8 வழிச்சாலை போடக்கூடாது என திமுக கூறவே இல்லையா ? பொய் சொல்லலாமா அமைச்சரே !

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் வைத்த கோரிக்கைகள் என்ன என்பதினை செய்தியாளர் சந்திப்பில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான மக்கள் அதிக இழப்பீடு தரவேண்டுமென்றும், நிலம் அளிக்கும் தங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டுமென்றும் கூறியுள்ளனர். இதனை அரசும் ஏற்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பேசுகையில் “இதுபோன்ற திட்டங்களுக்கு விவசாய நிலங்களை எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை” எனக் கூறியிருக்கிறார்.

மேலும், “8 வழிச்சாலை போடக்கூடாது என திமுக சொல்லவே இல்லை, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் 8 வழிச் சாலை குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் “திமுக சாலை போடுவதற்கு எதிரி அல்ல. விவசாயிகளை அழைத்துப்பேசி, அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு பிரச்சினையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள்” என்றுதான் சொன்னார். சட்டமன்றக் குறிப்பை வேண்டுமானால் எடுத்துக் காட்டுகிறேன். 8 வழிச்சாலை போடக்கூடாது என்று எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை” எனப் பேசியிருக்கிறார்.

8 வழிச்சாலையில் திமுகவின் ஆரம்பக் கால நிலைப்பாடு என்ன?

2018-ம் ஆண்டு சேலம் 8 வழிச்சாலை திட்டத்தினை ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. அதனைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அதிமுக அரசு முயன்றபோது திமுகவின் நிலைப்பாடு அதாவது அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கையும் பேச்சும் மாற்றுப்பாதை, மாற்று வழி என்பதை அடிப்படையாகக் கொண்டே இருந்துள்ளது.

ஜூலை 2, 2018-ம் ஆண்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்ல திருமண விழாவில் பேசுகையில் “மக்கள் கருத்துகளைக் கேட்டு மாற்றுப் பாதியில் அமைக்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இதே போல ஜூலை 5, 2018-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், “விவசாய நிலங்களை அழித்துச் செயல்படுத்தப்படும் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும்” என்பதே அவரது கருத்தாக இருந்தது.

பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் 2018 ஆகஸ்ட் 21-ம் தேதி நிலம் கையகப்படுத்தத் தடை விதித்தபோது அதனை வரவேற்பதாகவும், விவசாயிகளின் நிலத்தை அராஜக போக்கில் கைப்பற்றிய அதிமுக அரசுக்கு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியிருக்கிறது! இனியாவது, மாற்றுவழி குறித்துச் சிந்திக்க வேண்டுமென ட்விட் செய்திருந்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகான நிலை :

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்த காலக்கட்டம் வரை மாற்றுப்பாதை என்பதே 8 வழிச் சாலையை பொருத்தமட்டில் திமுகவின் நிலைப்பாடாக இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

திட்டத்திற்குத் தடைவிதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, அதன் தீர்ப்பு 2020 டிசம்பர் 8-ம் தேதி வெளியானது. இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம், ஆனால் இதற்கான நிலங்கள் கையகப்படுத்திய விதம் தவறானது என்றும், கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இத்தீர்ப்பினையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கையினை வெளியிட்டார். இதில், “மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது” என்றும் “ஒன்றிய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்காமல் கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டு இருந்தார். 2021-ல் சட்டமன்ற தேர்தல் வர இருந்த நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக தேர்தல் வாக்குறுதி :

2021 சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையினை அவ்வருடம் மார்ச் 13ம் தேதி வெளியிட்டது. இதில் 500 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பிறகு தனியாக 5 வாக்குறுதிகளையும் வெளியிட்டிருந்தது. அதில் பிரதானமானது ” விவசாயிகளுக்கு எதிரான சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது” என்பதே அதுவாகும்.

மேலும் படிக்க : திமுக தேர்தல் அறிக்கை சிஏஏவை ஆதரிப்பதாக எழுந்த சர்ச்சை.. உடனே இணைக்கப்பட்ட புதிய வாக்குறுதிகள் !

மாற்றுப் பாதை குறித்துப் பேசிவந்த நிலையில் விவசாயிகளின் மீதான அக்கரையினாலோ, வேறு அரசியல் காரணங்களுக்காகவே 8 வழிச்சாலை நிறைவேற்றப்பட மாட்டாது எனத் தேர்தல் அறிக்கை கொடுக்கும் நிலைக்கு திமுக வந்தது.

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் 2021, ஜூன் 18ம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து எட்டு வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் பாதிக்கும் வகையில் இருப்பதால் அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். இச்செய்தி அப்பகுதி மக்களிடமும், விவசாயிகளிடம் மிகுந்த நம்பிக்கையையும் அளித்தது. கடந்த மார்ச் 20ம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் எ.வ.வேலு 8 வழிச்சாலை தொடர்பாகத் தமிழக முதல்வர் கொள்கை முடிவை எடுப்பார் எனக் குறிப்பிட்டார்.

அவரே தற்போது திட்டங்களுக்கு “விவசாய நிலங்களை எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை” எனப் பேசுகிறார். இவ்வாறு பேசுவதற்கு சில நாட்கள் முன்னதாக “சாலை விரிவாக்கம் என்றதும், நிலம் இல்லாதவர் கூட பச்சை துண்டை போட்டுக்கொண்டு நிலத்தை எடுக்காதே என்கின்றான்” எனப் பேசியிருந்தார்.

மேலும் படிக்க : நிலம் இல்லாதவர்கள் கூட பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு போராடுகிறார்களா ? – வந்த பாதையை மறக்கிறதா திமுக !

விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளைப் பற்றிப் பேசியும் போராடியுமே அவர்களது நம்பிக்கையையும், வாக்குகளையும் பெற்று திமுக அரசமைத்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் வரும் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறோம். அமைச்சரின் வார்த்தைகள் தனி நபருடையதாகப் பார்க்க முடியாது. அரசின் நிலைப்பாடாகவே கருதப்படும். திமுக தனது பிரதான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமா என்பதையும், தனது கொள்கை முடிவு என்ன என்பதையும் மக்கள் மத்தியில்தான் தெரிவிக்க வேண்டும்.

Link :

MK-Stalin-says-Chennai-Salem-Green-ExpressWay-project

no-option-but-to-take-agricultural-land-for-projects-like-airport-minister-ev-velu

farmers-thank-mk-stalin-for-his-clarity-on-salem-8-way-project-with-pm-modi

Please complete the required fields.




Back to top button
loader