This article is from Dec 18, 2021

விஷமான விடுதி உணவு: 8 பேர் எங்கே என தொழிலாளர்கள் போராட்டம்.. மா.ஆட்சியர் விளக்கம் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்காக பூந்தமல்லி அருகே விடுதி உள்ளது. கடந்த புதன்கிழமை விடுதியில் தங்கி இருந்த பெண் தொழிலாளர்கள் உண்ட உணவால் நூற்றுக்கணக்கான பெண்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள், குணமடைந்தவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவர்களில் சிலர் இன்னும் திரும்பவில்லை என்றும், நிறுவனத்தின் தரப்பில் சரியான பதில் இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், காணாமல் போன 8 பெண்கள் உயிரிழந்து உள்ளதாகக் கூறி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று நள்ளிரவில் இருந்து பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து போராட்டக் களத்தில் இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த அருண் என்பவரிடம் பேசுகையில், ” செல்போன் பாகங்கள் உற்பத்திக்கான Foxconn எனும் தனியார் நிறுவனத்தில் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தென்மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். பெண் தொழிலாளர்களுக்காக இயங்கி வரும் விடுதி தரமற்ற உணவை அளித்து வருகிறது.
சமீபத்தில் தரமற்ற உணவால் 200-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம் என்றும், உணவு குறித்து மட்டுமே செய்திகள் வெளியாகின. ஆனால், தரமற்ற உணவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் 8 தொழிலாளர்கள் நிலை என்ன, உயிருடன் உள்ளார்களா அல்லது இல்லையா எனத் தெரியவில்லை.
.
தொழிலாளர்களின் உடைமைகள் உள்ளே இருக்கும் போதும் கூட விடுதியை மூடி தொழிலாளர்களை வெளியே அனுப்பி உள்ளனர், தொழிற்சாலைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. 8 தொழிலாளர்களின் நிலை குறித்து நேற்று இரவில் இருந்து போராட்டம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.
.
போராட்டக் களத்தில் உள்ள தொழிலாளரிடம் பேசுகையில், ” பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியாமல் நேற்று இரவில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தொழிலாளர்கள் கைகளை சரியாக கழுவாமல் உணவு உண்டதே வாந்தி, மயக்கத்திற்கு காரணம் என நிறுவனத்தின் தரப்பில் காரணத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள். இதைக் காரணம் எனக் கூறினால் நம்ப முடிகிறதா ?..
பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களில் 2 பேரை மட்டும் வீடியோ மூலம் காவல்துறை பேச வைத்துள்ளனர். எனினும், மீதமுள்ளவர்களின் நிலைமை எனத் தெரியவில்லை. அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், மருத்துவமனையில் இருந்து சென்று விட்டதாகவும் பதில் அளிக்கின்றனர். மீதமுள்ள தொழிலாளர்களின் நிலை அறியாமல் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் ” எனத் தெரிவித்து இருந்தார்.
.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகர் அவர்களிடம் பேசுகையில், ” போராட்டம் நடைபெறும் இடத்தில் உள்ளேன். விசாரித்து வருகின்றேன். விரைவில் விவரங்களை பகிர்வதாகத் ” தெரிவித்து இருந்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் எந்த அழைப்பையும் நிறுவனம் தரப்பில் எடுக்கவில்லை.
.
இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, விடுதி உணவால் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பெண்கள் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி. உடல்நலம் பாதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக பரவும் வீடியோ தவறானது எனத் தெரிவித்து உள்ளார். மேலும், 2 பெண்களிடம் வீடியோ காலில் பேசி போராட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களிடம் காண்பித்து இருக்கிறார் ” எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
Please complete the required fields.




Back to top button
loader