ஸ்ரீபெரும்புதூர் விவகாரம்: 159 பேரில் 155 பேர் டிஸ்சார்ஜ், வதந்தி பரப்பினால் நடவடிக்கை: திருவள்ளூர் மா.ஆட்சியர் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்கி இருந்த விடுதியில் உணவு உண்ட நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில பெண்களின் நிலை தெரியவில்லை என்றும், அவர்கள் உயிரிழந்து விட்டதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்டவையில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பரவியது. இதையடுத்து, தொழிலாளர்கள் நேற்று இரவில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்ததாக பரப்பப்பட்ட 2 பெண்களுடன் வீடியோ கால் மூலம் பேச வைத்தும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையும் நடத்தினர். வாட்ஸ் அப்பில் பரவிய தகவல் வதந்தி என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. விடுதி கேண்டீன் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்ட பிறகு போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : விஷமான விடுதி உணவு: 8 பேர் எங்கே என தொழிலாளர்கள் போராட்டம்.. மா.ஆட்சியர் விளக்கம் !
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் நேரில் சென்று மேற்கொண்ட ஆய்விற்கு பிறகு கேண்டீன் மூடப்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விடுதியில் இருப்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வெளியில் இருந்து கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுதியின் கேண்டீனில் வழங்கப்பட்ட உணவை உண்டதால் ஏற்பட்ட கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக மொத்தம் 256 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 159 பேர் உள்நோயாளிகளாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். டிசம்பர் 18-ம் தேதி 159 பேரில் 155 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த 4 பேரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஸ்ரீபெரும்புதூர் பெண் தொழிலாளர் உயிரிழந்ததாக பரவும் வாட்ஸ் அப் வதந்தி !
இந்த விவகாரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம், வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.