சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக் களஞ்சியம்’ என தொகுக்கவில்லை மறுக்கும் தமிழ் வளர்ச்சித்துறை!

ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற போது அமைச்சர் தங்கம் தென்னரசு 20 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், ” சங்க இலக்கியங்களை சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும் திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் கொண்டுவருவதற்கு தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு ” என செய்திகள் மற்றும் பதிவுகள் வெளியாகின.
இதையடுத்து, சங்க இலக்கியங்களை சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாக மாற்றுவது சரி, எதற்காக திராவிடக் களஞ்சியம் என தொகுப்பு நூலாக கொண்டு வர வேண்டும் என பெ.மணியரசன், சீமான் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது!https://t.co/0oSDbJ9CA4 pic.twitter.com/JLKZY6gL9d
— சீமான் (@SeemanOfficial) September 1, 2021
” சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது! ” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
திராவிடக் களஞ்சியம் என்பதை பயன்படுத்தக் கூடாது, தமிழ்க் களஞ்சியம் என்றே இருக்க வேண்டும் என முதல்வர் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசை டாக் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகளும், கண்டனங்களும் உருவாகி வருகிறது.
ஆகையால், தமிழ் வளர்ச்சித்துறையின் துணை இயக்குனரை(நிர்வாகம்) தொடர்பு கொண்டு பேசுகையில், ” அந்த அறிவிப்பு என்னவென்றால், சங்க இலக்கியங்களை சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் என்பதே உண்மையான அறிவிப்பு. சங்க இலக்கியங்களை சந்தி பிரித்து என்பது ஒரு நூல், திராவிடக் களஞ்சியத் தொகுப்பு என்பது மற்றொரு பணியாகும். அமைச்சரின் 2021-2022 அறிவிப்பானது தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது பாருங்கள் ” என பரவும் செய்திக்கு மறுத்து, விளக்கம் அளித்து இருந்தார்.
தமிழ் வளர்ச்சித்துறையின் அறிவிப்பில் 10வது அறிவிப்பாக, சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு நூல்களாக அச்சிட்டுக் குறைந்த விலையில் வெளியிட ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதற்கு கீழ், ” சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கெனத் தொடராகச் செலவினமாக ரூபாய் 10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் ” என இடம்பெற்று இருக்கிறது.
மேற்காணும் வெளியீடே சமூக வலைதளங்களில் மேற்கொள்காட்டி கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதை மேற்கொள்காட்டி பேசிய தமிழ் வளர்ச்சித்துறையின் துணை இயக்குனர், ” திருவள்ளுவர் புகைப்படத்துடன் காணப்படும் வெளியீட்டு படத்தில் எழுத்து பிழை ஏற்பட்டுள்ளது என்றும், உண்மையான அறிவிப்பை தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளத்தில் அறிவிப்பு எனும் பிரிவில் காணலாம் ” என தெரிவித்து இருந்தார்.
இந்த திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பில் எந்தெந்த நூல்கள் இடம்பெறும் எனக் கேட்ட போது, ” அது குறித்து இனிமேல் தான் முடிவு செய்யப்படும் ” எனப் பதில் அளித்து இருந்தார்.
Links
Tamil valarchi announcement 2021-2022