சிங்கப்பூரில் போலிச் செய்தியை பதிவிட்டால் அபராதம், சிறை| புதிய சட்டம்.

இந்தியாவில் தற்பொழுது தான் போலிச் செய்திகள், வதந்திகள் பற்றிய அறிமுகமே மக்களிடம் தென்படுகிறது. எனினும், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பெரும்பான்மையான மக்கள் போலிச் செய்திகள் குறித்த விழிப்புணர்வை பெறவில்லை என்பதே நிதர்சனம். வதந்திகள் மக்களிடையே வெறுப்புணர்வையும், கும்பல் தாக்குதலையும் அதிகரித்து வருகிற காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
இந்தியாவில் சமூக வலைதளங்களில் வதந்திகளை, போலிச் செய்திகளை பரப்புவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இல்லை. ஏனெனில், இதன் மூலம் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் என்ற கேள்வி முதலில் எழும். இந்நிலையில், சிங்கப்பூரில் போலிச் செய்திகள் தடுப்பு சட்டத்திற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் அமல்படுத்தி உள்ளனர்.
ஆன்லைன் பொய்களில் இருந்து பாதுகாத்தல் மற்றும் கையாளுதல் (POFMA) என்ற சட்டத்தின் மூலம் தவறான செய்திகளை பதிவிடும் தனிநபர்கள், இணையதளங்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் தனிநபரும் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும். இதன் மூலம் போலிச் செய்திகளை பரப்புவோருக்கு 50,000 சிங்கப்பூர் டாலர்கள் மற்றும் /அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டணை விதிக்கப்படும். ஒருவேளை, போலியான கணக்குகள் மூலம் போலிச் செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டப்பட்டால் 1,00,000 சிங்கப்பூர் டாலர்கள் மற்றும்/அல்லது 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும். நிறுவனங்கள் போலிச் செய்திகளை பரப்பியதாக நிரூபிக்கப்பட்டால் 1 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது எனக் கூறினாலும், எதை பேசினாலும் சட்டங்கள் பாயாது என்பதே உண்மை. மற்ற நாடுகளுடன் சிங்கப்பூரின் உறவு, பொது அமைதி , பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துகளை தெரிவிக்கவே கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மக்களிடையே இன, மதம் சார்ந்த வன்மத்தை உருவாக்கும் போலிச் செய்திகள் போன்றவை. மேலும், இச்சட்டம் சிங்கப்பூரில் அரசியல் சார்ந்த கதைகளை கட்டுப்படுத்தும் என ஆளும் தரப்பு நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மேலும், போலிச் செய்திகளை தடுக்கும் வகையில் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு உத்தரவிட அமைச்சர்களுக்கு அதிகாரம் உள்ளது. எனினும், சிங்கப்பூரில் ஆசியாவின் தலைமையகத்தை கொண்டிருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனத்திற்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஏற்று மாற்றிக் கொள்வதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் சமூக வலைதள நிறுவனங்கள் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது. ஏனெனில், சிங்கப்பூரில் சமூக வலைதள நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை கண்டு வருகின்றன. முக்கிய சமூக வலைதள நிறுவனங்கள் ஆசியாவிற்கான தலைமையிடத்தை சிங்கப்பூரிலேயே அமைத்து உள்ளனர். 2018-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் சிங்கப்பூரில் முதல் ஆசிய தரவு மையத்தை அமைக்க 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்து இருந்தது.
இந்தியாவில் போலிச் செய்திகளை பரப்பினால் வழக்குகள் பாய்ந்தாலும் பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை. எனவே, இதுபோன்ற சட்டங்களை சரியாக முறைப்படுத்தி நடைமுறைப்படுத்தி வந்தால் மக்களுக்கும் போலிச் செய்திகள், வதந்திகள் குறித்த விழிப்புணர்வு கிடைக்கும். வதந்திகளை பரப்பி மக்களுக்கு இடையே வெறுப்புணர்வையும், தாக்குதல்களையும் ஊக்குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
Links :
Singapore to decide what’s fake and what’s real
Chilling’: Singapore’s ‘fake news’ law comes into effect
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.