சக்திமானுக்கும் போலி ட்வீட்டால் பிரச்சனை.. ஜெயா பச்சனை தாக்கி போலி ட்வீட் !

90களில் இந்திய அளவில் பிரபலமான ” சக்திமான் ” எனும் இந்தியன் சூப்பர் ஹீரோ தொலைக்காட்சி சீரியலுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா பெயரிலேயே தற்போது பல போலி ட்விட்டர் ஐடிக்கள் இயங்கி வருகின்றன.
முகேஷ் கண்ணா பெயரில் இயங்கி வரும் @NationalistSG எனும் போலியான ட்விட்டர் பக்கத்தில் ” நான் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகிய இருவரையும் புறக்கணிக்கிறேன். யாரெல்லாம் என்னுடன் உள்ளீர்கள் ” என வெளியான ட்வீட் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்களை பெற்று இருக்கிறது.
சமீபத்தில் பாலிவுட் வட்டாரத்தில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பாஜக எம்பியும், போஜ்புரி நடிகருமான ரவி கிஷான், பாலிவுட்டில் போதைப்பொருள் பிரச்சனை இருப்பதாக பேசி இருந்தார். இதற்கு சமாஜ்வாதி கட்சியின் எம்பியும், மூத்த நடிகையுமாக ஜெயா பச்சன், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலையின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே திரையுலகத்தை சமூக வலைதளங்களில் தாக்கி வருவதாக பதில் அளித்து இருந்தார். ரவி கிஷான் கூற்றை வைத்து ஜெயா பச்சன் அரசியல் செய்வதாக பாஜக எம்பி ஜெயப் பிரதா குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில்தான், முகேஷ் கண்ணா உடைய போலியான ட்விட்டர் பக்கத்தில், ” அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனை புறக்கணிக்கிறேன் ” என பதிவிட்டு உள்ளனர். இதேபோல் பல ட்வீட்க்கள் வெளியாகி இருக்கின்றன. 2020 செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் பாஜக எம்பி ரவி கிஷானுக்கு ஆதரவு தெரிவித்தும் ட்வீட் வெளியாகி இருக்கிறது.
” 2018-ம் ஆண்டில் இருந்து @actmukeshkhanna எனும் ஒரே ஒரு ட்விட்டர் கணக்கு மட்டுமே வைத்திருப்பதாக ” நடிகர் முகேஷ் கண்ணா இந்திய டுடே செய்திக்கு தெரிவித்து இருக்கிறர். இதைத் தவிர்த்து மீதமுள்ளவை போலியான ட்விட்டர் கணக்குகளே. அந்த ட்விட்டர் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
சில பாலிவுட் நட்சத்திரங்களுக்கு எதிராக புறக்கணிப்பு அழைப்புகள் வருவது குறித்து கூறுகையில், ” போதைப்பொருளை பயன்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் நடிகர்களின் படங்களை பார்ப்பதை நிறுத்த வேண்டும். எங்களை நட்சத்திரமாக்கியது மக்களே. எனவே போதைப்பொருள் பிடியில் இருக்கும் பொறுப்பற்ற நடிகர்களை மக்களால் மட்டுமே தண்டிக்க முடியும். அதுபோன்றவர்களின் படங்களை புறக்கணிப்பதை நான் ஆதரிக்கின்றேன் ” என முகேஷ் கண்ணா கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Link :