என்றைக்கு ஒழியும் சாதிக் கொடுமை.. சக மாணவனை பிளேடால் கிழித்த சம்பவம் !

குறிப்பிட்ட மக்களை சாதி எனும் பெயரைக் கூறி தீண்டத்தகாதவர்களாக மாற்றி வைத்திருந்த காலங்கள் மாறி அனைவரும் சமமாக கல்வியை கற்க வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது . அதற்காகவே , தீண்டாமை ஒரு பாவச்செயல் என பள்ளிகளிலேயே பயிற்றுவைக்கப்பட்டு மாணவர்களுக்கு இடையே சமத்துவம் குறித்து போதிக்கப்படுகிறது.

Advertisement

அப்படி சமத்துவம் போதிக்கும் பள்ளியிலேயே சக மாணவனை சாதியின் பேரைக் கூறி பிளேடால் கடுமையாக தாக்கிய சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்து உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சக மாணவனின் சாதிப் பெயரைக் கூறி திட்டி அவமானப்படுத்தி முதுகில் பிளேடால் கிழித்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக தகவலை கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் கேட்டுக் கொண்டனர்.

அலங்காநல்லூர் அருகிலுள்ள மறவப்பட்டியில் வசித்து வரும் பட்டியலினத்தை சேர்ந்த ராமுவின் மகனான சரவணக்குமார் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்து வரும் மகேஸ்வரன் என்ற மாணவர் சரவணனின் பையை எடுத்து ஒளித்து வைத்துத் தேட வைத்துள்ளார்.

இதை அறிந்த சரவணன் , ஏன் பையை ஒளித்து வைத்தாய் எனக் கேட்க , அதற்கு சரவணக்குமாரின் சாதிப்பெயரை சொல்லி கடுமையாக திட்டியதுடன் , நீயெல்லாம் என்னைப் பார்த்து பேச வந்துட்டியா எனக் கூறிய மகேஸ்வரன் பிளேடைக் கொண்டு சரவணக்குமாரின் முதுகில் கீறி அங்கிருந்து ஓடிவிட்டார்.

வலி தாங்காமல் கத்திய சரவணக்குமாரின் கதறலை கேட்டு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவனை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது .

Advertisement

Video archived link  

இது தொடர்பாக , பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தன் மகன் சாதி ரீதியாக பல இன்னல்களுக்கு உள்ளாகி வந்தது குறித்து தெரிவித்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. மேலும், சாதியை குறிப்பிட்டு சக மாணவனை தாக்கிய மாணவனின் மீது சரவணக்குமாரின் தந்தை போலீசில் புகார் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து, அந்த மாணவனின் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அக்டோபர் 12-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

இதுபோன்ற சம்பவங்கள் இன்றும் கிராமப்புறங்களில் சாதி பாகுபாட்டையும், அதனால் உருவாகும் வன்முறையையும் ஒழிக்க முடியவில்லை என்பதை எடுத்துரைக்கிறது . மக்கள் காலத்திற்கு ஏற்ப சாதி பாகுபாட்டை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் பள்ளி மாணவர்களிடையே சாதிப் பிரிவினை உருவாவது வேதனை.

இன்றைக்கு சுயசாதி பெருமையை பேசி (யாராக இருந்தாலும்) டிக்டாக் வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் பரப்புவது மற்றவர்களின் மனநிலையை மாற்றி வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

பள்ளியில் பயிலும் மாணவனின் மீது புகார் பாய்ந்தால், அது எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும். அவனின் எதிர்காலம் என்ன , இதற்கு பிறகு மற்றவர்கள் எப்படி அணுகுவார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன. இதை அறியாமல் செய்யும் தவறுகள் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றக்கூடியது.

Links : 

தொடரும் சாதி கொடூரம்! மாணவனை பிளேடால் கீறிய சக மாணவன்!

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button