ஸ்ரீபெரும்புதூர் தொழிலாளர்கள் விவகாரத்தில் நடந்தது என்ன ? போராடியவர்கள் கைது !

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஃபாஸ்கான் என்ற தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலை சுற்றிலும் உள்ள விடுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில், பலரும் பூந்தமல்லிக்கு அருகே உள்ள புதுச்சத்திரம் கிராமத்தில் அமைந்து இருக்கும் இன்டர்நெஷனல் மாரிடைம் அகாடெமியின் விடுதியில் தங்கி உள்ளனர்.

கடந்த புதன்கிழமை விடுதியில் உள்ள பெண்களுக்கு அளிக்கப்பட்ட உணவால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த வீடியோ மற்றும் 8 பெண்கள் உயிரிழந்ததாக/என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை என வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பரவத் தொடங்கியது.

இதையடுத்து, 8 பெண்கள் உயிரிழந்து விட்டதாகக் கூறி பரவிய தகவலால் அவர்களின் நிலைமை குறித்து தெரிய வேண்டும் என சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரவில் இருந்து பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Facebook link 

இதுகுறித்து, வளர்மதி தன்னுடைய முகநூல் பக்கத்தில், ” 8 பெண் தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும், அவர்களின் சடலத்தை தொழிலாளர்களிடம் காட்ட மறுக்கப்படுகிறது. மேலும், பெண் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய ஆண் தொழிலாளர்களை தமிழக காவல்துறை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது ” எனப் பதிவிட்டு இருந்தார்.

Twitter link 

இதேபோல், டிசம்பர் 18-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், ” காஞ்சிபுரம் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்கள் தங்கும் விடுதியில் விஷத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதில் 700 பெண்கள் பாதிப்பு 9 பேர் இதுவரை மரணம், நிர்வாகத்தை காப்பாற்ற கொரானா தொற்று என மடைமாற்றும் அதிகாரிகள்  ” என  வீடியோ வெளிட்டு இருந்தார்.

பெண் தொழிலாளர்களின் போராட்டம் சமூக வலைதளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளியாகி எதிரொலித்த காரணத்தினால் போராட்டத்தின் அடுத்தநாள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி மற்றும் அமைச்சர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் உயிரிழந்ததாக வாட்ஸ் அப்பில் பரவிய தகவல் வதந்தி என்றும், இறந்ததாக கூறும் இரு பெண்களிடம் வீடியோ கால் மூலம் பேசி போராட்டக்காரர்களிடம் காண்பித்து இருந்தார். அதன்பின் போராட்டம் வாபஸ் பெறுவதாக செய்திகளில் வெளியாகியது.

அதேபோல், ஒரகடம், சங்குவார்சத்திரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைச்சர்கள் த.மோ.அன்பரசன், கணேசன், எம்.எல்.யா செல்வப் பெருந்தகை பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர், போராட்டம் வாபஸ் பெறப்படும், வேறொரு இடத்தில் போராட்டம் கலைக்கப்பட்டது.

அதன்பிறகு, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வீடியோ காலில் பேச வைத்த கஸ்தூரி என்ற பெண் வேறொரு பெண் தொழிலாளர் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கஸ்தூரி தாம் இல்லை என்றும் அந்த பெண் பேசும் வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியது.

அந்த வீடியோவில், ” என் பெயர் கஸ்தூரி. நான் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன். ஃபாக்ஸ்கான் கம்பெனியில் நானும் வேலைக்கு போய் கொண்டுதான் இருக்கிறேன். ஐஎம்ஏ ஹாஸ்டலில் தங்கி இருந்தே வேலைக்கு போனேன். அப்போது ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் கஸ்தூரி என்ற பெண் சிகிச்சை எடுத்துட்டு இருக்காங்க. கஸ்தூரி என்ற பெயரில் நிறைய பேர் இருக்காங்க. ஆனால், கலெக்டர் கால் செய்து என்னிடம் பேசும் போது, சிகிச்சையில் இருக்கும் பெண் நான் என்று நினைத்து என்னிடம் மருத்துவமனையில் இருக்கும் பெண் நீயா என கேட்டார்கள், நான் இல்லை எனக் கூறினேன். அப்படி சொல்லியும், அவங்க வீடியோ கால் செய்து நான் தான் அந்த பெண் என செய்தியில் போட்டு விட்டாங்க. அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை. நான் நேற்று காலையிலேயே ஊருக்கு கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன் ” எனப் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகர் அவர்களிடம் பேசுகையில், ” அந்த பெண் விடுதியில் இருந்தவரே. அவரின் அடையாள விவரங்கள் சரியானவைதான். தனிப்பட்ட காரணங்களால் அவர் இப்படி வீடியோ வெளியிட்டு இருக்கலாம் ” எனத் தெரிவித்து இருந்தார்.

ஃபாக்ஸ்கான் விடுதி சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், விடுதியின் உணவு உண்டதில் வயிற்றுப்போக்கு காரணமாக மொத்தம் 256 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 159 பேர் உள்நோயாளிகளாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். டிசம்பர் 18-ம் தேதி 159 பேரில் 155 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த 4 பேரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக ” தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போராடியவர்கள் மீது வழக்கு, கைது : 

போராட்டத்தில் ஈடுபட்ட 67 பெண் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்தாகக் கூறி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 22 பேர் என மொத்தம் 89 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒரகடம் போலீசார் கைது செய்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட பெண் தொழிலாளர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க : ஸ்ரீபெரும்புதூர் விவகாரம்: 159 பேரில் 155 பேர் டிஸ்சார்ஜ், வதந்தி பரப்பினால் நடவடிக்கை: திருவள்ளூர் மா.ஆட்சியர் !

இந்த விவகாரம் குறித்து ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த அருண் என்பவரிடம் பேசுகையில், ” போராடிய பெண் தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் அனுப்பி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கைது செய்து உள்ளனர். ஆனால், இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான நிறுவனத்தின் மீதோ, ஒப்பந்தம் மேற்கொண்டவர் மீதோ எந்த வழக்கும் பதியவில்லை, எந்த நடவடிக்கையும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்களில் 155 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகவும், 4 பேர் சிகிச்சை பெறுவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். யாருக்கும் பாதிப்பில்லை எனக் கூறுவதை நம்ப முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண் நான் இல்லை என ஒரு பெண் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சில பெண்கள் மருத்துவமனையில் இருந்து சென்று விட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அவர்களின் விவரங்களை வெளியிடவில்லை. ஆகையால்தான், சிலர் உயிரிழந்துவிட்டார்கள் என்ற அச்சமும், சந்தேகமும் தொழிலாளர்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.

ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவிற்காக வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல், பெண் உயிரிழந்ததாக வதந்தி பரப்பியதாகக் கூறி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் வீடியோ நீக்கப்பட்டு உள்ளது.

மேலும், பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த ஊழியர் மற்றும் விடுதியை நிர்வகிப்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ” இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தொழிலாளர்களை சமாதானம் செய்யவே சென்றோம். அதற்குள் காவல்துறை தடியடி நடத்தி கலைத்துவிட்டது ” எனத் தெரிவித்து இருந்தனர்.

மேலும் படிக்க : ஸ்ரீபெரும்புதூர் பெண் தொழிலாளர் உயிரிழந்ததாக பரவும் வாட்ஸ் அப் வதந்தி !

ஸ்ரீபெரும்புதூர் நிறுவனத்தின் விடுதியில் தரமற்ற உணவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததாக வாட்ஸ்அப் உள்ளிட்டவையில் பெண் ஒருவரின் புகைப்படம் மற்றும் வீடியோவும் பரவியது. ஆனால், அந்த வீடியோ தவறானது என்றும், அந்த புகைப்படத்தில் இருப்பது உயிரிழந்த பெண் தொழிலாளர் என உறுதிசெய்யப்படவில்லை என்றும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

இந்த விவகாரத்தில் உயிரிழந்தார்கள் அல்லது காணாமல் போனவர்கள் எனத் தொழிலாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை உறுதியான ஆதாரங்கள் ஏதும் வெளியிடவில்லை. அதேபோல், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், தனித்தனியாக பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்களில் உயிரிழந்தவர்கள் என வாட்ஸ் அப் மூலம் பரவிய வதந்திகளால் பெரும் குழப்பம் உருவாகி இருக்கிறது. இதனால் உருவான போராட்டம் தடியடியில் முடிந்து இருக்கிறது.

Please complete the required fields.
Back to top button
loader