This article is from Dec 10, 2020

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கைவிடப்பட்ட கோவிலை மீட்டெடுத்த இளைஞர்கள் குழு!

கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே செடி, கொடிகளால் சூழப்பட்டு பாழடைந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்த கோவிலை இளைஞர்கள் அமைப்பு ஒன்று மீட்டு வழிபாட்டுக்கு உகந்த கோவிலாக மாற்றிய புகைப்படங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பாராட்டுகளுடன் வைரலாகி வருகிறது.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கஞ்சம் எனும் பகுதியில் சாலை ஓரத்தில் அமைந்து இருந்த வீரபத்ரசாமி கோவில் முழுவதும் களைகள் மற்றும் புதர்களால் சூழப்பட்டு பாழடைந்து காணப்பட்டது. கோவிலின் அவலநிலை குறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் Yuva Brigade எனும் அமைப்பு கோவிலை புனரமைக்கும் பணியை கையில் எடுத்தனர்.

உள்ளூர் மக்களிடம் அனுமதி பெறப்பட்டு கோவிலை புனரமைக்க ஓர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் என இரண்டு மாதங்கள் தொடர்ந்து பணியாற்றி கோவிலை முழுவதுமாக மாற்றியுள்ளனர்.

Archive link

தங்களின் பணி குறித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டே வந்ததால் பலரும் சிமெண்ட், பெயிண்ட் மற்றும் சுண்ணாம்பு போன்ற தேவையானவற்றை வழங்கி பங்களித்து உள்ளனர்.

புனரமைப்பு பணிகள் நடைபெறும் முன்பே அக்கோவிலின் கருவறையில் வழிபாட்டு சிலைகள் இல்லை என்பதை அறிந்து, பணிகள் முடிந்ததும் அங்கே ஒரு சிலையை நிறுவியதோடு இரும்பு கதவையும் பொருத்தி உள்ளனர். பின்னர், கோவிலுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டது.

புதுப்பித்தல் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு மூன்றாவது ” கார்த்திகை சோமாவாரா ” நாளின் போது கோவில் தீப ஒளியால் மின்னியுள்ளது. உள்ளூர் கிராம மக்களும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் கோவிலின் சாவி கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது என Yuva Brigade அமைப்பின் சந்திரசேகர் என்பவர் கூறியதாக ஸ்டார் ஆப் மைசூர் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

Archive link

இந்தியாவில் நூற்றாண்டுகள் கடந்த பல கோவில்கள் முதல் சிறு சிறு கோவில்கள், கலை அமைப்புகள் பல மக்களின் பார்வையில் இருந்து விலகி கைவிடப்பட்ட நிலைக்கு சென்றுள்ளன.

மேலும் படிக்க : 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் இளைஞர்களால் மீட்பு.

சில ஆண்டுகளுக்கு முன்பாக புதுக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் ஒன்றை இளைஞர்கள் அமைப்புகள் புனரமைத்து மீட்ட பாராட்டுக்குரிய செயல் குறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

Please complete the required fields.




Back to top button
loader