This article is from Aug 05, 2019

காஷ்மீர் மாநிலமல்ல, 370பிரிவு ரத்து!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான மசோதாவை அறிவித்தார்.

மேலும், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் மசோதாவையும் தாக்கல் செய்தார். அதில், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 , 35ஏ ரத்து ஆகியது மட்டுமின்றி மாநில அந்தஸ்தையும் இழக்க உள்ளது. இந்த தீர்மானத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இந்திய சட்டப்பிரிவு 370-இன் அம்சங்கள் என்ன?

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீருக்கு தற்காலிகமான சிறப்பு அந்தஸ்தை அளித்தது. இதன் படி மற்ற மாநிலங்களை விட அதிகளவில் மாநில சுயாட்சியை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கொண்டிருந்தது.

ராணுவம் , வெளியுறவுத்துறை, நிதி மற்றும் தகவல் தொடர்பு துறை தவிர மற்ற துறைகளில் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் அம்மாநில சட்டசபையின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே செல்லும்.

வேறு மாநிலத்தை சேர்ந்த நபர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அம்மாநிலத்தவர் மட்டுமே வாங்க முடியும். ஒருவேளை பெண்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தால் நிலம் வாங்கும் உரிமையை இழக்க நேரிடும். ஆனால் ஆண்கள் வேறு மாநிலத்தவரை மணமுடித்தாலும் அவர்களுக்கு நிலம் வாங்கும் உரிமை உண்டு.

சிறப்பு அந்தஸ்தின் படி அம்மாநிலத்திற்கு தனி அரசியல் சாசனமும் உண்டு. மாநில சட்டப்பிரிவு 360-இன் படி மாநிலத்தில் நிதி அவசரநிலையை கொண்டு வர மத்திய அரசிற்கு உரிமை இல்லை. போர் மற்றும் வெளியிலிருத்து அச்சுறுத்தல் ஏற்படும் போது மட்டுமே அவசரநிலையை பிரகடனப்படுத்த முடியும்.வேறு காரணங்களுக்காக மாநில அரசின் ஒப்புதல் இன்றி அவசரநிலையை கொண்டு வர இயலாது.

இந்திய மற்ற மாநில சட்டமன்ற பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆனால் ஜம்மு காஷ்மீரில் 6 ஆண்டுகள்.

மற்ற மாநில ஆளுநர்களை இந்திய குடியரசுத்தலைவர் நேரடியாக நியமிக்கிறார். ஆனால் அங்கே மாநில முதல்வரை ஆலோசித்தப்பிறகு தான் ஆளுநரை நியமிக்க முடியும் என்று இருந்தது.

காஷ்மீர் வரலாற்றை காணொளியில் காண்க :

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டால் அங்குள்ள அரசிற்கு உள்ள அதிகாரம் என்ன ?, யூனியன் பிரதேசம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு உள்ள வேறுபாடு என்ன என்பதை விரிவாக காண்போம்.

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களும், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தமன், தியூ, லட்சத்தீவுகள், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, டெல்லி உள்பட மொத்தம் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில், டெல்லி மற்றும் புதுச்சேரியில் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டவையாக உள்ளன. மற்ற யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசு நியமிக்கும் பிரதிநிதிகளால் இயங்கி வருகிறது.

ஒப்பிடுதல் மாநிலம் யூனியன் பிரதேசம்
அர்த்தம் 

மாநில அரசு என்பது தங்களுக்கென்று ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் உருவாக்குவது என்பதை வரையறுக்கிறது.

யூனியன் பிரதேசங்கள் என்பது மத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட்டு, நிர்வாகம் செய்யப்படும் பகுதியே யூனியன் பிரதேசம் என வரையறுக்கப்படுகிறது.

மத்திய அரசுடன் உண்டான உறவு கூட்டாட்சி முறை

 

அவர்களை சார்ந்து
தலைவர் ஆளுநர் குடியரசுத்தலைவர்
நிர்வாகம்  முதலமைச்சர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். நிர்வகிப்பவர், குடியரசுத்தலைவர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்.

 

சுயாட்சி உண்டு இல்லை

 

இந்திய மாநிலங்களில் இயங்கும் அரசானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் நேரடியாக நிர்வகிக்கப்படும். மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத்தலைவர் மூலம் நியமிக்கப்படுவர். எனினும், மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் முதலமைச்சரிடமே சட்டப்படி இருக்கும். மத்திய, மாநில அரசிற்கு இடையேயான உறவு கூட்டாட்சி முறையில் இயங்குகிறது.

ஆனால், யூனியன் பிரதேசங்களில் குறைந்த அளவிலான அதிகாரம் மட்டுமே இருக்கும். இந்தியாவில் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் மட்டுமே சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர்கள் இருப்பர். அவற்றை தவிர மீதமுள்ள யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசின் நேரடி நிர்வாகம் நடைமுறையில் உள்ளது. அங்கு துணைநிலை ஆளுநர் என்பவரை நிர்வாக பிரதிநிதியாக குடியரசுத்தலைவர் நியமிப்பார்.

டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் தனி முதலமைச்சர், சட்டமன்றம் என ஒரு மாநில அரசை போன்று இருந்தாலும் அவர்களுக்கு என முழுமையான அதிகாரம் இல்லை. போலீஸ், பாதுகாப்பு உள்ளிட்ட அதிகாரம் துணைநிலை ஆளுநர் வசம் இருக்கும். அங்குள்ள முதலமைச்சர் யூனியனின் நாள்தோறும் நடவடிக்கையை கவனித்துக் கொள்வது உள்ளிட்ட அதிகாரம் இருக்கும்.

மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட ஏனைய எந்தவொரு திட்டமாக இருந்தாலும் ஆளுநரின் ஒப்புதல் அவசியம். ஆகையால் தான், டெல்லி மற்றும் புதுச்சேரி அரசிற்கும், துணைநிலை ஆளுநருக்கும் மோதல்கள் உருவாகின்றன. புதுச்சேரி அரசிற்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு உண்டான நிர்வாக மோதல் தொடர்பான நீதிமன்ற வழக்கில் அரசின் தினசரி நடவடிக்கையில் தலையிட்டு, ஆவணங்களை கோரக் கூடாது என தீர்ப்பளித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தையும் இழந்த பிறகு, உருவாக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் நேரடி நிர்வாகம் செயல்படும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் துணைநிலை ஆளுநர், குடியரசுத்தலைவர் கையில் அதிகாரம் இருக்கும்.

Please complete the required fields.




Back to top button
loader