சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து |முதலில் வழக்கு தொடுத்தது யார் ?

சேலம் மற்றும் சென்னைக்கு இடையே 8 வழிச் சாலை அமைக்க மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 8 வழிச் சாலை அமைப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

8 மாதங்களாக நடைபெற்ற வழக்கின் தீர்வு இன்று(ஏப்ரல் 8-ம் தேதி) வெளியாகும் என எதிர்பார்த்த சமயத்தில் சேலம் 8 வழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது என அறிவித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் திட்ட அரசாணையையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

சேலம் 8 வழிச்சாலை அமையக் கூடாது என போராடிய அனைவருக்கும் வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதற்கிடையில், சேலம்-சென்னை 8 வழிச் சாலைக்கு முதலில் வழக்கு தொடர்ந்தது யார் என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்காடு எண் 16961/2018-ல் வழங்கிய தீர்ப்பு என குறிப்பிட்டு பதிவுகள் பகிரப்படுகின்றன. மறுபுறம், தற்போதைய அதிமுக-பாஜக கூட்டணியில் இருக்கும் தருமபுரி தொகுதி எம்.பி ராமதாஸ் தான் வழக்கு தொடர்ந்து சாலை அமைக்க விடாமல் தடுத்து உள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பதிவிடப்படுகிறது.

இது தொடர்பாக Youturn தரப்பிற்கு கிடைத்த தகவலில் வழக்கு தொடுத்தவர்களின் வழக்கு எண், பெயர் உள்ளிட்ட விவரங்கள் கிடைத்தது. அதில், முதலில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் பெயர் இடம்பெற்றது.

Advertisement

சேலம் 8 வழிச் சாலை தொடர்பான வழக்கை ” பூவுலகின் நண்பர்கள் அமைப்பை  ”  சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் (வழக்கு எண் 15889/2018) ஜூன் 2018-ல் வழக்கு தொடுத்தார். எனினும், அவ்வழக்கு ஆகஸ்ட் 2018 செப்டம்பர் 4-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதன் பின், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களிடமும், கட்சி சார்பில் வழக்கு தொடுத்த சுரேஷ் குமார் என்பவரிடமும் தொலைபேசி வாயிலாக youturn தரப்பில் இருந்து பேசப்பட்டது. இதில், வழக்கு தொடர்பான விவரங்களை தெரிவித்தனர்.

அவர்களின் வழக்கு எண் 16961/2018-ஐ வைத்து ” Madras High Court – eCourts service ” இணையதளத்தில் தேடுகையில் வழக்கு ஜூலை 2018 தொடங்கி தீர்ப்பு நாளான  2019 ஏப்ரல் 8-ம் தேதி நெக்ஸ்ட் ஹியரிங் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் அவர்களின் வழக்கு எண் 20014/2018 பற்றி தேடுகையில் வழக்கானது ஆகஸ்ட் மாதத்தில் தொடரப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. அந்த வழக்கின் நெக்ஸ்ட் ஹியரிங் தீர்ப்பு நாளையே குறிக்கிறது.

இவர்களைத் தவிர நிலம் கையகப்படுத்த தடை, இடைக்கால தடை, திட்டத்திற்கு எதிரான தடை, இடைக்கால தடை என பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

பூவுலகின் நண்பர்கள், நாம் தமிழர் கட்சி சுரேஷ் குமார், எம்.பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள், போராடிய மக்கள் என பலரால் பல்வேறு வழக்குகள் சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிராக தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக கருதி தீர்ப்பு வழங்கி உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

8 வழிச் சாலைக்கு எதிராக போராடி வெற்றி பெற்று தந்தவர்கள் இவர்கள் தான் என இந்த வழக்கில் யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது.

இந்த கட்டுரைக்காக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் அவர்களிடம் பேசிய போது, ” யார் முதலில் வழக்கு தொடுத்தால் என்ன ? வழக்கில் வெற்றிப் பெற்று உள்ளோம். அதுவே முக்கியமாக பார்க்க வேண்டும். தற்போது இருக்கும் தேர்தல் சூழலில் 8 வழிச்சாலை தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்வதற்கு தற்போது வாய்ப்புகள் குறைவு. ஆனால், மேல்முறையீடு செய்வார்கள் ” என தெரிவித்து இருந்தார்.

எட்டு வழிச்சாலை  திட்டம் ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது போராடிய மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது. ஆனால், அதனை அரசியல் ஆக்கவும் கூடாது, வெற்றி தன் ஒருவரின் முயற்சிக்கு கிடைத்தது என உரிமை கொண்டாடவும் முடியாது.

மக்கள் விரும்பாத திட்டங்கள் இம்மண்ணை விட்டு அகற்றப்பட வேண்டும். களத்தில் , சட்டப் போராட்டத்தில் செயல்பட்ட அன்பர்களுக்கு நன்றி  !

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close