இன்டர்நெட் சேவையை முடக்கிய நாடுகளில் இந்தியா முதலிடம் !

போராட்டங்கள், பதற்றமான சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்கள் போன்ற முக்கிய தருணங்களில் குறிப்பிட்ட பகுதியில் இணைய(Internet) சேவையை அரசாங்கம் முடக்குவது வழக்கம். இப்படி இணைய சேவையை முடக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

Advertisement

statista.com எனும் இணையதளத்தில் Access Now உடைய தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட விளக்கப்படத்தில், 2018-ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 134 முறையும், அண்டை மாநிலம் பாகிஸ்தானில் 12 முறை இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது. இந்த விளக்கப்படம்(Infographic chart) சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

” Access Now தரவுகளின் படி, 2016 ஜனவரி முதல் 2018 மே மாதம் வரையில் இந்தியாவில் 154 முறை இன்டர்நெட் சேவையை முடக்கி உள்ளதாகவும், அதே இரண்டாம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் 19 முறையும், இராக் மற்றும் சிரியா ஆகிய இரண்டிலும் 8 முறையும் என நீண்ட இடைவெளியுடன் இருப்பதாக ” கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக Forbes செய்தி கட்டுரை வெளியிட்டு இருந்தது.

2018-ம் ஆண்டில் மட்டுமின்றி, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 400 முறைக்கும் மேல் இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது. தற்போதைய 2021-ம் ஆண்டு தொடக்கத்திலேயே, விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியால் ஹரியானா மற்றும் தலைநகர் டெல்லி என கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முறை இணையத்தை முடக்கி உள்ளது இந்திய அரசாங்கம்.

Advertisement

குறிப்பாக, பதற்றமான பகுதியாக கருதப்படும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலேயே அதிக முறை இந்தியா இணைய சேவையை முடக்கி விடுகிறது. உலகிலேயே அதிக நாட்கள் இணைய சேவையை முடக்கியதும் இந்தியாவில் தான். ஜம்மு காஷ்மீரின் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போது 2019 ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 2020 மார்ச் 4-ம் தேதி வரை என மொத்தம் 213 நாட்களுக்கு இணைய சேவை அங்கு முடக்கப்பட்டது.

internetshutdowns.in வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் 2017, 2018, 2019, 2020 ஆண்டுகள் முறையை 79, 134, 106, 83 என இணையத்தை முடக்கிய எண்ணிக்கை 400-ஐத் தாண்டுகிறது. இதில், அதிகபட்சமாக, 2018-ல் மட்டும் 134 முறை முடக்கப்பட்டு உள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட பகுதியில் இணைய சேவையை முடக்குவதற்கு சட்டரீதியிலான வசதிகள் இருக்கின்றன. இப்படியான இணைய சேவை முடக்குவதில், தடுப்பு நடவடிக்கை மற்றும் எதிர்வினை நடவடிக்கை என இரு பிரிவு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் தடுப்பு நடவடிக்கை காரணமாகவே இணைய சேவை அதிக அளவில் முடக்கப்பட்டு உள்ளது.

2018-ல் தமிழ்நாட்டில் 1 முறை (தூத்துக்குடி சம்பவத்தின் போது) இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளதாக internetshutdowns.in-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைய சேவையை முடக்குவதால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. Top10vpn-ன் அறிக்கைப்படி, 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் செய்யப்பட்ட 8,927 மணி நேர இணைய முடக்கத்தால் உண்டான செலவு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு மணி நேர இணைய முடக்கத்திற்கு சராசரியாக 2 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஆக, இணைய முடக்கத்தால் தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி பொருளாதாரமும் பாதிக்கவே செய்கிறது.

Proof links : 

the-number-of-internet-shutdowns-by-country

the-countries-shutting-down-the-internet-the-most-infographic

https://internetshutdowns.in/

More than 400 internet lockdowns in last 4 years in India; average cost of each shutdown Rs 2 crore/hour

cost-of-internet-shutdowns/#india

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button