‘செங்கோல்’ : அதிகார மாற்றம், சர்ச்சை, கட்டுக்கதை.. ஓர் விரிவான அலசல் !

திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பாக இந்தியா சுதந்திரம் அடைந்த போது அதிகார மாற்றத்தின் அடையாளமாக நேருவிடம் செங்கோல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றிய அரசு புதிதாகக் கட்டியுள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த செங்கோல் நேருவிடம் அளிக்கப்படுவதற்கு முன்பாக கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டனிடம் அளிக்கப்பட்டு பின்னர் நேருவிடம் அளிக்கப்பட்டதாக ஒரு தரப்பினரும், அது பொய் என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

ஒன்றிய அரசு ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தினை நாளை (மே, 28ம் தேதி) சாவர்க்கர் பிறந்தநாளன்று பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இக்கட்டிடத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 24ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்திலும், மக்களவை சபாநாயகர் மேடைக்கு அருகில் செங்கோல் வைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த செங்கோலுக்கான வரலாறு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியர்களுக்கு ஆட்சியைக் கைமாற்ற எம்மாதிரியான நிகழ்வு பின்பற்ற உள்ளது என்ற கேள்வியினை மவுண்ட்பேட்டன் நேருவிடம் கேட்டார். நேரு, ராஜாஜியிடம் இது குறித்துக் கேட்க; அவரோ, சோழ மன்னர்கள் தங்கள் ஆட்சியை ஒரு மன்னரிடமிருந்து மற்றொரு மன்னருக்கு மாற்றச் செங்கோலினை ஒரு அடையாளமாகப் பயன்படுத்தினர்.

எனவே, ராஜாஜி திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல, அவரும் சென்னை உம்மிடி பங்காரு செட்டி ஜுவல்லர்ஸ் மூலம் செங்கோலினை செய்து பெற்றார். பின்னர் சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14ம் தேதி ஆதீனம் மடத்தின் இளைய மடாதிபதி குமாரசாமி தம்பிரான், ஓதுவார் மாணிக்கம் மற்றும் நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் டெல்லி சென்றனர். அவர்கள் மவுண்ட்பேட்டனிடம் செங்கோலினை கொடுத்துத் திரும்பப் பெற்று, பிறகு நேருவிடம் அளித்தனர். இம்மாதிரி நாட்டின் ஆட்சி மாற்ற நிகழ்வானது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய முறையைப் பின்பற்றி நடைபெற்றதாக” கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோவின் காட்சிகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. அதன் கடைசியில் நேருவின் கையில் செங்கோல் உள்ளது போல் புகைப்படம் ஒன்று காண்பிக்கப்படுகிறது. இதனைத் தவிர மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு எந்த புகைப்பட ஆதாரங்களும் காண்பிக்கப்படவில்லை.

மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் வழங்கப்பட்டதா ?

இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தது தொடர்பாக ‘தி இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியச் செய்தித்தாள்களில் அன்றைய தினத்தில் (சுதந்திர காலகட்டத்தில்) செங்கோல் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அச்செய்திகளில் செங்கோலானது அதிகாரப் பரிமாற்றத்தின் சின்னம் என்றோ, ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் செய்யப்பட்டது என்றோ, மவுண்ட்பேட்டனிடம் வழங்கப்பட்டு பின்னர் நேருவிடம் கொடுக்கப்பட்டதாகவோ எந்த குறிப்பும் இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

Archive link 

மேலும், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில் சில தகவல்களைப் பதிவு செய்துள்ளார். அதில், மதராஸ் மாகாணத்தில் மத ஸ்தாபனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கம்பீரமான செங்கோல் 1947ம் ஆண்டு ஆகஸ்டில் நேருவுக்கு வழங்கப்பட்டது. பின்னர் இந்த செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. ஆனால், மவுண்ட்பேட்டன், ராஜாஜி மற்றும் நேரு ஆகியோர் இந்த செங்கோலைப் பிரிட்டிஷ் அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்றியதற்கான அடையாளமாக விவரித்ததற்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை.

பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் தமிழ்நாட்டின் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகச் செங்கோலைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் உண்மையைத் திரித்து மாற்றுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் செங்கோல் குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் ‘Time’ பத்திரிகையில் வெளியான செய்தியும் ஆதாரமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள செய்திகளின்படி, இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென அம்பலவான தேசிகர் கருதினார்.

அதன்படி இரண்டு தூதர்கள் மற்றும் நாதஸ்வர வித்வான் ஒருவரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நேருவின் வீட்டை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். பின்னர் தஞ்சாவூரிலிருந்து எடுத்து வந்த புனித நீரை நேருவின் தலையில் ஒருவர் தெளித்து, நெற்றியில் விபூதி பூசப்பட்டது. பின்னர் நேருவிடம் செங்கோலை அவர்கள் வழங்கினார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. Time செய்தியிலும் மவுண்ட்பேட்டன் பற்றியோ, ராஜாஜி பற்றியோ குறிப்பிடப்படவில்லை.

திருவாவடுதுறை ஆதீனம் அறிக்கை :

செங்கோல் மவுண்ட்பேட்டனிடம் அளிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், இதற்கு மாறாக திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “குறிப்பிட்டதொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொன்னதாகச் சில அறிக்கைகளைக் கண்டோம். 1947-ல், ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப் பெற்றது குறித்த வரலாற்றைப் பொய் என்று இந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறியதாகத் தெரியவருகிறது.

Facebook link 

ஆட்சி மாற்றத்தின்போது, அதனை அடையாளப்படுத்துகிற சடங்கினைச் செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்முடைய ஆதீனகர்த்தர், தக்க செங்கோல் செய்வித்து, முறையான சடங்குகளில், மவுண்டபேட்டன் பிரபுவிடம் அதைக் கொடுத்து வாங்கி, தொடர்ந்து செங்கோலைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடம் கொடுக்கச் செய்தார்கள்” என்றுள்ளது.

ஆனால், ஆதீனத்திடம் செய்தியாளர் சந்திப்பில் ‘நீங்கள் வெளியிட்டுள்ள புகைப்படத் தொகுப்பில் மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் கொடுத்தது போலவோ, திரும்பப் பெற்றது போலவோ புகைப்படம் இல்லை. நீங்கள் சொல்லும் சம்பவம் எந்த தேதியில், எங்கு நடந்தது” எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Archive link  

அதற்கு, “அது 1947ம் ஆண்டு நடந்தது. அந்த காலத்தில் புகைப்படம் எல்லாம் இல்லை. எந்த தேதியில், எங்கு நடந்தது என அந்த காலத்திலிருந்தவர்களை கேட்டால்தான் தெரியும். நான் எல்லாம் 60 (1960) காலகட்டத்தில்தான் பிறந்தேன். வரலாறு மூலமாகத் தெரிந்து கொள்கிறோம் அவ்வளவுதான்” எனக் கூறியுள்ளார். ஆனால், அதே 1947ல் தான் நேருவிடம் செங்கோல் கொடுக்கப்பட்டபோது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1947ம் ஆண்டு சுதந்திரத்தின் போது திருவாவடுதுறை ஆதீனம் சார்பாக நேருவிடம் செங்கோல் கொடுக்கப்பட்டதற்கான புகைப்படம் மற்றும் பத்திரிகை செய்தி ஆதாரங்கள் உள்ளன. மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளது என ஆதீனம் தரப்பிலும் ஒன்றிய அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்து எந்தவொரு புகைப்படத்தினையும், பத்திரிகை செய்தி ஆதாரங்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader