ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக பெரியார் சிலை நிறுவப்பட்டதின் வரலாறு !

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக உள்ள ’கடவுள் இல்லை’ என்ற வாசகம் அகற்றப்படும் என அக்கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்வதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரையில், 100வது தொகுதியாக நேற்றைய தினம் (நவ.07) ஸ்ரீரங்கத்தில் பேசினார்.
அண்ணாமலை பேசியது :
”ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியே அவர்கள் (திமுக) ஆட்சிக்கு வந்த பிறகு 1967ல் ஒரு பலகையை வைத்திருக்கின்றார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள், ஏமாளி. அதனால் கடவுளை யாரும் நம்பாதீர்கள் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரு கம்பத்தை வைத்து கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்கள். இந்துக்கள் நாம் அமைதியான வழியிலே அற வழியில் வாழ்க்கை வாழ்பவர்கள்.
அதனால் இன்றைக்கு இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் இருந்து பாரதிய ஜனதா கட்சி உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது முதல் வேலையாக அந்த கம்பத்தை அப்புறப்படுத்தி ஆழ்வார்கள், நாயன்மார்கள் சிலைகள் அங்கே வைக்கப்படும். தமிழ்ப் புலவர்களின் சிலைகள் வைக்கப்படும். தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் சிலை அங்கே வைக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
‘கடவுள் இல்லை’ என்கிற வாசகத்தை மட்டும் அகற்றுவதாக அண்ணாமலை பேசினார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த வாக்கியமே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பாக உள்ள பெரியார் சிலை பீடத்தில் தான் எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு பார்க்கையில் பெரியார் சிலையை அகற்றுவேன் என்றுதான் அண்ணாமலை மறைமுகமாக கூறியுள்ளார்.
பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் உள்ள வாசகம்.
“கடவுளை மற, மனிதனை நினை !”
“கடவுள் இல்லை ! கடவுள் இல்லை ! கடவுள் இல்லவே இல்லை !”
முதல் முறை அல்ல :
ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை நிறுவத் தொடங்கிய காலத்திலேயே இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவ அமைப்பினரால் எதிர்ப்புகள் வந்துள்ளது. பெரியார் சிலை உடைக்க வேண்டுமெனச் சர்ச்சைக்குரிய கருத்தினை கடந்த ஆண்டு சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் பேசினார். அத்தகைய பேச்சுக்கு சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைதும் செய்தனர்.
கனல் கண்ணன் அப்படிப் பேசியபோது ’அவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியே அந்தச் சிலை இருக்க வேண்டுமா? என 1,000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால் இருக்கக் கூடாது என்றுதான் சொல்வார்கள்’ என அண்ணாமலை கூறினார். அன்று கனல் கண்ணன் பேசியதையே இன்று அண்ணாமலை வேறு விதமாகப் பேசியுள்ளார். அதேபோல் கனல் கண்ணனுக்கு ஆதரவான கருத்தினைத்தான் ஹெச்.ராஜாவும் பேசியிருந்தார்.
ஸ்ரீரங்கம் பெரியார் சிலை :
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டது தொடர்பாக சீனு.விடுதலை அரசு பேசிய வீடியோ ஒன்று கிடைக்கப்பட்டது. அதில் சிலை நிறுவக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் தொடக்கி சிலை நிறுவியது வரை பல்வேறு ஆதாரங்களைப் பதிவு செய்துள்ளார்.
இந்த சிலை நிறுவுவதற்கான முதல் முயற்சி 1969ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் கழக தொண்டர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானம் குறித்து 1969, ஜூலை 28ம் தேதி விடுதலை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் “சீரங்கம் நகரத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலை அமைக்க ஒரு இடம் தேர்ந்து எடுத்து அது சம்மந்தமான வேலைகளை துரிதமாக செய்வது” என்று உள்ளது. கோவிலுக்கு முன்னர்தான் சிலை நிறுவ வேண்டுமென அத்தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.
அதன்படி நகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டு, அன்றைய நகர் மன்ற உறுப்பினர்களும் ஒருமனதாகச் சிலை அமைக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். அப்போது வெங்கடேஸ்வர தீட்சிதர் என்பவர் ஸ்ரீரங்கம் நகர் மன்ற தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 1973ல் 144 சதுர அடி (12×12) நிலம் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது. 1975ம் ஆண்டு திராவிடர் கழகத்திடம் அந்நிலமும் ஒப்படைக்கப்படுகிறது. அப்போது பெரியார் சிலை நிறுவ உள்ள இடம் என்கிற கல்வெட்டினை அந்த இடத்தில் திராவிடர் கழகத்தினர் வைத்துள்ளனர். காலப்போக்கில் அந்த கல்வெட்டு சிதைந்துவிட்டதினால் மீண்டும் இரண்டாவது முறையாக 1996, டிசம்பர் மாதம் 4ம் தேதி ஆசிரியர் வீரமணி தலைமையில் மீண்டும் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது.
அரசு ஒதுக்கிய இடத்தில் சிலை அமைக்க 2002ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்குச் சிலை அமைப்புக் குழு செயலாளர் கோ.பாலு என்பவர் கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில் சிலை பற்றி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு 2004ம் ஆண்டு சில மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.
தொடர்ச்சியான முயற்சியில் 2006ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது சிலை நிறுவும் பணிகள் தொடங்கியது. அன்றே பாஜகவினர் சிலர் பெரியார் சிலை நிறுவக்கூடாது எனப் பிரச்சனை செய்ததாக சீனு.விடுதலை அரசு கூறுகிறார்.
மேற்கொண்டு அவர் கூறியது, “2006, டிசம்பர் 16ம் தேதி சிலை திறப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகின. அதே ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி அதிகாலை பெரியாரின் சிலை சங்க பரிவார் கும்பலினால் உடைக்கப்படுகிறது. இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுகிறது. ஒரு கட்டத்தில் பெரியார் சிலை இடிப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தமிழக பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டனர்.
அப்போது ஆசிரியர் வீரமணி அவர்கள் அந்த இடத்தில் புதிய சிலை நிறுவ வேண்டும் என எங்களுக்கு உத்தரவிட்டார். 7ம் தேதி அதிகாலை பெரியாரின் சிமென்ட் சிலை இடிக்கப்படுகிறது. 8ம் தேதி இரவு அதே இடத்தில் வெண்கலச் சிலை வைக்கப்பட்டு, திட்டமிட்ட நாளில் சிலையும் திறக்கப்பட்டது. அந்த சிலை வீம்புக்காக நிறுவப்பட்டது அல்ல. அரசின் உத்தரவுப்படி, சட்டப்படி நிறுவப்பட்டது” எனக் கூறியுள்ளார்.
சிலை இடிக்கப்பட்ட அன்று (7.12.2006) வெளியான விடுதலை நாளிதழிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது. அதில், “சீரங்கத்தில் தந்தை பெரியார் சிலை உடைப்பு, பார்ப்பனர் உள்பட அய்வர் கைது” என அவர்களில் பெயர் பட்டியல் குறிப்பிட்டுள்ளது.
-
-
- நாளிதழில் பெயர் தெளிவாக தெரியவில்லை. (மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர், கோவை)
- ராஜசேகரன் (மாநில இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளர், பீளமேடு, கோவை)
- செந்தில் குமார் (மாவட்ட பொது செயலாளர், இந்து மக்கள் கட்சி, மதுக்கரை, கோவை)
- சுஜீத் (கோவை)
- திருவரங்கம் ராகவன் (இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர், திருச்சி)
-
இப்படி ஸ்ரீரங்கம் பெரியார் சிலை மீது தொடக்கம் முதலே பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. அண்ணாமலை, ஹெச்.ராஜா, கனல் கண்ணன் இன்னும் பலர் அதன் ஒரு அங்கம் தான்.
‘கடவுள் இல்லை’ என்கிற பெரியாரின் வாசகம் நீக்கப்படும் என்று அண்ணாமலை கூறியதின் வாயிலாக, பெரியார் சிலை அகற்றம் பற்றிய தனது எண்ணத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
சிலை அகற்றும் அரசியல் பாஜகவிற்கு ஒன்றும் புதிதல்ல. பாஜக ஒரு மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அங்கு அதற்கு முந்தைய அரசு வைத்திருந்த தலைவர்களின் சிலைகளை இடித்திருக்கின்றன. உதாரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வந்த திரிபுராவில் 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அவர்கள் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே புரட்சியாளர் லெனின் சிலைகள் இடிக்கப்பட்டன.
எப்படி இந்திய அளவில் பாஜகவினர் இடதுசாரிகளை தங்களின் கொள்கை எதிரியாகக் கருதுகிறார்களோ, அப்படி தமிழ்நாட்டில் பாஜகவினர் பெரியாரை தங்களின் எதிரியாகக் கருதுகின்றனர். பெரியாருக்கு ஆதரவாகப் பொதுவெளியில் பேசக்கூடிய பிரபலங்களுக்கு எதிராக வன்மத்தையும், அவதூறையும் வீசுகின்றனர். அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்கிற பிம்பத்தை உருவாக்க வலதுசாரிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
எனவே தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், இந்து விதவைகள் மறுமணம், பெண் கல்வி, இந்துப் பெண்களுக்கான சொத்துரிமை, இட ஒதுக்கீடு என இந்துக்களின் பல்வேறு சுயமரியாதைக்கும் சமூக நீதிக்கும் அடித்தளமிட்டவர்களில் ஒருவர் பெரியார் என்பதை இச்சமூகத்திற்குச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய தேவையுள்ளது.
ஆதாரங்கள் :