சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு !

கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. அத்தண்டனை நிறுத்தி வைத்தும், சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கியும் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 2022 டிசம்பர் 12ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் சவுக்கு சங்கர் பேசியதாவது : “பாலாஜி என்பவர் நீண்ட காலமாக பிளாக் ஷிப் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் தனது மனைவியுடனான சண்டையின் காரணமாக தனியாக தங்கியுள்ளார். அடிக்கடி அலுவலகத்திலும் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 8ம் தேதி இரவு அவர் அலுவலகத்தில் இறந்துள்ளார். அந்த அறையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை பிளாக் ஷிப் நிறுவனம் நீக்கி (Delete) உள்ளது. இதுகுறித்து காவல்துறை எந்தொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என கூறி இருந்தார்.
சவுக்கு சங்கர் பேசியது குறித்து பிளாக் ஷிப் நிறுவனத்திடமும், இறந்த பாலாஜியின் அக்கா மகன் தீபக்கிடமும் யூடர்ன் சார்பாக பேசிய போது, ” பாலாஜி கடந்த அக்டோபர் 10ம் தேதி (2 மாதங்களுக்கு முன்பாக) பணியில் சேர்ந்துள்ளார். டிசம்பர் காலை 10.30 மணியளவில் அவர் அலுவலகத்தில் இறந்துள்ளார். அந்த சிசிடிவி காட்சி பதிவும் பாலாஜியின் குடும்பத்தாரிடம் காண்பிக்கப்பட்டுள்ளது.
அந்த சிசிடிவி காட்சி பதிவில் எவ்வித சந்தேகமும் இல்லை என தீபக் கூறினார். மேலும், தங்களது தரப்பில் இருந்து காவல் துறையிடம் எந்த புகார் மனுவும் அளிக்கவில்லை ” எனக் கூறினார்.
இது குறித்து யூடர்ன் யூடியூப் சேனலில் வீடியோவும், தீபக்கிடம் பேசிய ஆடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி பொய்யான தகவலை செய்தியாளர் சந்திப்பு மற்றும் யூடியூப் சேனல்களில் பேசி வரும் சவுக்கு சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பொய் தகவல்களையும், போலிச் செய்திகளையும் பரப்பி இருந்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் விக்னேஷ் சிவன் :
செஸ் ஒலிம்பியாட் 2022ஐ மார்க்கெட்டிங் செய்வதற்கான ஒப்பந்தம் மிட்சன் ஆட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் வி. சிவ விக்னேஷ் என்பவர் பெரும்பான்மை பங்குதாரர் ஆவார். அவர் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் என ஜூலை 16 2022 அன்று சவுக்குச் சங்கர் பதிவிட்டிருந்தார்.
ஆனால் உண்மை அதுவல்ல. செஸ் ஒலிம்பியாட் 2022ஐ மார்க்கெட்டிங் செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றதாகக் கூறப்படும் மிட்சன் ஆட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் சிவ விக்னேஷ் என்பவர் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அல்ல, இரண்டும் வெவ்வேறு நபர்கள் என நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
படிக்க : செஸ் ஒலிம்பியாட் மார்க்கெட்டிங் ஒப்பந்தம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கியதாக வதந்தி !
நாம் தமிழர் கட்சி பற்றி போலிச் செய்திகள் :
சீன மேலாளரை வந்தேறி என்று கூறி தாக்கிய விவகாரத்தில் திருவாரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் குமார் என்பவரை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியது. மீண்டும் சிங்கப்பூரில் நுழைய வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது எனப் பாலிமர் நியூஸ் கார்டை சவுக்குச் சங்கரும் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
படிக்க : சீன மேலாளரை வந்தேறி என்றதால் நா.த.கட்சி உறுப்பினருக்கு சிங்கப்பூர் அரசு தடையா ?
இந்த செய்தி போலியானது என்றும், இந்த நியூஸ் கார்டு போட்டோஷாப் செய்யப்பட்டது என நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், அக்கட்சி சார்பாக ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளும் இடும்பாவனம் கார்த்திக் என்பவர் பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்ததாக ஹரி நாடார் உடன் கார்த்திக் இருக்கும் புகைப்படத்தைச் சவுக்குச் சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
படிக்க : இடும்பாவனம் கார்த்திக் பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்ததாக பரவும் ஃபோட்டோஷாப் புகைப்படம் !
ஆனால், டிசம்பர்24-ம் தேதி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி ஹரி நாடார் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் இப்படி ஃபோட்டோஷாப் செய்துள்ளனர் என்றும், இடும்பாவனம் கார்த்தியும் தன் ட்விட்டர் பக்கத்தில் சவுக்குச் சங்கர் பதிவை பகிர்ந்து விமர்சித்து இருக்கிறார் என்றும் நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பற்றி போலிச் செய்தி :
தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் சவுக்கு சங்கர் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். ஆனால், அவர் பதிவிட்ட ஆனந்த் விகடன் நியூஸ் கார்டு போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது என நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
படிக்க : கங்கனா ரணாவத் என் இளமை நரம்பை முறுக்கேற்றி விட்டார் என ஜெயக்குமார் கூறினாரா ?
பாஜகவிற்கு எதிராக போலிச் செய்திகள் :
“மிஷினரிகள் கோயில் சிலைகளை உடைத்ததாகப் பொய்களைப் பரப்பி 33 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்து திருடிய பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத். அண்ணாமலைக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் பாதிப் பணத்தை மத்திய மந்திரிகளைத் திருப்திப்படுத்த செலவு செய்ததாகவும் போதையில் உளறல் ” என எடிட் செய்யப்பட்ட ஜூனியர் விகடனின் நியூஸ் கார்டை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
படிக்க : வசூல் செய்ததில் அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாகக் கார்த்திக் கோபிநாத் கூறினாரா ?
தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாணவியின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் 2 கோடி நிதியுதவி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகவும், பாஜக அண்ணாமலையை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்ததாகவும் தந்தி டிவி பெயரில் போலியான நியூஸ் கார்டுகளை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.
தமிழக பாஜகவின் முன்னாள் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் என்பவர், இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் எனக் கூறியதாக பரவிய நாரதர் மீடியா நியூஸ் கார்டு ஒன்றை சவுக்குச் சங்கரும் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் சொன்னதாகப் பரவி வந்த நியூஸ் கார்டு போட்டோஷாப் செய்யப்பட்டது என நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
படிக்க : இந்தி தெரியாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பாஜக இளைஞரணி தலைவர் கூறியதாக வதந்தி !
திமுக அரசின் பட்ஜெட் அறிக்கையில் பசுத் தொடர்பாக எந்த திட்டமும், நிதியும் இல்லை என்பதால் அதைக் குப்பை பட்ஜெட் எனப் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்ததாக நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வந்தது. இதனைச் சவுக்குச் சங்கர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். இதுவும் எடிட் செய்யப்பட்டது என கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
படிக்க : கோமாதாவுக்கு நிதி ஒதுக்காத குப்பை பட்ஜெட் என ஹெச்.ராஜா கூறினாரா ?
இதேபோல், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறியதாக போலியான நியூஸ் கார்டை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
படிக்க : குழந்தைகளின் ரியாலிட்டி ஷோ விவகாரத்தில் அண்ணாமலை பற்றிப் பரவும் போலிச் செய்திகள் !
ராஜீவ் காந்தியின் போலி ட்விட்டர் பக்க பதிவு :
திமுகவின் ராஜீவ் காந்தியின் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு ” எங்கள் சின்னச் சின்னவர் ” எனக் கூறி புகைப்படம் பகிர்ந்ததை ஸ்க்ரீன்சார்ட் எடுத்து ராஜீவ் காந்தியின் உண்மையான ட்விட்டர் பக்கத்தை டக் செய்து சவுக்குச் சங்கர் விமர்சித்து பதிவிட்டிருந்தார்.
படிக்க : இன்பநிதியை “சின்ன சின்னவர்” எனக் கூறி ராஜீவ் காந்தி பதிவிட்டதாக பரப்பப்படும் போலி ட்வீட் !
இப்படி பொய்யான தகவலையும், போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகளையும் சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு இருந்துள்ளார்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.