தமிழர்களுக்கு வெளிமாநிலத்தில் இடஒதுக்கீடு உண்டா ?

கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில், “குடிவாரி (சாதிவாரி) கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்றும், மொழிவாரி கணக்கெடுப்பின் மூலம் தமிழ் நிலத்தில் தமிழர் நாங்கள் எவ்வளவு மக்கள் இருக்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டுமென பேசி இருந்தார். “நீண்ட காலமாக இந்த நிலத்தை ஆண்ட அவர்கள் இந்த நிலத்தின் பூர்வ குடிகள் அல்ல, வந்தவன் போனவன் எல்லாம் இடஒதுக்கீட்டை அனுபவிக்கிறான்”. அதுமட்டுமின்றி Denotified Communities-ல் 63 குடிகள் இருக்கு, அதில் 5 குடிதான் தமிழ் குடி. அந்த இடஒதுக்கீட்டை அனுபவிப்பது யாரு ? என பேசி இருந்தார்.

இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர், “கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறது” என்றும், “ஆந்திராவில் அமைச்சராக உள்ள ரோஜா தமிழ் முதலியார்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார்” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இது குறித்து அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா என யூடர்ன் மேற்கொண்ட ஆய்வு பின்வருமாறு :

ஆந்திரா :

ஆந்திராவில் பிசி மற்றும் சிறுபான்மையினருக்கு 29 சதவீதமும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு முறையே 15 மற்றும் 6 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆந்திர பிரதேசத்தின் நர்சிபட்னம் வருவாய் துறை அதிகாரி கே.சூர்யா ராவை தொடர்புகொண்டு பேசிய போது, 7 முதல் 10 வருடங்கள் ஒரு குடும்பத்தினர் ஆந்திராவில் வசிக்கும் பட்சத்தில் முதலில் அவர்களுக்கு இருப்பிட சான்று மற்றும் குடும்ப அட்டை மாற்றப்படும். பின்னர், அவர்களது சாதி ஆந்திராவில் என்னவாக கருதப்படுகிறது என அரசு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி சாதி சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறினார்.

ஒரு குடும்பத்தினர் தெலுங்கானாவில் இருந்து ஆந்திராவிற்கு குடிபெயர்ந்து 10 வருடங்களுக்கு பிறகு தங்களது மகனின் கல்விக்காக சாதி சான்றிதழை பெற முயற்சிக்கையில், யாருக்கு சாதி சான்றிதழ் வாங்கப்படுகிறதோ அவர் ஆந்திராவில் பிறந்தவறாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சீமான் செய்தியாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்வியான “ஆந்திராவில் அமைச்சர் ரோஜா முன்னெடுத்து தமிழ் முதலியார்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது” என்பது உண்மையா என வருவாய்த்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு, அவ்வாறு எந்த இடஒதுக்கீடும் இல்லை என குறிப்பிட்டார்.

ஆந்திர மாநிலத்தின் ஓபிசி பிரிவில், அக்னிகுல சத்திரியா, வன்னிகுல சத்திரியா, அகமுடையார், செங்குந்தர், வன்னியர், வண்ணார் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெற்று உள்ளன.

தெலுங்கானா :

தெலுங்கானாவில் ஓபிசியை 5 பிரிவுகளாக கொண்டு முறையே 7, 10, 1, 7 மற்றும் 4 சதவீதமென மொத்தம் 29 சதவீதமும், எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்டி பிரிவினருக்கு 6 சதவீதமும் மற்றும் EWS-க்கு 10 சதவீதமும் என இடஒதுக்கீட்டு முறையை கொண்டுள்ளது. குடிபெயர்ந்தவர்களை பொருத்தமட்டில் ஆந்திராவை போலவே தெலுங்கானாவிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக தெலுங்கானாவின் கொருட்லா பகுதியின் வருவாய்த்துறை அதிகாரி டி.வினோத் குமார் கூறினார்.

தெலங்கானாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் அக்னிகுல சத்திரியா, அகமுடையார், அகமுடைய முதலியார், அகமுடைய வெள்ளாளர், வண்ணார், செங்குந்தர் ஆகியவை பிரிவு டி-யில் இடம்பெற்று உள்ளன. பிரிவு டி-யில் உள்ள 47 சமூகத்தினருக்கும் சேர்ந்து 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

கேரளா :

கேரளாவில் ஓபிசி பிரிவினருக்கு 40 சதவீதமும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு முறையே 8 மற்றும் 2 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் வேறு மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு ஏதேனும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா என கேரளாவின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பிரிவின் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசினோம். 1950-க்கு முன்னதாக கேரளாவில் குடிபெயர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு இருப்பதாகவும், சமீபத்தில் குடிபெயர்பவர்களுக்கு அவ்வாறு இல்லை எனவும் கூறினர்.

கர்நாடகா மாநிலம் :

கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறதா எனத் தேடினோம். அதில், அகமுடி, அம்பலக்காரன், கள்ளர், மறவர், வேடன், வண்ணான், நாடார், வன்னியர், வன்னிகுல சத்திரியா, அக்னிகுல சத்திரியா, கம்பர் மற்றும் கணியர் போன்ற சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்பதை அறிய முடிந்தது.

தமிழ்நாடு :

சீமான் கூறியதை போல வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள தாசில்தார் ஒருவரை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர் கூறியதாவது, ” வேறு மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு குடியேறும் ஒருவர் ஒரு வருடம் இங்கு வசித்த பின்னர் இருப்பிட சான்றும், 5 வருடத்திற்கு பின்னர் தங்களது சொந்த ஊரில் உள்ள குடும்ப அட்டையை ரத்து செய்துவிட்டு தமிழகத்தில் குடும்ப அட்டைக்கும் விண்ணப்பிக்க வேண்டும். போதிய முகாந்திரம் இருப்பின் குடும்ப அட்டை அளிக்கப்படும் என்றும், இதன் பின்னர் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.

அவர்களது சொந்த மாநிலத்தில் எந்த பிரிவில் இடஒதுக்கீடு பெற்றார்களோ, அதனை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் இடஒதுக்கீடு, அதாவது சாதி சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கென தமிழக அரசு சட்ட திட்டங்களையும், நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. ஒரு மாநிலத்தில் இந்த சாதியப் பிரிவில் இருப்பவர்கள் தமிழகத்தில் இந்த சாதிய பிரிவின் கீழ் வருவார்கள் என அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்  ” என அவர் கூறினார்.

மேலும், Denotified Communities 63 எனச் சீமான் பேசியது தவறு. Denotified Communities என அரசு அங்கீகரித்து இருப்பது 68. மேலும் அதில் 5 மட்டுமே தமிழ் சாதிகள் எனப் பேசியுள்ளார். சீர்மரபில் உள்ளவர்களை எதன் அடிப்படையில் தமிழ் சாதிகள் என வகைப்படுத்துகிறார் என்பது விளங்கவில்லை.

ஒவ்வொரு மாநில அதிகாரிகளிடம் பேசியதில் இருந்து ஒருவர் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்தில் சென்று உடனடியாக இடஒதுக்கீடு உரிமையினை பெற்றுவிட முடியாது என்பது தெளிவாகிறது. சட்ட விதிகளை பின்பற்றியே புலம் பெயர்ந்தவர்களுக்கு சாதி சான்றிதழ் கொடுக்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

Update :

கர்நாடகாவில் ஓபிசி பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என முன்பு இக்கட்டுரையில் தவறாகக் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், அங்கும் ஓபிசி பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது என்பதை திருத்தி எழுதி உள்ளோம்.

link : 

https://bcdd.kerala.gov.in/en/reservation/employment-reservation/

https://www.tspsc.gov.in/FAQ.jsp

2015BCW_MS16

andra

caste list.new (1)

2015BCW_MS16 (1)

Please complete the required fields.
Back to top button
loader