‘எல்லோரும் மருத்துவரானால் எப்படி.. தற்சார்பு விவசாயத்திற்கு வாருங்கள்’ என்று படிக்கும் இளைஞர்களை திசை திருப்பும் சீமான் !

உண்மையில் தற்சார்பு விவசாயம் சாத்தியம் தானா? ஒரு மாநிலத்தின் சரியான வளர்ச்சியை எது தீர்மானிக்கும் ? ஓர் அலசல் !

தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஜனவரி 27 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆடு மாடு மேய்க்க சீமான் கூப்பிடுவான் போய் விடாதே. நீ டாக்டராக தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். எல்லா பயல்களும் டாக்டராக மாறுங்கள். ஒரு நோயாளியும் வர மாட்டான். டாக்டர்கள் வேலை இல்லாமல் மாறுவார்கள், அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் ஊசி போட்டு தான் விளையாடிக்கொள்ள வேண்டும். பைத்தியக்கார பயலே எல்லாரும் டாக்டரானால் நோயாளி யாருடா. சரி எல்லா பயல்களும் டாக்டராக மாறிவிடு. அப்போ சோத்துக்கு என்ன செய்வ ? மாத்திரையை போட்டு படுத்திருவியா ? உலகில் எல்லா பயல்களுக்கும் சோறு நான் தான் போட வேண்டும்” என்று பேசியிருந்தார். அவர் இது குறித்து பேசிய வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.

தேவைக்கு அதிகமான மருத்துவர்கள் இருக்கிறார்களா?

ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கடந்த 2023 டிசம்பர் 12 அன்று ராஜ்யசபாவில் பேசுகையில், இந்தியாவில் 834 மக்களுக்கு 1 மருத்துவர் உள்ளதாகக் கூறினார். ஆனால் இந்த எண்ணிகை அல்லோபதி மருத்துவர்களோடு, 5.65 லட்சம் ஆயுஷ் (AYUSH) மருத்துவர்களையும் சேர்த்து கணக்கிடப்பட்ட விகிதமாகும். இதில் ஆயுஷ் மருத்துவர்களை தவிர்த்து, அல்லோபதி மருத்துவர்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் கணக்கிட்டால் இந்த விகிதம் கணிசமாகக் குறையும்.

15-வது நிதி ஆணையம் கொடுத்த தகவலின் படி, 1511 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற விகிதத்தில் மருத்துவர் எண்ணிக்கை உள்ளதாகவும், 670 பேருக்கு ஒரு செவிலியர் உள்ளனர் என்றும் தெரிவித்தது. இவை இரண்டும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள அளவுகளை விட குறைவு தான். 1000 பேருக்கு ஒரு மருத்துவர் மற்றும் 300 பேருக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.

AYUSH மருத்துவர்கள் ‘மருத்துவர்களா’ ?

ஆயுர்வேதா (A), யோகா (Y), யுனானி (U), சித்தா (S), மற்றும் ஹோமியோபதி (H) ஆகிய ‘மாற்று மருத்துவ’ முறைகளை கையாள்பவர்கள் AYUSH ‘மருத்துவர்கள்’ என்று ஒன்றிய அரசிடம் அங்கீகாரம் பெற்றுள்ளனர். இது குறித்து ‘அறிவியல் முறை மருத்துவம்’ (Science Based Medicine) பார்க்கும் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, AYUSH ‘மருத்துவர்கள்’ தங்களுக்கு MBBS மருத்துவர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்று வழக்கு தொடுத்த போது உச்ச நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்தது.

அவ்வாறு நிராகரித்த போது, அல்லோபதி (science-based medicine) மருத்துவர்கள் செய்யும் அறிவியல் மருத்துவம், அது கண்டிருக்கும் வளர்ச்சி, அதன் மூலம் அளிக்கப்படும் மருத்துவம் ஆயுர்வேத (AYUSH) மருத்துவர்களால் முடியாது என்று குறிப்பிட்டது.

ஏன் மருத்துவர்கள் தேவை ?

பல்வேறு சுகாதாரக் குறியீடுகளில் இந்தியா வளர்ந்த நாடுகளை விட பின் தங்கியுள்ளது. பிறந்த குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate), பிரசவிக்கும் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் (Maternal Mortality Rate), சராசரி ஆயுள் (average life span), பொதுவான ஆரோக்கியம் என்று அனைத்து பகுதிகளிலும் இந்தியா இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. ஒப்பீட்டளவில் தமிழ்நாடு இவை அனைத்திலும் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. சில குறியீடுகளில் உலக நாடுகளுடன் ஒப்பீடும் அளவிற்கு இருந்தாலும், அவற்றை மிஞ்சும் அளவிற்கு இன்னும் வரவில்லை. அதற்கு தேவையான அனைத்து மருத்துவர்கள், மருத்துவ கட்டமைப்பு, செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த துறைகள் என அனைத்து தரப்பிலும் வளர்ச்சி அடைய வேண்டியுள்ளது.

அனைவரும் மருத்துவர் ஆகிவிட முடியுமா ?

கடந்த ஆண்டு (2023), இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு (MBBS / BDS) மட்டும் 1,40,000 இடங்கள் இருந்துள்ளது. இதற்காக மாணவர்களிடமிருந்து மொத்தமாக 20,80,000 விண்ணப்பங்கள் வந்தது. சராசரியாக, மருத்துவம் படிக்க போட்டியிடும் 15 பேரில் ஒருவர் தான் மருத்துவர் ஆக முடியும். மேலும் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் NMC பரிந்துரைகளின் படியும் அனுமதிக்கும் அளவின் படியுமே இருக்கும். எனவே சீமான் கூறியது போல, “எல்லா பயல்களும் டாக்டராக ஆக மாறினால், யாரு நோயாளியாக இருப்பது?” என்கிற கூற்றுகள், தவறான புரிதல்களுடன் உள்ளவை.

மருத்துவ படிப்பில் சேர முடியாத மாணவர்களில் கணிசமான அளவு மாணவர்கள் B.Pharm, Pharm D, Bio technology, Microbiology என்று ஏராளமான படிப்புகளில் ஏதாவது ஒரு படிப்பில் சேர்கின்றனர். அதன் மூலம் மருத்துவ துறைக்கு துணை புரியும் Allied Industriesம் வளர்ச்சி அடைகிறது. இது மருத்துவ துறையை, அதன் கட்டமைப்பை மேலும் உறுதியாக்கும்.

தற்சார்பு விவசாயம் என்றால் என்ன ?

சீமான் ஓவ்வொரு மேடையில் கூறும் போதும், நான் முதலமைச்சரானால், படித்த இளைஞர்களையும், படிக்காத இளைஞர்களையும் ‘தற்சார்பு விவசாயம்‘ நோக்கி அழைத்து செல்வேன் என்றும், விவசாயத்தையும் அதனை சார்ந்துள்ள வேலைகள் அனைத்தையும் அரசு வேலையாக மாற்றுவேன் என்றும் கூறுகிறார். விவசாயத்தில் தற்சார்பு என்றால் அனைத்து உணவு தேவைகளுக்கும் தேவையான பொருட்களை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்வது. விவசாயம் சார்ந்த பொருட்கள் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வாங்காமல் இருப்பது.

தற்சார்பு விவசாயம் சாத்தியம் தானா ?

முதலில், தமிழ்நாடு தனி நாடு அல்ல. இந்திய நாட்டின் ஒரு மாநிலம். எனவே, தற்சார்பு விவசாயம் என்றால் தேசிய அளவிலா அல்லது மாநில அளவிலா? தேசிய மாநில அளவில் என்றால் தமிழ்நாடு என்கிற ஒரு மாநிலம் எப்படி இந்தியா முழுமைக்குமான பொருளாதார கொள்கையை முடிவு செய்ய முடியும்?

மாநில அளவில் என்றால் அடுத்த கேள்வி எழுகிறது. இன்று நமக்கு தேவையான பல விவசாயம் பொருட்கள் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் இருந்து வருகின்றன. இங்கு விளைவிக்கும் பொருட்களும் அங்கு செல்கின்றன. அப்போது இவை அனைத்தும் தடை செய்யப்படுமா? அது சாத்தியமா, நடைமுறைப்படுத்த முடியுமா, அதற்கான அதிகாரங்கள் முதலில் மாநில முதலமைச்சருக்கு உண்டா என்பதைப்பற்றி கூட மறந்துவிடுவோம். அவ்வாறு தடை செய்தால், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் விளைய வைக்க முடியுமா? அதற்கான தட்ப வெப்ப நிலை முதலில் உள்ளதா?

தற்சார்பு விவசாயம் மட்டும் குறிக்கோளா? அல்லது தற்சார்பு பொருளாதாரமா? தற்சார்பு பொருளாதாரம் என்றால் அதில் டிராக்டர்கள், அறுவடை செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுமா? அவ்வாறு பயன்படுத்தினால் அவை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமா? இறக்குமதி செய்து கொள்ளலாமே என்றால், அது விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு மட்டும் அந்த அனுமதியா? அல்லது அனைத்திற்குமா? செல்போன், கணினி, வாகனங்கள், இரும்பு, ரப்பர், பிளாஸ்டிக் என்று விவசாய பொருட்கள் தவிர அனைத்தும் இறக்குமதி செய்தால் அது எப்படி தற்சார்பு பொருளாதாரம் ஆகும்?

Supply Chain:

இயந்திரமயமாக்கல் (Industrialization) மற்றும் உலகமயமாக்கல் (Globalization) போன்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்தே இன்று அனைத்து நாடுகளும் இயங்குகின்றன. அதே போல் தான் நிறுவனங்களும் இயங்குகின்றன. ஒரு சாதாராண பைக் (இரு சக்கர வாகனம்) வேண்டும் என்றால் அதற்கு எஞ்சின் செய்ய அலுமினியம் வேண்டும், பாகங்கள் செய்ய இரும்பு வேண்டும், எனவே அதற்கான சுரங்கங்கள் (mines) வேண்டும். சுரங்கத்தில் இருந்து வரும் தாதுகளை Process செய்ய தொழிற்சாலைகள் வேண்டும், அதற்கு தேவையான இயந்திரங்கள் வேண்டும். பைக்கில் இருக்கும் சக்கரத்திற்கு  செய்ய ரப்பர் தேவை. அந்த ரப்பரை சக்கரமாக மாற்ற தொழிற்சாலை தேவை. வண்டியில் இருக்கும் ஹெட் லைட் (head light), பேட்டரி, மின்சார வையர்கள் என்று நூற்றுக்கணக்கான பாகங்கள் உண்டு. அவை அனைத்தையும் செய்ய தொழிற்சாலைகள், அவற்றை செய்வதற்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் அதனை செய்ய தேவையான தொழிற்சாலைகள் என்று பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். இவை உலகம் முழுவதும் கூட பரவியிருக்கும். இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது தான் Supply Chain Management.

நிறுவனத்தின் உற்பத்தி அளவு  பெருக பெருக, Supply Chain Management தேவை அதிகரிக்கும். அதிலும் ஒரு தொழிற்சாலையின் உற்பத்தி பல தொழிற்சாலைக்கு மூலப்பொருளாக செல்லும். ஒரு பொருள் அதிகம் தயாரிக்க தயாரிக்க அதன் உற்பத்தி விலை குறையும். இதற்கு Economies of scale என்று பெயர். Just in Time (JIT) தயாரிப்பு, Kaizen, Lean Manufacturing என்று ஏகப்பட்ட பொருளாதார மற்றும் உற்பத்தி கோட்பாடுகளை அடங்கியது தான் இன்றைய உற்பத்தி முறை.

இதில் தயாரிப்பு செலவு எங்கு குறைவாக இருந்து, அதே சமயம் வேலைத்திறன் கொண்ட (Skilled Workforce) பணியாளர்கள் கிடைத்து, ஓரளவிற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் இணை தொழிற்சாலைகள் அருகிலேயே உள்ளதோ அங்கு தான் பைக் தொழிற்சாலை அமையும். ஒரே ஒரு பைக் தொழிற்சாலைக்கே இப்படி என்றால், நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், பேன், மொபைல் போன் போன்ற பொருட்கள் ஏராளமானவை. இவை அனைத்தும் ஒரு மாநிலத்திலோ அல்லது ஒரே நாட்டிலோ இருக்க சாத்தியம் இல்லை.

இவற்றைப்பற்றி எந்த புரிதலும் இல்லாமல் அனைத்தையும் இறக்குமதி செய்துகொள்ளலாம் என்றால் அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முடியும் என்பதால் முடிந்த வரை தொழிற்சாலைகள் சொந்த நாட்டில் இருப்பது நல்லது என்று நாடுகள் கருதுகின்றன. மாநிலங்களுக்கும் இது ஓரளவிற்கு பொருந்தும். விவசாயம் அதற்கு தேவையான தொழிற்சாலைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் மூடப்படும் என்றால் அது முட்டாள்தனமாக இருக்கும்.

விவசாயத்தில் தன்னிறைவு ?

எப்படி தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை உற்பத்தி பொருட்களில் முழு தன்னிறைவு அடைவது இன்றைய நவீன அறிவியல் உலகில் சாத்தியம் இல்லையோ அதே போல் விவசாயத்திலும் முழுமையான தன்னிறைவு சாத்தியமில்லை. ஆனால், நமக்கு தேவையான உணவு பொருட்களில் பெரும்பங்கை அதிகமாக உற்பத்தி செய்து அதனை ஏற்றுமதி செய்வது, தேவையான சிலவற்றை இறக்குமதி செய்துகொள்வது என்பது சாத்தியமானது. பல நாடுகள் செய்வதும் அதைத்தான். ஆனால் அதற்காக, அனைவரும் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என்றால் அது தவறான பொருளாதார கொள்கை.

அனைவரும் விவசாயம் சார்ந்தே இருக்க வேண்டுமா ?

உலகிலேயே அதிக விவசாய பொருட்கள் ஏற்றுமதி  செய்யும் நாடு அமெரிக்கா தான். அமெரிக்காவில் 10% மக்களே விவசாய சார்ந்த தொழில்களில் வேலை செய்கின்றனர். அதற்காக அமெரிக்கா ஒரு விவசாய நாடா என்றால் அதுவும் இல்லை. அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தில் வெறும் 5% மட்டுமே விவசாயம் சார்ந்த தொழில்களில் இருந்து வருகின்றன. விவசாய ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் நெதர்லாந்து நாட்டில் வெறும் 2% மக்கள் மட்டுமே விவசாயம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். நெதர்லாந்து பொருளாதாரத்தில் வெறும் 2% மட்டுமே விவசாயம் மூலம் வருகிறது.

ஆனால், இந்தியாவில் 42% மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இந்திய பொருளாதாரத்தில் வெறும் 15% மட்டுமே விவசாயத்தின் மூலம் வருகிறது. தமிழ்நாட்டில் 27% மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். ஆனால், தமிழ்நாடு பொருளாதாரத்தில் வெறும் 6% மட்டுமே விவசாயத்தின் பங்கு உள்ளது.

ஒரே துறை ஆபத்து : 

ஒரே ஒரு துறையை நம்பி மொத்த மாநிலம் அல்லது நாட்டின் பொருளாதாரம் அமைவது மிகவும் ஆபத்தானது. எளிதில் நிலைகுலையும் தன்மையுடையது. அதனால் தான் அரசுகள் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பல துறைகளில் விரிவு (diversify) படுத்துகின்றனர்.

பொருளாதாரத்தில் கச்சா எண்ணெயின் பங்கை குறைத்து மற்ற துறைகளை பலப்படுத்த கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாய் முயன்று வருகிறது. தற்போது துபாயின் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய்யின் பங்கு பெருமளவு குறைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 70% கச்சா எண்ணெய் சாராத தொழில்கள் மூலம் வருகிறது.

சவுதி அரேபியா உள்ளிட்ட பல அரபு நாடுகளில் தற்போது சுற்றுலா, முதலீடு என்று மற்ற துறைகளை பலப்படுத்த முயற்சி செய்து வருகின்றன. மின்சார கார்கள், மின்சார பேருந்துகள், சோலார், காற்றாலைகள் என்று உலகம் மாறிக்கொண்டிருக்க கச்சா எண்ணெய் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்கள் மட்டுமே சார்ந்து இருக்க இயலாது.

இதே போல், பல நாடுகளிலும் தங்களது பொருளாதாரம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் ஒரே துறையை சார்ந்து இருக்கக்கூடாது என்பதற்காக பல முயற்சிகள் எடுத்து வருகின்றன. இந்த காலக்கட்டத்தில் விவசாயம் மட்டுமே இருக்க வேண்டும், அதற்கு தேவையான தொழிற்சாலைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது மிகவும் பிற்போக்கானது. மேலும் மனித வளத்தில் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களின் அளவு சொற்பமாகவே உள்ளன. மனித வள மேம்பாடு குறித்து UNDP வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா 130வது இடத்தில் இருப்பதும் அதன் கணக்குப்படி இந்தியாவில் 43% மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவசாயத்தை கைவிட வேண்டுமா ?

நிச்சயமாக இல்லை. எல்லா தொழில்களைப்போல் விவசாயமும் ஒரு தொழில். உணவு தேவையை பூர்த்திய செய்யும் தொழில் என்பதால் மிக மிக முக்கியத்துவம் தரப்பட வேண்டிய தொழில் தான். ஆனால், அந்த முக்கியத்துவம் விவசாயத்தில் பல புதுமைகளை (Innovation) ஏற்படுத்தி விளைச்சலை பெருக்குவது, விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு  லாபத்தை தருவது என்பதை நோக்கி இருக்க வேண்டுமே தவிர அனைவரும் விவசாயம் மட்டும் தான் செய்ய வேண்டும், விவசாயம் அன்றி வேறு தொழில்களோ தொழிற்சாலைகளோ இருக்கக்கூடாது என்றில்லை.

தற்போது விவசாயம் செய்துகொண்டிருக்கும் மக்களில் பலர் வெறும் Subsistence Farming ஆக மட்டுமே உள்ளது. அதாவது தங்களது உணவுத்தேவை மற்றும் தங்களிடம் உள்ள கால்நடைகளின் உணவுத்தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் அளவிற்கு தான் பெரும்பான்மை விவசாயிகள் உள்ளனர். விவசாயம் செய்யும் அன்றாடங்காச்சிகளாக இருக்கும் நிலையை விட்டு பலர் வெளியேறி வேறு தொழில் அல்லது வேலைக்கு மக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே செல்கின்றனர்.

விவசாயம் செய்து கொண்டிருப்பவர்கள் அந்த தொழிலைவிட்டு வெளியேறினாலும் ஒட்டுமொத்த உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொள்வதும் அது லாப கரமான தொழிலாக இருக்க தேவையான உதவிகளை செய்வதும் மட்டுமே அரசின் கடமையாக இருக்க வேண்டும். காலப்போக்கில், விவசாயம் பரம்பரை தொழில் என்றும் விவசாயக்கூலிகள் குடும்ப தொழில் என்றும் உள்ள நிலை மாறி லாபகரமான தொழிலாக மாறும் போது அந்த தொழில் மீது ஈர்ப்பு உள்ளவர்கள் அதனை தொடர்ந்து செய்வார்கள். விவசாயம் மட்டுமே இருக்க வேண்டும் என்று திணிப்பதன் மூலம் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்டுள்ள மாநிலமான தமிழ்நாடு 21ம் நூற்றாண்டில் இருந்து இயந்திர மயமாக்கலுக்கு முந்தைய (pre-industrial era) காலக்கட்டமான 18ம் நூற்றாண்டுக்கு இழுத்துச் செல்லப்படும்.

இளைய தலைமுறையினரை உயர்கல்வி நோக்கி அழைத்துச் செல்வதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது. மருத்துவத்துறை கட்டமைப்பை முன்னேற்றிக் கொண்டிருக்கும் பாதையில் செல்கிறது. ஒருபுறம் தற்சார்பு விவசாயம் என முரண்பாடான விசயத்தை முன்னிறுத்தி மறுபுறம் மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களை இழிவுப்படுத்தி சீமான் பேசி இருக்கிறார்.

எழுதியவர்கள்: கிருஷ்ணவேணி & ராமசாமி ஜெயபிரகாஷ்

ஆதாரங்கள்:

Update on Ratio of Patients and Doctors Nurses

PIB: Update on opening of new medical colleges in the country

Update on Medical Education

சீமான் எழுச்சியுரை 27-01-2024 சுரண்டை (தென்காசி) பொதுக்கூட்டம்

நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மாற்றங்கள்

Annual_Report_PLFS_2022-23

human development statistical update

State-wise Number of Factories

After pushback from South, NMC defers plan to add MBBS colleges & seats according to population

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader