சாதி ஆணவக் கொலை அல்ல, குடிப்பெருமை கொலை.. சர்ச்சையான சீமானின் பேச்சு !

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” சாதி ஆணவக் கொலை என்பான்.. நான் அதை குடிப்பெருமை கொலை என்பேன் ” என மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மன்னார்குடியில் 13-12-2021 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலக் கலந்தாய்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்களின் எழுச்சியுரைhttps://t.co/UoIWXM8Zf5
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) December 14, 2021
நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி மன்னார்குடியில் 13-12-2021 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த மண்டலக் கலந்தாய்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றி இருந்தார்.
1 மணி நேரம் நடைபெற்ற சீமான் உரையில் 23.50வது நிமிடத்தில், ” அண்ணன் வருவதற்கு முன்பாக தொலைக்காட்சியில் லைவ் என்று தான் இருக்கும், இப்போது தான் நேரலை என்று போடுகிறார்கள். அண்ணன் வருவதற்கு முன்பு பிரச்சாரம் தான், இப்போதான் பரப்புரை எனப் போடுகிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது, திரும்ப திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தா எல்லாம் சரியாகிவிடும்.
சாதி ஆணவக் கொலை, சாதி ஆணவக் கொலை என்பான்.. நான் அதை குடிப்பெருமை கொலை என்பேன் ஏனா, சாதி தமிழ் இல்லை, தமிழனுக்கு சாதி இல்லை. நாங்கள் குடிகள் தான் ” எனப் பேசி இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி தரப்பில் சாதி என்பதற்கு பதிலாக குடி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதி ஆணவக் கொலை என்பதை குடிப்பெருமை கொலை எனக் கூறியதன் மூலம் சீமானின் பேச்சு சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்று வருகிறது.