யூடியூப் சேனல்களில் பொய் பொய்யா பேசும் ஷர்மிக்கா.. ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் சொல்லும் உண்மை

சித்த மருத்துவர் ஷர்மிக்கா உணவு தொடர்பாக யூடியூப் சேனல்களுக்கு அளித்த நேர்காணலில், நாட்டுக்கோழி சிறந்தது, மாடு நம்மைவிடப் பெரிய மிருகம் எனவே நாம் அதனைச் சாப்பிடக் கூடாது. கர்ப்பணி பெண்கள் அயோடின் உப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கருத்துக்களைப் பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் அருணிடம் விளக்கம் கேட்டோம். அவர் நம்முடன் பகிர்ந்த தரவுகளையும், தகவல்களையும் இக்கட்டுரையில் காண்போம்.

அயோடின் உப்பு : 

‘கர்ப்பிணிப் பெண்கள் அயோடின் உப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ எனத் தனது நேர்காணலில் ஷர்மிக்கா கூறியுள்ளார்.

இந்தியாவில் 167 மில்லியன் மக்கள் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கர்ப்பிணிப் பெண்களுக்கு போதுமான அளவு அயோடின் பெறவில்லை என்றால், அவர்களது குழந்தைகள் கற்றல் குறைபாட்டுடன் பிறக்கலாம். மேலும், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு, இறப்பு விகிதம் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஊட்டச்சத்து குறித்து RDA (Recommended Dietary Allowance) அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு மனிதனுக்கு எந்த அளவிற்குப் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, அயோடின் முதலானவை இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அப்பட்டியலின்படி ஒரு ஆண் அல்லது பெண் நாள் ஒன்றுக்கு 150 மைக்ரோ கிராம் அயோடினை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிப் பெண் நாள் ஒன்றுக்கு 250 மைக்ரோ கிராமும், பாலூட்டும் தாய்மார்கள் 280 மைக்ரோகிராமும் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்களைக் காட்டிலும் கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் அயோடின் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஷர்மிக்கா தாய்மார்கள் இதனை முற்றிலும் நிறுத்த வேண்டும் எனத் தவறான தகவலைக் கூறுகிறார்.

நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி : 

பிராய்லர் கோழி அல்லது அதன் முட்டையைக் காட்டிலும் நாட்டுக்கோழியும் அதன் முட்டையும் சிறந்தது என்ற கருத்து நீண்ட காலமாகவே நிலவி வரக்கூடிய கருத்தாகும். இது குறித்து 2017ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயங்கும், கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஓம் பிரகாஷ் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில் நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி மற்றும் லேயர் கோழியை (முட்டைக்காக வளர்க்கப்படுவது) ஒப்பிட்டுக் காண்பித்துள்ளார்.

ஒரு நாட்டுக்கோழி 12 வாரங்களுக்குப் பிறகு கறி பயன்பாட்டிற்காகச் சந்தைக்கு வருகிறது. அதே போல் 20வது வாரத்திலிருந்து 72வது வார காலக்கட்டத்தில் ஒரு கோழி முட்டையிடும். சராசரியாக ஒரு நாட்டுக்கோழி  80 முதல் 150 வரை முட்டையிடும்

பிராய்லர் கோழி இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. 35 முதல் 38 நாட்களில் ஒரு பிராய்லர் கோழி சந்தைக்குக் கறி பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுகிறது.

அடுத்தபடியாக முட்டைக்காக வளர்க்கப்படும் லேயர் கோழிகள். இதன் முட்டையிடும் பருவமான 20 முதல் 72வது வாரக் கால கட்டத்தில் 330  முதல் 350 வரையிலான முட்டைகளையிடும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வளவு முட்டை உற்பத்தி தேவையா என்ற கேள்வி எழக்கூடும். ஒரு நபர் ஆண்டொன்றுக்கு 180 முட்டைகளை உட்கொள்ள வேண்டும் என கால்நடைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள “முட்டை மற்றும் கோழி வளர்ப்புக்கான தேசிய செயல் திட்டம் 2022 அறிக்கையில்” பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2015-16ல் இந்தியாவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 66 முட்டைகள் மட்டுமே கிடைப்பதாகவும், அந்த எண்ணிக்கை  2022-23 காலக்கட்டத்தில் 93-ஆக அதிகரிக்குமென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை என்பது மிகக் குறைவே.

முட்டையின் வெள்ளைக் கருவில் புரதம், வைட்டமின் B3, வைட்டமின் B2, குளோரின், சோடியம், பொட்டாசியம், ஜிங்க் மற்றும் சல்பர் உள்ளது. மஞ்சள் கருவில் வைட்டமின் A, வைட்டமின் D மற்றும் வைட்டமின் E ஆகியவை உள்ளது. மேலும், வைட்டமின் B12, ஃபோலிக் அமிலம், கோலின், லுடீன், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் பொட்டாசியம் உள்ளது.

அதேபோல, அனைத்து கோழி முட்டைகளில் உள்ள வைட்டமின், மினரல்ஸ், புரதம் மற்றும் கால்சியம் சத்துக்களின் அளவு ஒன்றுதான் என ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியர்கள் DNA-விற்கு மாட்டுக்கறி ஜீரணம் ஆகாதா?

மாட்டுக்கறி குறித்த கேள்விக்கு ‘மாடு நம்மைவிடப் பெரிய மிருகம். தமிழ்நாடு மற்றும் இந்தியர்களின் DNA-வினால் நம்மைவிடப் பெரிய மிருகத்தை ஜீரணிக்க முடியாது’ என்றும், மாட்டுக்கறியைவிட ஆட்டுக்கறி சிறந்தது என்றும் பேசி இருந்தார்.

இது குறித்து ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் அருணிடம் கேட்டபோது, அப்படி எதுவும் இல்லை. ICMR வெளியிட்ட RDA அட்டவணையில் இருப்பது போன்ற ஊட்டச்சத்தினை எந்த உணவிலிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். அது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆட்டுக்கறி மற்றும் மாட்டுக்கறி இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான சத்துக்களே உள்ளன. சத்துக்கள் ஒரே அளவில் இருக்கும் போது அதன் விலையினை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க : நடிகர் மாதவனின் ட்வீட்: மாட்டுக்கறியை விட கிட்னி பீன்ஸில் சத்துக்கள் அதிகமா ?

அவர் கூறியதை அடுத்து இரண்டு கறிக்குமான விலையை ஒப்பிட்டுப் பார்க்கையில் மாட்டுக்கறியின் விலையைக் காட்டிலும் ஆட்டுக்கறியின் விலை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளதைக் காண முடிந்தது. 

ஒரு குலாப் ஜாமுன் 3 கிலோ கிராம் உடல் எடையை அதிகரிக்குமா ?

நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்து எடையைக் குறைத்தாலும், ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ அதிகரித்துவிடும் என ஷர்மிக்கா கூறியிருந்தார். இது குறித்துக் கேட்ட போது, அப்படி எல்லாம் அதிகரிக்காது. உடல் எடை குறைத்தல் என்பது நீங்கள் உட்கொள்ளும் கலோரியில் எவ்வளவு கலோரியினை உடல் உழைப்பின் மூலம் வெளியேற்றுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். அதாவது weight loss = energy consume – energy expenditure என விளக்கம் அளித்தார்.

முடிவு : 

சித்த மருத்துவர் ஷர்மிக்கா மாட்டுக்கறி, நாட்டுக்கோழி, அயோடின் உப்பு குறித்துப் பேசிய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தரவுகளைக் கொண்டும், ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் அளித்த தகவல்களைக் கொண்டும் அறிய முடிகிறது. 

Link :

RDA_short_report(1)

Seeking Comments on National Action Plan- Poultry- 2022 by 12-12-2017

Brown Eggs Vs White Eggs: What Is Better For You?

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader