிர்காலத்தில் தேசியக் கொடியாக மாறக்கூடும் எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பிப்ரவரி 9-ம் தேதி கே.எஸ்.ஈஸ்வரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ” பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமச்சந்திரர் மற்றும் மாருதி தேர்களில் காவிக் கொடி இருந்தது. அப்போது நம் நாட்டில் மூவர்ணக் கொடி இருந்ததா ? இப்போது அது (மூவர்ணக் கொடி) நமது தேசியக் கொடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ ? அதை இந்த நாட்டில் உணவு உண்ணும் ஒவ்வொரு நபரும் கொடுக்கிறார்கள், அதைப் பற்றி எந்த கேள்வியும் இல்லை ” எனக் கூறினார்.

அப்போது செங்கோட்டையில் காவிக் கொடி ஏற்ற முடியுமா என செய்தியாளர்களின் கேள்விக்கு, ” இன்று இல்லை, எதிர் காலத்தில் ஒருநாள் ” என அவர் பதில் அளித்துள்ளார்.

” இன்று நாட்டில் ” இந்து சிந்தனை, இந்துத்வா ” பற்றி விவாதங்கள் நடக்கின்றன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று சொன்னபோது மக்கள் ஒரு கட்டத்தில் சிரித்தார்கள், இப்போது அதைக் கட்டுகிறோம் இல்லையா ? அதேபோல எதிர்காலத்தில் 100, 200 அல்லது 500 ஆண்டுகளுக்கு பிறகு பகவா த்வாஜ்(காவிக் கொடி) தேசியக் கொடியாக மாறக்கூடும், எனக்கு தெரியவில்லை.

காவிக் கொடியை ஏற்றுபவர்கள் நாம், இன்றல்ல எதிர்காலத்தில் இந்து தர்மம் இந்த நாட்டிற்கு வரும் அந்நேரத்தில் செங்கோட்டையில் ஏற்றுவோம். தற்போது அரசியலமைப்பு ரீதியாக மூவர்ணக்கொடிதான் நமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும், அதனை மதிக்காதவர்கள் தேசத் துரோகிகளாகி விடுவார்கள் ” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : கர்நாடகா கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டதா ?

சிவமொகா கல்லூரியில் தேசியக் கொடியை ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியது குறித்து பேசுகையில், ” டி.கே.சிவகுமார் ஒரு பொய்யர். அவர் நிரூபித்து காட்டட்டும். ஆம், அங்கு காவிக் கொடி ஏற்றப்பட்டது, ஆனால் தேசியக் கொடியை இறக்கவில்லை.. எங்கு வேண்டுமானாலும் காவிக் கொடியை ஏற்றலாம். ஆனால், தேசியக் கொடியை இறக்கி அல்ல, அது நடக்கவில்லை, ஒருபோதும் நடக்காது. தேசியக் கொடியை அகற்றவில்லை, கொடிக் கம்பம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது ” எனக் கூறியுள்ளார்.

Please complete the required fields.




Back to top button