விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு: பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு !

நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு தரப்பில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதியும், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகக்குறைந்த அளவிலான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

” கேலோ இந்தியா திட்டத்தின் ” கீழ் மாநில வாரியாக விளையாட்டு உள்கட்டமைப்பு தொடர்பாக ஒதுக்கப்பட்ட திட்டங்களின் நிதி குறித்து பதில் அளிக்குமாறு சிவசேனா கட்சியின் எம்.பிக்களான அரவிந்த் கன்பத், சஞ்சய் ஜாதவ், கிருபால் பாலாஜி துமானே, விநாயக் ராவத், தேல்கர் கலாபென் மோகன்பா உள்ளிட்டவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகஸ்ட் 2-ம் தேதி பதில் அளித்து உள்ளார்.

மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலில், ” நாடு முழுவதும் 300 திட்டங்களுக்கு ரூ.2754.28 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக, குஜராத் மாநிலத்தில் 5 திட்டங்களுக்கு ரூ.608.37 கோடியும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 32 திட்டங்களுக்கு ரூ.503.02 கோடியும், அருணாச்சலப் பிரதேசத்தில் 21 திட்டங்களுக்கு 183.72 கோடியும், கர்நாடகாவில் 19 திட்டங்களுக்கு ரூ.128.52 கோடியும், ராஜஸ்தானில் 45 திட்டங்களுக்கு ரூ.112.26 கோடியும், மகாராஷ்டிராவில் 13 திட்டங்களுக்கு ரூ.110.80 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்ட 5  மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் மட்டுமே பாஜக ஆளாத மாநிலம் அதிலும், அந்த மாநிலத்திற்கு இருப்பதிலேயே அதிகபட்சமாக 45 திட்டங்களுக்கு ரூ.112.26 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில், தமிழ்நாட்டிற்கு 5 திட்டங்களுக்கு ரூ.33 கோடியும், ஆந்திரப்பிரதேசத்தின் 7 திட்டங்களுக்கு ரூ.33.80 கோடியும், தெலங்கானாவின் 6 திட்டங்களுக்கு ரூ.24.11 கோடியும், கேரளாவின் 5 திட்டங்களுக்கு ரூ.62.74 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்திற்கு மட்டும் 19 திட்டங்களுக்கு ரூ.128.52 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் 5 திட்டங்களுக்கு ரூ.608.37 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 5 திட்டங்களுக்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. 

link : 

http://164.100.24.220/loksabhaquestions/annex/179/AU2614.pdf

Please complete the required fields.




Back to top button
loader