சோசியல் மீடியாவில் ட்ரெண்டான பெண்ணுக்கு தவறான வீடியோவால் நேர்ந்த கொடுமை.

சமூக ஊடகத்திற்கென்று தனி மதிப்புண்டு. ஏனென்றால், நம் நாட்டில் பல போராட்டங்கள் சமூக ஊடகத்தின் மூலமே பெரிய அளவில் பேசப்பட்டது, தீர்வுகளையும் கண்டது. பலருக்கும் தனிப்பட்ட முறையில் நன்மைகள் பல நிகழ்ந்து உள்ளன. இது நேர்மறையான பக்கம். ஆனால், சமூக ஊடகத்தின் எதிர்மறையான பக்கத்தை பலரும் அறியாமல் செய்யும் செயலால் மனக் கவலையும், வாழ்க்கையில் பாதிப்பையும் சந்தித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பாக யூடியூப் சேனல் ஒன்று பொதுமக்களிடம் காதல் குறித்து கேள்வி எழுப்பி வீடியோ எடுக்கும் பொழுது, தன் காதல் கணவன் தம்மை கைவிட்டதாகவும், அவர் இன்னொரு பெண்ணுடன் இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என பேசிய பெண் தமிழக அளவில் சமூக ஊடகங்களில் வைரல் செய்யப்பட்டார். இதுதாண்டா உண்மையான காதல் என அந்த பெண்ணிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மீம்ஸ், வீடியோக்கள் பறந்தன.
அடுத்த சில நாட்களில், அதே பெண் செய்த டிக்டாக் வீடியோக்கள் ஒவ்வொன்றாக முகநூல் உள்ளிட்டவையில் வெளியாகி ட்ரெண்டாகத் தொடங்கியது. முதலில் அப்பெண்ணின் டிக்டாக் வீடியோவிற்கு ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கும் பொழுதே, டிக்டாக் செய்ததற்கு எதிரான கமெண்ட்களும் வெளியாகின.
இப்படி இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பாக அதே பெண் வேறொரு நபருடன் இருப்பதாகக் கூறி மற்றொரு வீடியோவானது வைரலான பெண்ணின் புகைப்படத்துடன் பரப்பப்பட்டது. உண்மையில், வைரல் செய்யப்பட்ட வீடியோவில் இருக்கும் பெண் வேறொருவர் என்பதை அறிய முடிகிறது. அந்த பெண் கேரளாவைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது. ஆனால், அந்த பெண்ணும், இங்கு ட்ரெண்டான பெண்ணும் ஒரே நபர் என தவறான செய்தியை பரப்பத் தொடங்கினர்.
சமூக ஊடகத்தைப் பொறுத்தவரை எதிர்மறையான செய்திகளும் மின்னல் வேகத்தில் வைரலாகும். இதனால் அந்த பெண்ணிற்கு ஆதரவாக வெளியான மீம்ஸ், வீடியோக்கள் போன்று எதிரான மீம்ஸ், ட்ரோல் வீடியோக்கள் அதிவேகமாக பரவியது. ஒரு பெண் டிக்டாக் செய்தாலே தவறானவள் என்பது போன்ற பார்வை ஆண்கள் மத்தியில் இருப்பதை கமெண்ட்களின் வாயிலாக அறியலாம்.
இந்நிலையில்தான், அப்பெண்ணும், அவரது உடன் இருந்த பெண்ணும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக டிக்டாக் வீடியோ வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோக்களும் சமூக ஊடகத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா, இல்லையா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
அதிகரித்து வரும் யூடியூப் சேனல்களின் எண்ணிக்கையால் பொதுமக்களிடம் ஏதாவது பேசி, ப்ராங் வீடியோ என்ற பெயரில் இம்சை செய்து வீடியோ எடுத்து அதை ட்ரெண்ட் செய்து விடுகிறார்கள். சமூக ஊடகத்தில் நேர்மறையாக, எதிர்மறையாக என்ற பாகுபாடில்லை.
நம்முடைய சமூகத்திற்கு தவறான செய்திகள் எந்த அளவிற்கு பாதிப்பை தரவல்லது என்பதை இதுபோன்ற சில சம்பவங்கள் உணர்த்தி விட்டு செல்கின்றன. நீங்கள் பகிரும் செய்திகளில், தகவலில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பதை குறைந்தபட்சம் தெரிந்து கொண்டு பகிருங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.