தனியார் ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடிப்பு.. பரபரப்பு காரணம்!

ஸ்ரீபெரும்புதூரில் சிவன் கோவில் ஒன்றை பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் கண்டனத்துடன் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, கிளாய் கிராமத்தில் தபோவனம் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ கனக காளீஸ்வரர் எனும் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. தனியார் அறக்கட்டளைக்கு பக்தர்கள் அளித்த நன்கொடையால் கோவில் பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு சன்னதிகள், அன்னதானக் கூடம் உள்ளிட்டவை கட்டப்பட்டு இருக்கிறது.

இக்கோவில் பெரிய ஏரி கலங்கல் பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டதாக வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு கோவில், அதன் அருகே கட்டப்பட்டு இருந்த அன்னதானக் கூடம் மற்றும் அங்கிருந்த தனியார் கேண்டீன் ஒன்றும் இடிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து இடிக்கப்பட்ட கோவிலை நிர்வகிக்கும் திருஞான சம்பந்தர் தபோவனம் அறக்கட்டளையின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” 2004-ம் ஆண்டில் 15 சென்ட் பட்டா நிலம் வாங்கிய பிறகு அந்நிலத்தில் 2014-ல் கோவிலை கட்டி முடித்தோம். அருகே இருப்பது ஓடை புறம்போக்கு நிலம், நமது இடத்திற்கும் கால்வாய்க்கும் 300 அடி தூரம் இருப்பதால் ஏரி தண்ணீர் செல்வதற்கு எந்த இடையூறும் இல்லை. கோவில் விரிவாக்க பணியில் போது அன்னதானக் கூடம், திருக்கல்யாண மண்டபம் உள்ளிட்டவை கட்டி இருந்தோம்.

வியாழக்கிழமை மதியம் 3 மணிக்கு டி.ஆர்.ஓ வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக கூறினார். எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் எதுவும் அளிக்கவில்லை. இதுகுறித்து பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் கூறிவிட்டு வருவதற்குள் 3 பொக்லைன் வைத்து மொத்த கோவிலையும் தரைமட்டமாக்கி உள்ளனர்.

அதேபகுதியில், அதிமுகவைச் சேர்ந்தவர்களால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட தனியார் கேன்டீன் மூலம் மாதம் 4-5 லட்சம் வருமானம் ஈட்டுகிறார்கள். அதும் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், பட்டா நிலத்தில் இருந்த கோவிலையும் இடித்து இருக்கிறார்கள். கோவில் விரிவாக்கப் பணியின் போது, மக்கள் பயன்பாட்டிற்காக பட்டா நிலத்திற்கு வெளியே(புறம்போக்கு நிலம்) கல்யாண மண்டபம், மரங்கள் வைப்பது, குழந்தைகள் விளையாடும் பகுதி அமைக்கப்பட்டு இருந்தது.  ஆனால், எங்கள் கோவில் இருந்த பட்டாவை காட்டியும் அதிகாரிகள் ஏற்கவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” பட்டா நிலத்தில் இருப்பதை நாங்கள் எப்படி இடிக்க முடியும். ஸ்ரீபெரும்புதூர் ஏரியின் கலங்கல் தண்ணீர் வரக் கூடிய ஓடை புறம்போக்கு பகுதியில் கோவிலும், 2 கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனச் சொல்கிறார்கள். ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அனைத்து ஏரிகளிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுப்பு எடுத்து வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாங்களே நிலத்தை அளந்து பார்த்து தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். கோவில் மட்டுமின்றி வழக்கறிஞர் ஒருவர் வைத்திருந்த கட்டிடம் மற்றும் அரசியல் சார்ந்த ஒருவர் வைத்திருந்த கட்டிடமும் அகற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், இது மதரீதியாக பரப்பப்பட்டு வருகிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் சிவன் கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் கோவில் இருந்த பகுதி பட்டா நிலம் என்றும், அதையொட்டி விரிவாக்கப் பணியில் கட்டப்பட்ட கல்யாண மண்டபம் உள்ளிட்டவை அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கோவில் அறக்கட்டளை நிறுவனர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், கோவிலும், 2 கட்டிடங்களும் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதால் தான் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது என வருவாய் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என ஒவ்வொரு முறையும் நீதிபதிகள் கருத்தும், உத்தரவும் பிறப்பித்து வருவது பேசு பொருளாக மாறுவதுண்டு.

2021 செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம், ” தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் காணாமல் போய் உள்ளன, அவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன. எனவே, நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்ற வேண்டும் ” என உத்தரவிட்டு இருந்தது.

2018-ல் சென்னை தலைமை செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோட்டை பாளையத்தமன் கோவிலை இடிக்க உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டு இருந்தது.

மேலும் படிக்க :  தஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில், தஞ்சை மாவட்டத்தில் புளியந்தோப்பு கிராமத்தில் சமுத்திர ஏரிப் பகுதியை ஆக்கிரமித்து 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்து இருந்த ஆதிமாரியம்மன் கோவில், ராமமூர்த்தி சுவாமிகள் சமாதியை பொதுப்பணித்துத்துறை அதிகாரிகள் அகற்றிய போது சிவலிங்கம் இடிந்து விழுந்த காட்சி இதேபோல் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.
Back to top button
loader