காலை உணவுத் திட்டத்தை தொடங்கியது யார்.. அதிமுகவா ? திமுகவா ?

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை” மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இத்திட்டம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்டது என பாஜகவை சார்ந்தவர்கள் கூறி வருகின்றனர். அதிமுக கொண்டுவந்த திட்டத்தினை திமுக ஸ்டிக்கர் ஒட்டி தனது திட்டமாக செயல்படுத்துவதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தொடங்கிய திட்டம்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தை அன்றைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 2019ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதியன்று தொடக்கி வைத்தார்.

அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி மற்றும் அக்ஷய பத்ரா தொண்டு நிறுவனம் இணைந்து இத்திட்டத்தினை தொடங்கினர்.

இத்திட்டமானது 2018-2019ம் கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5,000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக அக்ஷய பத்ரா தொண்டு நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, 2020 பிப்ரவரியில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. அதன்படி, சென்னை கிரீம்ஸ் சாலையில் பிரம்மாண்ட சமையலறை கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. இக்கட்டிடத்திற்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசு சார்பில் நிலமும், அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சார்பில் ரூ.5 கோடி நிதியும் வழங்கப்பட்டது.

அதே ஆண்டு ஜனவரியில், தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக வதந்தி பரவியது.

அதற்கு அன்றைய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வதந்தி என  விளக்கம் அளித்து இருந்தார். எனினும், முன்னாள் அமைச்சர் வேலுமணி இத்திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இது குறித்து யூடர்ன் கட்டுரையும் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க :  அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்பட உள்ளதா ?|அமைச்சர் பதில்.

அதிமுக ஆட்சி காலத்தில் தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து சென்னையிலுள்ள 5,000 பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக மாநகராட்சி தரப்பில் நிதி ஏதும் வழங்கப்படவில்லை, அக்ஷய பத்ராவிற்கு இரு இடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டது என அன்றைய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து இருந்தார். மேலும், அக்ஷய பத்ரா வழங்கும் உணவில் வெங்காயம், பூண்டு இல்லாமல் குறிப்பிட்ட சாதி சார்ந்து இருப்பதாக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.

திமுக கொண்டுவந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

திமுக சார்பில் 2021ம் ஆண்டு, மே மாதம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு கொரோனா பேரிடர் காலத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன. மீண்டும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இம்முறை தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியின்றி, அரசே முழு செலவையும் ஏற்க திட்டமிடப்பட்டது. அதற்கான அரசாணையினையும் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்டது.

விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட அரசாணையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 1,545 அரசு பள்ளிகளில் பயிலும் 1,14,095 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும், “காலை உணவினை தயாரிக்கும் வேலையினை, நகர்ப்புற பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மையப்படுத்தப்பட்ட சமையலறை அல்லது வேறு ஏதேனும் தகுதி வாய்ந்த அமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும், ஊரக பகுதிகளில் கிராம ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும் ” அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

அதிமுக அரசு அக்ஷய பத்ரா என்ற அறக்கட்டளையுடன் இணைந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள 5,000 மாணவர்களுக்கு மட்டும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு அரசு நிதி அளிக்கவில்லை, இடம் மட்டுமே கொடுத்தது.

ஆனால், தற்போது திமுக அரசு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்கான நிதியை தமிழ்நாடு அரசே வழங்குகிறது.

Please complete the required fields.
Back to top button
loader