காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் எந்தத் தொகுதியில் வருகிறது ?

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருந்தார். ஆனால், திடீரென திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
அதற்கு காரணம், ” எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கு களமிறங்கி இருக்கிறேன். அங்கு 350 ஏக்கர் நிலத்தை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அதானிக்கு கொடுத்துள்ளனர். இங்கு புதிதாக எதையும் தொடங்க முடியாது. ஆனால், விரிவாக்கம் செய்துக் கொள்ளலாம் என ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதற்காக 6,111 ஏக்கரில் கடலுக்குள் 2,000 ஏக்கர், நிலத்தில் 2,000 ஏக்கர், நதியில் 2,000 ஏக்கர் என துறைமுக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதானி வந்துவிட்டால், மற்ற துறைமுகங்களை மூடிவிடுவார்கள். இதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் போட்டியிடுகிறேன்.
மேலும், சாம்பல் மேடுகளால் மக்கள் வாழவே முடியாத பகுதியாக எண்ணூர் மாறிவிட்டது. அங்கு நாம் நின்று சத்தம் போட்டால்தான் சரியாகும் என முடிவெடுத்தேன் ” என சீமான் கூறியதாக பிபிசி செய்தி கட்டுரை வெளியிட்டு இருத்தது.
வாகனத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட சீமான், அனல் மின் நிலையத்தால் உருவாக்கும் உலர் சாம்பலை கொட்டி மக்களின் வாழ்வாதாரமும் போய், வாழ்விடமும் போய் கொண்டிருக்கிறது. காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்க பணிகள் ஆகியவற்றிற்காக எதிராக சமரசம் இல்லாமல் சண்டை செய்வதற்காக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறி இருக்கிறார்.
அதானி துறைமுகம் உள்ள காட்டுப்பள்ளி பகுதியானது மீஞ்சூர் ஒன்றியத்தில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. அது தனித் தொகுதியாகும்.
காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிராக கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன போராட்டங்கள், இணையவழி ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இணையதள பதிவுகளில் பொன்னேரி தொகுதி என்றேக் கூறப்பட்டுள்ளது.
சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக அளித்த விளக்கத்தை செய்தி நிறுவனங்களும் பதிவிட்டு வருகின்றன. ஆனால், காட்டுப்பள்ளி பகுதி பொன்னேரி தொகுதியின் கீழ் வருகிறது. அது தனித் தொகுதி என்பதால் சீமானால் அங்கு போட்டியிடவும் முடியாது.
சத்தியமா அரசியல் இல்லை!!!! pic.twitter.com/3MiATDwqCN
— Rajiv Gandhi (@rajiv_dmk) March 10, 2021
இந்நிலையில், அதானி துறைமுகத்தை எதிர்ப்பதாகக் கூறி பக்கத்து தொகுதியில் ஏன் போட்டியிடுகிறார் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தியுடன் கூட ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
தனித்தொகுதியான பொன்னேரியில் எல்லோரும் போட்டியிட முடியாது என்பதையும், பொன்னேரி தொகுதிக்குள் திட்டம் வந்தாலும் அதன் பாதிப்பு முழுமையாக திருவொற்றியூர் பகுதிக்குள் இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள பகுத்தறிவு தேவையில்லை. அடிப்படை அறிவே போதும் திருவாளர் அறிவு நாணயம்! @rajiv_dmk https://t.co/FzMNNGS4rT
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) March 10, 2021
இதற்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக், ” தனித்தொகுதியான பொன்னேரியில் எல்லோரும் போட்டியிட முடியாது என்பதையும், பொன்னேரி தொகுதிக்குள் திட்டம் வந்தாலும் அதன் பாதிப்பு முழுமையாக திருவொற்றியூர் பகுதிக்குள் இருக்கும் ” என ராஜீவ் காந்தி ட்வீட்டிற்கு பதில் அளித்து இருக்கிறார்.
சீமான் பிபிசி-க்கு கூறியதில் ஒரு தகவல்பிழை உள்ளது.” 350 ஏக்கர் நிலம் கருணாநிதி ஆட்சி காலத்தில் அதானிக்கு கொடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தவறான தகவல். காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் 2008ஆம் ஆண்டு லார்சன் & டர்போ நிறுவனத்துக்கு குத்தகைக்கு மட்டுமே விடப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தான் அதானிக்கு கை மாற்றப்பட்டுள்ளது.
Link :
Adani Ports gets TN nod to buy Kattupalli port from L&T