This article is from Oct 16, 2021

சாவர்க்கரை பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதுமாறு காந்தி சொன்னாரா ?

ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்டவர்களால் ” வீர் சாவர்க்கர் ” என அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ” பிரிட்டிஷ் அரசுக்கு பணிந்து மன்னிப்பு கடிதங்கள் எழுதினார் ” என அவர் பற்றிய அடிக்கடி பேசப்படுவதுண்டு. இது அரசியல் களத்திலும், சமூக வலைதளங்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்படுவதாகும்.

இந்நிலையில், அக்டோபர் 13-ம் தேதி சாவர்க்கர் குறித்த நூல் ஒன்றின் வெளியிட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Twitter link  

அந்த நிகழ்வில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ” சாவர்க்கர் பற்றி பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவர் மீண்டும் மீண்டும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கருணை மனுக்களை தாக்கல் செய்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், அவர் (சிறையில் இருந்து) விடுதலைக்காக கருணை மனுக்களை தாக்கல் செய்யவில்லை. ஒரு கைதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு. மகாத்மா காந்தியின் ஆலோசனைக்குப் பிறகு அவர் கருணை மனுக்களை தாக்கல் செய்தார். சாவர்க்கரை விடுதலை செய்ய வேண்டும் என்று மகாத்மா காந்தி வேண்டுகோள் விடுத்தார். ” எனத் தெரிவித்து இருந்தார்.

சாவர்க்கரின் மன்னிப்பு கடிதங்கள் :

2005-ம் ஆண்டு தி ஹிந்து ஃபிராண்ட்லைனில் வெளியான வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் ஏஜி நூரானியின் கட்டுரையில் சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையில் இருந்த போது 1911 முதல் தாக்கல் செய்த கருணை மனுக்களின் பட்டியலை விவரித்து இருக்கிறார்.

அதில், ” 1911 ஜூலையில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் 6 மாதத்திற்குள் சாவர்க்கர் முதல் கருணை மனுவை சமர்ப்பித்தார்.  1913 நவம்பர் சாவர்க்கர் இரண்டாவது கருணை மனுவை சமர்ப்பித்தார். 1914 மற்றும் 1918 ஆகிய ஆண்டுகளில் சாவர்க்கர் எழுதியதாக கூறப்படும் கருணை மனு பற்றி 1920-ம் ஆண்டு சட்டமன்றத்தில் உள்துறை உறுப்பினர் சர் வில்லியம் வின்சென்ட் குறிப்பிட்டதாகவும் ” கூறப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து 1914-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி புறப்பட்டு 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதியே இந்தியாவிற்கு வருகை தந்தார். அவரது வருகைக்கு முன்பே சாவர்க்கர் இருமுறை கருணை மனுக்களை எழுதி இருக்கிறார்.

காந்தியின் கடிதம் :

காந்தி சேவாகிராம் ஆசிரமத்தில் உள்ள பதிவுகளின்படி, சாவர்க்கர் சகோதரர்கள் விடுதலை தொடர்பாக நாராயணன் சாவர்க்கர் (விநாயக் தாமோதர் சாவர்க்கரின் இளைய சகோதரர்) உதவி வேண்டி எழுதி கடிதத்திற்கு பதில் கடிதத்தை மகாத்மா காந்தி 1920 ஜனவரி 25-ம் தேதி எழுதினார்.

காந்தி எழுதிய கடிதத்தில், ” உங்களுடைய கடிதம் கிடைத்தது. உங்களுக்கு அறிவுரை கூறுவது கடினம். எனினும், உங்கள் சகோதரர் செய்த குற்றம் முற்றிலும் அரசியல் சார்ந்தது என்ற உண்மையை தெளிவுப்படுத்தி, வழக்கின் உண்மைகளை முன்வைத்து நீங்கள் ஒரு சுருக்கமான மனுவை உருவாக்க பரிந்துரைக்கிறேன். இந்த வழக்கில் மக்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியும் என்பதற்காக நான் பரிந்துரைக்கிறேன். இதற்கிடையில், நான் உங்களுக்கு முன்னதாக எழுதிய கடிதத்தில் கூறியது போல், நான் எனது வழியில் இந்த விசயத்தில் நகர்கிறேன் ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

காந்தியின் கடிதத்தின்படி, சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கருணை கேட்க வேண்டும் எனக் குறிப்பிடவில்லை. அவர் தனது சொந்த வழியில் ” அந்த விசயத்தில் செல்வதாக ” என்றேக் கூறி இருக்கிறார்.

மகாத்மா காந்தியின் கடிதத்திற்கு 2 மாதங்களுக்கு பிறகு சாவர்க்கர் புதிதாக ஒரு கருணை மனுவை தாக்கல் செய்தார். 1920-ம் மார்ச் 30-ம் தேதியிட்ட கடிதத்தில், ” நூற்றுக்கணக்கான கைதிகளை விடுதலை செய்ததற்கு பிரிட்டிஷ் அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர் மற்றும் அவரது சகோதரர் உட்பட மீதமுள்ள கைதிகளுக்கும் கருணை காட்ட வேண்டும் எனக் கூறியதாக ”  2005-ம் ஆண்டு வெளியான தி ஹிந்து ஃபிராண்ட்லைனில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 1920 ஜூலை 6-ம் தேதி தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் மனு பற்றி பேசி இருக்கிறார். ஆனால், அதில் காந்தியின் பெயரை சாவர்க்கர் குறிப்பிடவில்லை.

சாவர்க்கர் அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு 1921 மே மாதம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். 1924-ம் ஆண்டு சில கட்டுப்பாடுகள் உடன் சாவர்க்கர் ரத்னகிரி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மகாத்மா காந்தி கூறியதால் மட்டுமே சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கருணை மனுக்களை எழுதினார் என்பதற்கு பொதுவில் கிடைக்கக்கூடிய தரவுகள் இல்லை. சாவர்க்கரின் முதல் 2 கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தார். 1920-ல் சாவர்க்கரின் இளைய சகோதரர் உதவிக்காக காந்திக்கு கடிதம் எழுதிய போது, ஒரு மனுவை தாக்கல் செய்யுமாறு காந்தி அறிவுறுத்தி இருக்கிறார். ஆகையால், காந்தி சொல்லி தான் சாவர்க்கர் கருணை மனுவை எழுதியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய கூற்று தவறானது.

Links :

Savarkars Mercy Pettiton

CHRONOLOGY OF MAHATMA GANDHI

LETTER TO N.D. SAVARKAR

Letters from Andaman

Please complete the required fields.




Back to top button
loader