இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகளாக மாறி விட்டனர் – சீமான்

மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில், காவல்துறையானது சம்பவம் நடந்த 77 நாட்களுக்கு பிறகு முக்கிய குற்றவாளியான ஹீரும் ஹேரா தாஸ் (32) என்பவரை கைது செய்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமீப காலமாகவே அனைவரின் பார்வையும் மணிப்பூர் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறியதாகக் கூறி மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுகளைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (ஜூலை 30) நடைபெற்றது.
மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 02 மணிக்கு
இடம்: வள்ளுவர் கோட்டம் சென்னை#NTKDemandsJustice_4ManipurViolence
நேரலை: https://t.co/qR1DooaStR pic.twitter.com/EirByNUhVy
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) July 30, 2023
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து சீமான் பேசிய சர்ச்சை பேச்சுகள்:
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பேசிய சீமான், “கலவரம் ஆரம்பித்து 76வது நாளில் பேசுகிறீர்கள். 76 நாட்கள் என்ன பண்ணிக்கொண்டு இருந்தீர்கள். எதனால் பேசவில்லை. தேர்தல் வருகிறது. அதனால் இதைப் பற்றி பேச வேண்டிய தேவை வருகிறது. அங்கே 36 கட்சி கூட்டணி, இங்கே 26 கட்சி கூட்டணி.
மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டுப் போட போவது இல்லை. இங்க இருக்கிற கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடுவது இல்லை. நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் சேர்ந்தவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளா மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது. சும்மா தேவரே தேவரே என்று பாடிக்கொண்டு இந்த நாட்டைப் போய் வேற யாருக்கோ கொடுத்துவிட்டார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கிற அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியது இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் தான்.
தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 விழுக்காடு வாக்குகளை திமுகவிற்கு, காங்கிரசிற்கு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டது இவர்கள் தான். சகிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம் உருவாக காரணம் இவர்கள் தான். இவர்கள் கிட்ட போயி பாவத்தை மன்னியுங்கள் என்று கொடுக்க வேண்டியது. பெரும் பாவமே இவர்கள் தான். பின்பு அவர்கள போயி எங்கு மன்னிப்பார்கள்.” என்று பேசியுள்ளார்.
நாட்டில் நடக்குற பிரச்சனைகள் அனைத்திற்கும் முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் மட்டுமே காரணம் என்ற விதத்தில் சீமான் கூறுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஆவணங்களும் மத அரசியல் தான் பேசுகிறதா ?
கடந்த 2012 மே 18 அன்று நாம் தமிழர் கட்சியின் திட்டங்கள், கட்சி முழக்கங்கள் மற்றும் கொள்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை நாம் தமிழர் கட்சி வெளியிட்டது. அதிலும் தற்போது சீமான் ஆர்பாட்டத்தில் பேசியுள்ளது போன்று, கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் தமிழியத்திற்கு முரணாக இருப்பது குறித்து முரண்பாடுகள் எனும் தலைப்பின் குறிப்பிட்டுள்ளதைக் காண முடிந்தது.
குறிப்பாக மூன்றாவது முரண் என்று குறிப்பிட்டுள்ள பகுதியில், கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர் என்று சர்ச்சையாக குறிப்பிட்டுள்ளனர். இது அப்போதே பெரிய எதிர்ப்பையும், கண்டனத்தையும் சந்தித்தது.
எனவே இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களிடம் பேசினோம்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறித்து சீமான் பேசியது தொடர்பாக கேட்கையில், பாஜகவைக் காரணம் காட்டி சிறுபான்மையினர் வாக்குகளை காங்கிரஸ், திமுக பெறுகிறது. திமுகவையும், காங்கிரசையும் அதிகாரப்படுத்துவது இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் தான். தற்போதைய நிலையிலும் வாக்கு கேட்டு வந்தாலும் மறுபடியும் அவர்களுக்கே வாக்கு செலுத்துவார்கள். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவித்தால், திமுகவிற்கு நாங்கள் கூட வாக்கு செலுத்துகிறோம் என அண்னன் சீமான் கூறினார். இஸ்லாமியர்களுக்காக இப்படியொரு நிலைப்பாட்டை அண்ணன் சீமான் முன் வைக்கும் போது, அந்த கருத்தை முன் வைக்காமல், பேசாமல் திட்டமிட்டு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு வந்துவிட கூடாது என்பதற்காக அதை திரித்து பரப்புகிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.
அதேபோல், 2012 நாம் தமிழர் கட்சியின் ஆவணம் குறித்து கேட்கையில், “2012ல் ஆன்றோர்கள் உருவாக்கிய ஆவணத்தில் அப்படியொரு வாக்கியம் இருந்துள்ளது. அந்த ஆவணம் வெளியான போது அப்படியொரு விசயம் இருப்பதை அறிந்து அதை திரும்பப் பெற்றுக் கொண்டோம்” எனத் தெரிவித்து இருந்தார்.
இதன் மூலம் நாம் தமிழர் கட்சியினர் கடந்த 2012 மே 18 அன்று வெளியிட்ட ஆவணத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து அரசியல் பேசியிருப்பது உண்மை என்பதையும், பின்னர் அவர்கள் இந்த ஆவணத்தை திரும்ப பெற்றுக் கொண்டதன் விளைவாக, அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து இந்த ஆவணம் நீக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.