This article is from Jan 11, 2019

ஏரியில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் தமிழக அரசு | மக்கள் கடும் எதிர்ப்பு.

வாழ்விடங்கள் இன்றி ஏழ்மையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசின் சார்பாக வீட்டு வசதி செய்து தருவது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. அதற்காக குடிசைமாற்று வாரியம் அமைக்கப்பட்டு அதிக வீடுகள்  கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வீடு இல்லாத மக்களுக்கு வழங்கப்படுகிறது.

மக்களின் வாழ்விற்காக அவ்வாறு அமைக்கப்படும் அடுக்குமாடி கட்டிடங்கள் பாதுகாப்பற்ற பகுதியில் அமைந்தால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாகி விடாதா ?. அப்படியொரு ஆபத்தான பகுதியில் மக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை தமிழக அரசு விரைவாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆம், தமிழக அரசின் குடிசைமாற்று வாரியம் ஏரிப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி வருகின்றது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேலத்தாம்பட்டியில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரிப் பகுதியில் தமிழகத்தின் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 43 கோடி மதிப்பில் 496 எண்ணிக்கை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டம் கொண்டு வந்துள்ளனர். இதற்கான நவம்பர் 18-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டத்தின் பணிக்காக 4 அடி ஆழத்தில் குழிகள் தோண்டும் பொழுது நீர் ஊற்று வெளியாகி தண்ணீர் நிரம்பி குழியை மூடியுள்ளது. ஏரிப் பகுதி என்பதால் சில அடிகளிலேயே நிலத்தடி நீர் நிறைந்து உள்ளது. ஆகையால், அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி போராடவும் செய்தனர். இதேபோன்று ஆழ்துளை கிணறுகள் அமைக்க முற்பட்ட போதும் சில அடிகளிலேயே தண்ணீர் வெளிப்பட்டு உள்ளது.

சேலத்தாம்பட்டி ஏரிப் பகுதியில் அரசின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைவதற்கு மக்களும், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டங்களும் நடந்து கைதும் செய்துள்ளனர். ஆட்சியரிடம் மனுவும் அளித்து வருகின்றனர்.

நீர்நிலை பகுதியில் கட்டிடங்கள் கட்டுவது மிகவும் ஆபத்தானவை. எனினும், தமிழக அரசு ஏரிப் பகுதியில் 490  குடியிருப்பு கொண்ட அடுக்குமாடி கட்டிடங்களை கட்ட உள்ளது. ஏற்கனவே உள்ள குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதியில்லை, கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன, கழிவுநீர் வடிகால் வசதி சரியில்லை என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறி வருகின்றனர்.

நீர்நிலை பகுதிகள் அமைந்து இருந்த இடங்களில் குடியிருப்பு மண் பரிசோதனை செய்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு ஏற்றதா என உறுதி அளிக்க வேண்டும் என்பது நீண்ட கால விதிகள். ஆனால், சேலத்தாம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் கட்ட அரசு தீவிரம் காட்டி வருகிறது. கட்டுமான பணிக்காக ஏரியில் மண்ணை நிரப்பும் பணியும் நடைபெறுகிறது என்பது வேதனை.

சென்னை மவுலிவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த போது பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீர்நிலைகள் இருந்து பின்பு மறைந்த பகுதிகள் நீர்நிலையாக இல்லாமல் இருந்தாலும் அங்கு கட்டிடங்கள் கட்டுவது ஆபத்தில்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் அதுபோன்ற பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஆனால், சேலத்தாம்பட்டியில் ஏரிப் பகுதியில் நீர்நிலையை மூடி அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி ஐ.ஏ.எஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதால், மக்கள் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

Please complete the required fields.




Back to top button
loader