தேசிய அளவிலான சிறந்த சிற்பக் கலைஞர்களில் தமிழர் !  

டெல்லியில் பழையப் பொருட்கள், உதிரி பாகங்கள் என ஒதுக்கியவைகளை கொண்டு சிற்ப கலைஞர்கள் மூலம் உலக அதிசயங்களை வடிவமைக்கும் முயற்சி வித்தியாசமான செயலாகப் பார்க்கப்படுகிறது. அம்முயற்சியில் பணியாற்றிய கலை வடிவமைப்பு கலைஞர்களில் தமிழர் ஒருவரும் உள்ளார் என்பதை இங்கு பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.

South Delhi Municipal Corporation அரசு அலுவலகங்களில் உள்ள பழைய பொருட்களை ஏலம் விடுவது வழக்கம். இம்முறை அதற்கு பதிலாக அலுவலகங்களில் கிடைக்கும் பழைய இரும்புகள், பொருட்களை வைத்து ஏதேனும் ஒரு பூங்காக்களில் ஆழகான கலை வடிவமைப்புகளை உருவாக்கலாம் என்ற புதிய ப்ராஜெக்ட் ஒன்றை அறிவித்தனர்.

அரசின் ப்ராஜெக்ட் YA WE DO என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அந்நிறுவனம் இந்திய அளவில் 5 சிற்பக் கலைஞர்களை தேர்வு செய்தது. தேர்வானவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ராம் குமார் என்பவரும் ஒருவர். ராம்குமாரை Youturn தொடர்பு கொண்டு பேசிய போது பல தகவல்களை அளித்துள்ளார்.

யார் இந்த ராம் குமார் ?

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் பிறந்த ராம்குமார் கண்ணதாசன் சிற்பக்கலை துறையில் இளங்கலைப் படிப்பை சென்னையில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் முடித்தார். அதன்பின் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தார். படிப்பு மட்டுமின்றி 2013-2014-ல் டெல்லியில் உள்ள Garhi artist studio-வில் கலை சார்ந்த வளர்ச்சியை மேற்கொண்டார்.

ராம் குமாருக்கு டெல்லி செல்ல உதவித் தொகை வழங்கிய லலித் கலா அகாடமி 2015-ல் நடத்திய “ 56 வது தேசிய கலைக் கண்காட்சியில் “ அவரின் கற்சிற்பம் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் சூட்டிய பெயர் “ மீண்டும் புதைக்கப்படும் இயற்கை வளங்கள் “.

2017-ல் Profulla Art பவுண்டேசன் நடத்திய போட்டியில் இந்திய அளவில் ராம் குமார் சிற்பம் தங்கப்பதக்கம் வென்றது.

ராம் குமார் படைத்த கலை வடிவமைப்புகள் பல கேரளா, ஹைதராபாத், சண்டிகர், நாக்பூர், நொய்டா, டெல்லி, உதய்பூர், மகாராஷ்டிரா என பல மாநிலங்களின் முக்கிய இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள கலைக் கல்லூரியில் பகுதி நேரமாகவும், கலைக் கல்லூரியில் படிக்கும் டிப்ளமோ மாணவர்களுக்கு ஆலோசகராகவும் உள்ளார்.

தேசிய அளவிலான போட்டிகள், பல மாநிலங்களில் முக்கிய இடங்களில் கலைச் சிற்பங்கள் செதுக்கும் பணி என சென்றுக் கொண்டு இருந்த ராம்குமார் அவர்களுக்கு டெல்லியில் அரசின் புதிய ப்ராஜெக்ட்டில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

டெல்லியில் உள்ள Seven Wonders of World என்ற பூங்காவில் பழைய இரும்பு பொருட்கள், கார் பாகங்கள், பெஞ்ச், நாற்காலி உள்ளிட்ட பல பொருட்களை எல்லாம் பயன்படுத்தி உலக அதிசயங்களை கலை வடிவமாக உருவாக்கி உள்ளனர். இதில் பயன்படுத்திய உதிரி பாகங்களின் எடை சுமார் 130 டன் ஆகும். இதில், பணியாற்றிய 5 கலைஞர்களில் 4 பேர் பரோடாவில் உள்ள எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் சிற்பக் கலைஞர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ராம்குமார் ஒருவர் மட்டுமே.

இப்பூங்காவில் 7 உலக அதிசயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், அனைத்தும் 5 சிற்பக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவானவையே. ஒருத்தருக்கு ஒருத்தர் நன்கு உதவியாக இருந்ததாகவும், தனிப்பட்ட முறையில்  பைசா சாய்ந்த கோபுரம் தன் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என ராம்குமார் தெரிவித்து இருந்தார்.

பூங்காவிற்கு வருகைத் தரும் மக்கள் தேவையற்ற பொருட்கள் மூலமும் மறுசுழற்சி செய்ய முடியும் என்பதை அறிய வேண்டும் என்பதே இதன் நோக்கம். பூங்காவில் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்களின் கலை வடிவங்கள் இரவில் ஒளிர மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் பணிகள் ஜனவரி 31-ம் தேதி நிறைவடைந்தது. பிப்ரவரி 19-ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மக்கள் பார்வைக்காக பூங்கா திறக்கப்படுகிறது. இப்பூங்கா ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவரும் என எதிர் பார்க்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து ஒருவர் கலை வடிவமைப்பில் இந்திய அளவில் சிறந்து விளங்குவது இங்கு பலரும் அறியாமல் உள்ளனர். ராம்குமார் பற்றிய Aljazeera என்ற செய்தி தளத்தில் வெளியாகியுள்ளது.

சிற்பக் கலைச் சார்ந்த துறையில் தென்னிந்தியாவில் இருந்து பிரபலமானவராக ராம்குமார் உள்ளார். சிற்பக் கலைத் துறை பற்றி தமிழகத்தில் பலரும் அறியாமல் உள்ளனர், அதனை அனைவரும் அறிய வேண்டும், பலரும் அதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறார் ராம்குமார்.

“ சிற்பக் கலை இம்மண்ணில் விதைக்கப்பட்ட விதை. நவீனமாக மாறினாலும் அவை விதையில் உருவான மரத்தின் கிளைகளே “.

World’s seven wonders recreated in New Delhi using scrap 

Update : 

புல்வாமா தாக்குதல் காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற இருந்த பூங்காவின் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Please complete the required fields.




Back to top button