கே.டி.ராகவனுக்கு ஆதரவாக சீமான் பேசினாரா ? அப்படி என்னதான் பேசினார் ?

பாஜக தலைவர் கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் குறித்த விவாதங்களும், ட்ரோல்களும் ஊடகத்திலும், சமூக வலைதளங்களில் முதன்மையாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், கே.டி.ராகவனின் வீடியோ விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய கருத்தைத் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
” உலகத்தில் யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என்பதுபோல் காட்டப்படுகிறது. அவரது தனிப்பட்ட விவகாரத்தை, அவரது அனுமதியில்லாமல் ரெக்கார்ட் செய்து வெளியிட்டதுதான் சமூக குற்றம் ” என சீமான் கருத்து தெரிவித்ததாக செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
சீமான் பேசியதாக செய்திகளில் வைக்கப்பட்ட தலைப்புகளை மையமாக வைத்து சீமான் கே.டி.ராகவனிற்கு ஆதரவு தருவதாக சமூக வலைதளங்களில் ட்ரோல் பதிவுகள் மற்றும் மீம்களை பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
என்ன பேசினார் :
சீமானிடம் செய்தியாளர் ஒருவர் பாஜகவின் கே.டி.ராகவன் வீடியோ, அதைத் தொடர்ந்து அண்ணாமலையின் ஆடியோ இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கையில், ” அதையெல்லாம் விடுங்க.. அதெல்லாம் சமூக குப்பை. இதை போய் எடுத்து பேசிகிட்டு இருக்கிறது எல்லாம்… இதில் எது அநாகரிகம் எனப் பாருங்கள். அவருடைய அனுமதி இல்லை, அவருடைய ஒப்புதல் இல்லை, அவருக்கு தெரியாமல் அவருடைய படுக்கை அறையில், கழிவறையில் போய் கருவி வச்சு எடுத்துட்டு வருவது என்பது, அதுதான் சமூக குற்றம். முதலில் அவரை தான் கைது பண்ணி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் இல்லையா. உலகத்தில் எங்குமே நடக்காத ஒன்றை அவர் செய்து விட்டார் என நீங்க காட்டிட்டு இருக்கீங்க. சட்டசபைக்குள் வச்சுக்கிட்டு ஆபாச காட்சிங்களை பாத்துகிட்டு இருந்தாங்க.. பொறுப்பில் இருப்பவர்கள் அதெல்லாம் செய்யக்கூடாது. அவர் தனிப்பட்ட முறையில் அவரோட அறையில்.. அதை எடுத்து வச்சுக்கிட்டு, அவர் அப்படி பண்ணிட்டார் அவர் அப்படி பண்ணிட்டாருனு… கேடுகெட்ட சமூகமாக மாறிடுச்சோன்னு பயம் இப்போ வருத்துல..
யார் யாரோட பேசுறது, யார் என்ன பேசுறாங்கனு ஒட்டு கேட்குறது, அதை பதிவு பண்ணி வெளிய விடுறது. இதனால் என்ன சாதிக்க முடியும் என நினைக்குறாங்க, என்ன வந்துற போது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது அரசு. அதை பேசவில்லை, 100 லட்சம் கோடி மதிப்பில் வேலைவாய்ப்பு நல திட்டத்திற்கு முதலீடு செய்யப் போவதாக சொல்லுறாரு. ஆனால், 6 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடப் போவதாக சொல்கிறார்கள். 100 லட்சம் கோடி இருக்கும் போது 6 லட்சம் கோடிக்கு விட வேண்டிய அவசியம் என்ன. அவையெல்லாம் தான் பிரச்சனை.
ரமணா என்கிற உச்சநீதிமன்ற நீதிபதி பேசுறார் பாருங்கள். எந்த விவாதமும், தர்க்கமும் நடத்தாமல் சட்டங்களை இயற்றிக் கொண்டே போகிறார்களே, இது எங்க போய் நிக்க போகிறது என்கிறார். நீங்கள் அதற்கு தான் பயப்படணும். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா என்ன சொல்றார்னா , நான் 20 ஆண்டுகளை பார்த்திருக்கிறேன், ஆனால் எந்த தர்க்கமும் இல்லாமல் 36 சட்டங்களை இயற்றி இருக்கிறது. நீங்கள் எல்லாம் யாரு கேட்பதற்கு, நாங்கள் இயற்றுவோம்னு. அது எல்லாம் தான் கொடுங்கோன்மை. சர்வாதிகாரம் அல்ல, கொடுங்கோன்மை. அதைத்தான் பேச வேண்டும். அவர் ஏதோ ஆடியோ வெளியிட்டார், வீடியோ வெளியிட்டாருனு, ஏன் பார்க்குறீங்க, யார் பார்க்க சொன்னது. அவர் எடுத்து வெளியிட்டு உங்களை பார்க்க சொன்னாரா, பார்த்து ரசிங்க என்று. என்னது இது.. காலக்கொடுமை ” என பேசி இருக்கிறார்.
சீமான் பேசியதை முழுமையாக பார்க்காமல், கே.டி.ராகவன் பற்றி பேசியதாக 2 வரியில் செய்தி வந்ததை பரப்புவதாக நாம் தமிழர் கட்சியினர் சீமான் பேசும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
Link :