This article is from Feb 27, 2021

சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு.. கருத்து சுதந்திரத்திற்கு பாதகமா ?

மத்திய அரசு சமூக ஊடகங்களுக்கான புதியக் கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியது. இதன்படி “வாட்ஸ் ஆப்” , “ஃபேஸ்புக்” போன்ற சமூக வலைதளங்களில் அரசு “சட்டவிரோதமானது” எனக் கருதப்படும் தரவுகளை பதிவேற்றியவர் யார் என கண்டறிய தன்னுடன் உடன்படும்படியான கட்டாய விதிமுறைகளை மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு ஆணையிட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று இதற்கான விரிவான விதிமுறைகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரின் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. 

இந்தியா அரசு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 பிரிவு 87 கீழ் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட  இவ்விதிகள் தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021 ஆகும்.  

இந்தியாவில் வலுவான தரவுப் பாதுகாப்புச் சட்டம் (data protection act) இல்லாத நிலையில்  சமூக வலைதளங்களிடம் அரசால் “சட்டவிரோதமானது” எனத் தடைசெய்யப்பட்ட தரவின் பதிவாளரை 36 மணி நேரத்துக்குள் கண்டறியவேண்டும் என கட்டளையிடுவது மத்திய அரசின் கண்காணிப்பு நோக்கத்தினை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், வலைதளங்கள் குறைத்தீர்க்கும் அதிகாரி ஒருவரை நியமனம் செய்து அவருடைய பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பகிர வேண்டும். அவர் புகார்களை 24 மணி நேரத்திற்குள் ஏற்றுகொண்டு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாலியல் ரீதியான குற்றங்களைத் தவிர்ப்பதற்கான ஒரு தனி விதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, தனிநபர்களின் தனிப்பட்ட பகுதிகளை காட்சிப்படுத்துவது, முழு அல்லது பகுதி நிர்வாணமாக அல்லது பாலியல் ரீதியாக காட்டுவது அல்லது “மார்பிங்” உட்பட ஆள்மாறாட்ட பதிவுகள் போன்றவற்றை 24 மணிநேரத்திற்குள் சமூக வலைதளங்கள் நீக்க வேண்டும்.

டிஜிட்டல் செய்தி ஊடக அமைப்புகளைப் பொறுத்தவரை, “ நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு அல்லது அண்டை நாடுகளுடனான நட்பு உறவுகள் ஆகியவற்றின் பார்வையில் இருந்து ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்பட்டால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் எந்தவொரு செய்தியையும் அகற்றக்கோரும் உரிமை மத்திய அரசிடம் உள்ளதாக” தெரிவித்து பத்திரிக்கைத்துறையின் உரிமையைப் பறிக்கிறது அரசு.

பிரசாந்த் சுகாதன், சட்ட இயக்குநர் SFLC.in ஹிந்து நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், “தகவலைத் தோற்றுவிப்பவரை அடையாளம் காண வேண்டிய கட்டாய விதி வாட்ஸ் ஆப் மற்றும் சிக்னல் போன்ற செயிலிகளின் “தரவுகள் என்க்ரிப்ஷன்” போன்ற பாதுகாப்பு அம்சத்துக்கு சிக்கலாக அமையும், மேலும் “சிக்னல்” மற்றும் “டெலிக்ராம்” போன்ற செயிலிகளுக்கு ஒரு முதன்மை இணக்க அதிகாரி, ஒரு நோடல் அதிகாரி மற்றும் ஒரு  குறைத்தீர்க்கும் அதிகாரியை நியமிப்பதற்கான கட்டாயத் தேவைகளை நிறைவேற்ற கடினமாக அமையும்.” எனக் கூறியுள்ளார்

அரசின் தரவுகளின்படி இந்தியாவில் ,  

  • வாட்ஸ் ஆப் பயனாளர்கள் 53 கோடி  
  • யூடியூப் பயனாளர்கள் 44.8 கோடி
  • பேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி
  • இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் – 21 கோடி
  • ட்விட்டர் பயனாளர்கள் 1.75 கோடி 

செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி அமைப்புகளின் சார்புகள் அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டிருக்கும் நிலையிலும், சுமார் 50% மக்களின் கைகளில் வந்தடைந்ததன் விளைவாகவும் சமூக வலைத்தளங்கள் ஒரு வலிமையான மாற்று ஊடகமாக இந்தியாவில் உருவாகியது. இதன் காரணமாக எழுந்த போலிச் செய்திகளின் பரவல்கள் சமூக வலைதளங்களுக்கான விதிகள் மற்றும் வரையறைகளுக்கு வித்திட்டாலும் தற்போது வெளியிடப்பட்ட புதிய விதிகள் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  “மென்மையான மேற்பார்வை வழிமுறை” என வகைப்படுத்தினாலும் இதற்கு மக்கள் விட்டுக்கொடுப்பது தனிமனித தனியுரிமை மற்றும் பாதுகாப்புச் சுதந்திரமும், பேச்சு சுதந்திரத்தையுமே.

மேலும் படிக்க : ஓடிடி சென்சார்ஷிப்: மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன?

  • அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி)

Reference :

https://www.thehindu.com/news/national/govt-announces-new-social-media-rules/article33931290.ece

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1700749

 

Please complete the required fields.




Back to top button
loader