This article is from Mar 24, 2020

சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா ?

சமீப நாட்களாக சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவரின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் அதிகம் பார்த்திருப்பீர்கள். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிப்பை சரி செய்ய தன்னிடம் மருந்து உள்ளதாகவும், தன்னிடம் உள்ள மூலிகை மருந்து மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தி உள்ளதாகவும், ஆனால் அரசாங்கம் அதனை ஏற்க தயாராக இல்லை எனக் கூறி வருகிறார்.

தமிழர் வாழ்வியல், தமிழர் மருந்து என பேசுபவர்களுக்கு மக்கள் தங்களின் ஆதரவை தெரிவிப்பதுண்டு. ஆனால், எல்லா நேரத்திலும் சரியானவர்களுக்கு தான் நாம் ஆதரவு கொடுக்கிறோமோ என்பதை யாரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. சித்த மருத்துவர் தணிகாசலத்தின் நேர்காணல் வீடியோக்கள் பலவற்றை அனுப்பி, அவர் கூறுவது உண்மையா, அதனை அறிந்து கூறுங்கள் என ஃபாலோயர்கள் தரப்பில் தொடர் கேள்விகள் எழுப்பப்படுகிறது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள திருத்தணிகாசலத்தின் ” ரத்னா சித்த மருத்துவமனையில் ” சிகிச்சை பெற்றவர்கள் அளித்து இருக்கும் கருத்துக்களை கூகுள் ரீவியூஸ் மூலம் ஆராய்ந்து பார்த்தோம். ஹை ரேட்டிங் மற்றும் லோ ரேட்டிங் ரீவியூஸ் என பிரிக்கப்பட்டு இருக்கும் ரீவிஸ்களில் லோ ரேட்டிங் ரீவிஸ்களை முதலில் பார்க்க துவங்கினோம்.(ரீவியூஸ் லிங்க்)6 நாட்களுக்கு முன்பாக கேசவன் என்பவர், அனைத்து ரீவியூஸ்களும் போலியான ஐடிகள் மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். தனக்கு இருந்த தோல் சார்ந்த பிரச்சனைக்கு திருகணிகாச்சலத்திடம் சென்ற பொழுது சில மருந்துக்களை கொடுத்துள்ளார். ஆனால், அதன் விளைவால் உடல் எடை அதிகரித்து மூச்சு விடவே சிரமப்பட்டு உள்ளேன். ரூபாய் 45,000 ரூபாயை இழந்து உள்ளேன். போலியான ஐடிக்கள் மூலம் ரீவியூஸ் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் எனக் கூறி உள்ளார்.

சரிப்பா, ஒரு தமிழ் சித்த மருத்துவர் கொரோனா வைரஸிற்கு மருந்து சொன்ன கார்ப்பரேட் வியாபாரிகள் போலியான ரீவியூஸ் கொடுப்பாங்க என அனைவருக்கும் தோன்றும். ஆனால், அவர் கொரோனா வைரஸ் பற்றி பேசுவதற்கு 2 மாதங்கள், 8 மாதங்கள், 1 வருடம், 3 வருடங்களுக்கு முன்பே பதிவான லோ ரேட்டிங் ரீவியூஸ்களையும் பார்க்க முடிகிறது.

பெரும்பாலான லோ ரேட்டிங் ரீவியூஸ்களில், குறைந்த செலவில் மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆயிரக்கணக்கில் மருந்துகளை பரிந்துரை செய்கிறார், பணத்தை இழக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தியே பதிவிடப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள், திருத்தணிகாசலத்தின் மருத்துவம் குறித்து போலியான ஐடிக்கள் மூலம் ஹை ரேட்டிங் ரீவியூஸ் அளித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். ஆக, அதையும் ஆராய்ந்து பார்த்தோம்.

ஹை ரேட்டிங் ரீவியூஸ் அளித்த ஐடிக்கள் பெரும்பாலானவை ue s , ra th , jee v என்றே இருக்கின்றன. ஹை ரேட்டிங் ரீவியூஸ் அளித்தவர்களில் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் கொண்ட ஐடிக்கள் வெகு சிலவே உள்ளன. அதுவும் சில வருடங்களுக்கு முன்பானவை. படித்த மக்கள் ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவமனை குறித்த ரீவியூஸ்களை வைத்தே அதன் தரத்தை தீர்மானிக்கின்றனர் என்பதை அறிந்து போலியான ஐடிக்கள் மூலம் ஹை ரேட்டிங் ரீவியூஸ்களை பதிவிட்டு கொள்கிறார்கள்.

Facebook link | archived link 

பிப்ரவரி 27-ம் தேதி, ” சீன அரசு தூதரகம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. முதல்கட்ட முயற்சி ” என்று சீனாவின் தூதரத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளது வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்றின் ஸ்க்ரீன்ஷார்டை பதிவிட்டு இருந்தார்.

Facebook link | archived link 

மார்ச் 19-ம் தேதி திருத்தணிகாசலம் தன் முகநூல் பக்கத்தில், ” என் யோசனையை ஏற்ற சீன அரசு மூலிகை மருத்துவர்களையும் அலோபதி மருத்துவர்களோடு இணைந்து செயல்படவைத்து 74000 குரோனா வைரஸ் காய்ச்சல் நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்ததில் 92.5 சதவிகித நோயாளர்கள் விரைந்து குணமானார்கள். என்னிடம் விலங்குகளிடம் உங்கள் மருந்தை பரிசோதித்தீர்களா? என்ற கேள்விகளை எல்லாம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன மக்களுக்கு உதவிய நான் நம்நாட்டு மக்களுக்கு உதவாமல் இருப்பேனா? ” எனப் பதிவிட்டு இருந்தார்.

அவரின் பதிவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் அல்லோபதி ஆகிய இரண்டையும் இணைத்து பயன்படுத்தி சிகிச்சை அளித்தது குறித்து தி வீக் இணையத்தில் வெளியான செய்தியின் ஸ்க்ரீன்ஷார்ட் மற்றும் அவரின் மருத்துவ விண்ணப்பம் குறித்து shan zuhua என்பவர் அளித்த பதிலின் ஸ்க்ரீன்ஷார்ட் இடம்பெற்று உள்ளது. இந்த shan zuhua மெசேஜ் ஸ்க்ரீன்ஷார்ட்டைத் தான் பிப்ரவரி 27-ம் தேதி முகநூலில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால், மார்ச்சில் வெளியிட்ட ஸ்க்ரீன்ஷார்ட்க்கும், முன்பு வெளியிட்ட ஸ்க்ரீன்ஷார்ட்க்கும் வித்தியாசம் இருப்பதை காணலாம். அந்த பதில் மெசேஜ் உடைய ஆரம்பத்தில் ” May be not enough time for ” என்ற வார்த்தைகள் மறைக்கப்பட்டு இருப்பதை காணலாம். கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள சூழ்நிலையில் அவரின் மருத்துவ விண்ணப்பத்திற்கு நேரம் இல்லாத காரணத்தினைக் குறிப்பிட்டு உள்ளனர். ஆகையால், தற்போது உள்ள சூழ்நிலை சரியான பிறகு அவர் சீனாவிற்கு வருவதை சீன நிர்வாகம் வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அந்த பதில் மெசேஜின் முழு ஸ்க்ரீன்ஷார்ட்டை பதிவிடாமல் இருந்துள்ளார். அந்த பகுதியை நீக்கி விட்டு தன்னை சீனாவிற்கு அழைத்து உள்ளார்கள் என பிப்ரவரி மாத பதிவில் கூறிக் கொண்டுள்ளார். அவருடைய மருந்தினை சோதிப்பதற்கு நேரமில்லை எனக் கூறிய மெஜேசை வைத்தே, ஏற்றுக் கொண்டார்கள், தன்னுடைய யோசனையை ஏற்று பாரம்பரிய மருத்துவம் மூலம் குணமாக்கி உள்ளார்கள் என கூறிக் கொண்டுள்ளார்.

Facebook link | archived link 

மார்ச் 19-ம் தேதி மற்றொரு பதிவில், ” எனக்கு நன்றி கூறிய சீன மருத்துவ அதிகாரி. சீன மருத்துவ அதிகாரி எனக்கு நன்றிகூறியும் என்னோடு தொடர்பில் இருந்து சிறந்த சிகிச்சை அளிக்கிறோம் என்பதையும் அந்த நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டி இது. ஆனால் தென்னிந்தியா என்பதற்கு பதிலாக கிழக்கிந்தியா என்று கூறிவிட்டார் ” எனப் பதிவிட்டார்.

அந்த பதிவில், ” zha என்பவர் கிழக்கு இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவே கூறப்பட்டுள்ளது, நண்பர் எனக் கூறவில்லை. அதுவும், சீனா குறித்த கூடுதல் தகவல்களை பெறுவதில் இருந்த ஆர்வத்திற்கும், உறுதுணைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். அடுத்த வாக்கியத்திலும், எங்களது நண்பர்களுக்கு சரியான படங்களை அளிப்பதாகவே கூறியுள்ளார். அந்த செய்தியின் வரிகள் தன்னைத்தான் குறிப்பிடுகின்றன என அவரே கூறிக் கொண்டுள்ளார்.

Facebook link | archived link

மார்ச் 1-ம் தேதி தன் முகநூலில், ” சிங்கப்பூர் கொரோனா நோயாளர் எமது மூலிகை சிகிச்சை மூலம் ஒரு வாரத்திலேயே குணமானார் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் ” எனப் பதிவிட்டு இருந்தார். ஆனால், மார்ச் 14-ம் தேதி அளித்த பேட்டியின் போது கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள சிங்கப்பூர் நோயாளரை குணமாக்கி உள்ளேன் எனத் தெரிவித்து உள்ளார். அதை கீழ்காணும் வீடியோவில் 7.30-வது நிமிடத்தில் பார்க்கலாம்.

Facebook link | archived link 

கொரோனா வைரஸ் நோயாளியை குணப்படுத்தியதாக கூறுவதற்கும், கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவரை குணப்படுத்தியதாக கூறுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. இதுதான் கொரோனாவிற்கு நேரடி மருந்து என ஏதும் இல்லாத நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக நினைப்பவர்களுக்கு ஒரு மருந்தினைக் கொடுத்து குணப்படுத்தி இருந்தாலும், அதை கொரோனா வைரசிற்கான மருந்து என எடுத்துக் கொள்ள முடியாது அல்லவா ?

அடுத்ததாக, மார்ச் 21-ம் தேதி Youth Central Tamil என்ற யூடியூப் சேனலில் ” கொரோனாவை குணமாக்கிய தமிழன், நோயாளியே ஆதாரம் ” என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், உணர்ச்சி பொங்க பேசிய திருத்தணிகாசலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் ஒருவரை குணப்படுத்தி உள்ளதாகவும், அவரின் வீடியோவை அனுப்புவதாகவும் கூறி இருப்பார்.

Youtube link | archived link

அந்த வீடியோவில், 4-வது நிமிடத்தில் இருந்து பேசும் சுதர்சன் என்பவர் தனக்கு கடுமையான சளி, இருமல் இருப்பதால் மருத்துவமனைக்கு சென்ற பொழுது மருந்துகள் அளித்ததோடு வெளியே செல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தொடக்கத்தில் கூறி இருப்பார். யூடியூபில் தணிகாசலம் அவர்களின் வீடியோ பார்த்து தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவரே தனக்கு மருந்தினை அனுப்பியதாகவும், அந்த மருந்தினை எடுத்துக் கொண்ட சில நாட்களில் காய்ச்சல், இருமல் குறைந்து உள்ளதாகவும் கூறி இருப்பார்.

ஆனால், அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவோ அல்லது இல்லை என்பதற்கோ அந்நாட்டு அரசு தரப்பில் எந்தவொரு உறுதிச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. மருந்துகள் மற்றும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றே அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்படி இருக்க அவர் கொரோனா வைரஸ் நோயாளி எப்படி உறுதி செய்தார்கள், பின்னர் கொரோனா வைரஸ் சரியானது என்று எப்படி உறுதி செய்தார். ஆக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் கொரோனா நோயாளியை குணப்படுத்தியதாக வீடியோவே வெளியிட்டு இருக்கிறார் திருத்தணிகாசலம்.

இப்படி முரண்பாடுகள், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் பதிவிட்ட பதிவுகள் மூலம் அவர் யார் என்பதை உங்களுக்கு தெரிவிக்க முயற்சித்து உள்ளோம். அவர் வெளியிட்ட வீடியோவிலும் கூட தமிழன், தமிழர் மருந்து என்பதால் தன்னுடைய மருந்து புறக்கணிக்கப்படுவதாக கூறிக் கொண்டே இருக்கிறார். ஏனெனில், தமிழர் என கூறுவது மக்கள் மத்தியில் பெருமையாக கருதும் சமயத்தில் தமிழர் என கூறினால் தன்னுடைய செயலுக்கு துணை நிற்பார்கள் என நினைத்து உள்ளார்.

Please complete the required fields.
Back to top button
loader