திருநெல்வேலி, தூத்துக்குடியில் எவ்வளவு மழை பெய்தது – அரசின் நடவடிக்கைகள் என்ன? 

தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையின் காரணமாகச் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பைப் போலவே தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாகத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டியில் நேற்றைய தினம் (17.12.2023) காலை 8.30 மணி முதல் இன்று (18.12.2023) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 94.6 செ.மீ. மழை பெய்துள்ளது. 

மாவட்ட வாரியாக பார்க்கையில் தூத்துக்குடியில் அதிகப்படியாக மேற்கண்ட 24 மணி நேரத்தில் 38 செ.மீ மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் முறையே 27.6 செ.மீ., 20.67 செ.மீ. மழை பெய்துள்ளது. இதே போல் விருதுநகர் (14.82 செ.மீ) மற்றும் கன்னியாகுமரி (11.87 செ.மீ.) மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துள்ளது. 

Source : TN Smart

குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டி என்னும் கடலோரப் பகுதியில் பெய்துள்ள மழை (94.6 செ.மீ.), இது வரையில் தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதியில் பதிவானதில் அதிகபட்ச மழையாக இருக்கும் என தமிழ்நாடு வெதர் மேன் என்னும்  பிரதீப் ஜான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இவற்றைத் தவிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, சாத்தான்குளம், மணியாச்சி பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது. 

தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி, மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, பாளையங்கோட்டை பகுதிகளிலும் 61 முதல் 44 செ.மீ வரை மழை பெய்துள்ளது. அதேபோல் தென்காசி மாவட்டம் குண்டாறு அணைப்பகுதியில் 51.48 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் மையிலாடியில் 30.32 செ.மீ மழையும் அதிகப்படியாக பெய்துள்ளது.

Source : TN Smart

இந்த நான்கு மாவட்டத்திற்கும் டிசம்பர், 16ம் தேதி ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டிருந்த நிலையில், 17ம் தேதி பெய்த கனமழை காரணமாக தற்போது ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 18ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அளித்தது.

தாமிரபரணி வெள்ள எச்சரிக்கை : 

இந்த கனமழையின் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் வேகமாக நீர் நிரம்பி வருகிறது. இதனால் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாபநாசம் அணையிலிருந்து 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நீர் வரத்து அதிகரித்ததால் தற்போது சுமார் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள்  மழைக்கால அவசர உதவிகளுக்கு உதவி எண்களும் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைக்க 97 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

(தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம் – 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் – 1070, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உதவி 101 மற்றும் 112, அவசர மருத்துவ உதவிக்கு – 108, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு – 94458 54718). 

தேசிய பேரிடர் மீட்புக்குழு : 

கனமழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அம்மக்களைப் பாதுகாப்பான முறையில் மீட்டு முகாம்களில் தங்க வைக்க ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புக்குழு தூத்துக்குடி மற்றும் தென்காசிக்கு விரைந்துள்ளது. அணிக்கு 25 பேர் வீதம் 4 அணிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளது. 

இதனைத் தவிர்த்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் மக்களைத் தங்க வைக்க முகாம் மற்றும் மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது.  மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தக் கூறி 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் அறிவுறுத்தியுள்ளார். அரசு நிர்வாகத்தைத் தாண்டி தன்னார்வமாக மக்களும் அந்தந்த பகுதி மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்டு வருகின்றனர்.

இம்மழை குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசுகையில், எதிர் பார்த்ததை விட அதிக மழை பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததின்படி பல இடங்களில் மிகக் கனமழையும் சில இடங்களில் அதி கனமழை பெய்திருக்க வேண்டும். ஆனால், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மிக அதி கனமழை பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய 11.5 செ.மீ முதல் 20.44 செ.மீ வரை மிகக் கனமழையாகவும் அதற்கும் மேல் பெய்யக்கூடிய மழை அதி கனமழையாகவும் வரையறுக்கிறது. இந்த அளவை காட்டிலும் தற்போது பெய்துள்ள மழை பல மடங்கு அதிகம் எனக் கூறியுள்ளார். 

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேசுகையில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னதாக அளித்த ரெட் அலர்ட் அடுத்த 24 மணிநேரத்திற்கும் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் 95, 65 செ.மீ. எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மூன்றே பிரிவு மட்டும் தான். 21 செ.மீ. மேல் பெய்தாலே ரெட் அலர்ட் தான். அதற்கு மேல் எதுவும் கிடையாது.

வளிமண்டல சுழற்சியால் இதுவரை இந்த அளவிற்கு மழை வந்தது கிடையாது. புவி வெப்ப மயமாதல் போன்ற நிகழ்வுகளால் வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை எதிர் பார்க்கலாம். மிகக் கனமழை இருக்குமென 14ம் தேதி முதல் அரசிடம் கூறினோம். அதி கனமழை நேற்று காலை சொல்லப்பட்டது எனக் கூறியுள்ளார்.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader