வல்லபாய் படேல் சிலை நிதியளித்தது யார்? யார் ?

குஜராத் மாநிலத்தின் நர்மதை நதியில் சர்தார் சரோவர் அணைப் பகுதியில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரம் கொண்ட பிரம்மாண்டமான சிலையை நிறுவினார் பிரதமர் மோடி. பிரதமரின் கனவு திட்டமான படேல் சிலை தொடங்கியது முதலே எதிர்மறை கேள்விகள் எழுந்தன. சிலை நிறுவிய பிறகு எழுந்த கேள்விகளான, இதற்கான நிதி யார் அளித்தது மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட சிலையா என்பது பற்றி விரிவாக காண்போம்.

படேல் சிலை : 

2010-ம் ஆண்டில் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த பொழுது சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். 2013-ல் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. டிசம்பர் 2013-ல் “ படேல் ராஷ்ட்ரீய ஏக்தா அறக்கட்டளை “ அமைக்கப்பட்டு பணிகள் வேகமாகத் துவங்கின.

படேல் சிலைக்கு 50,00,000 கிலோ இரும்பு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான இரும்பு இந்தியாவின் பல மாநிலங்களில் அறக்கட்டளையின் சார்பில் பிரச்சாரம் மூலம் சேகரிக்கப்பட்டது. 2014-ல் லார்சன் அன்ட் டர்போ எனும் தனியார் நிறுவனத்திற்கு ரூ.2989 கோடிக்கு சிலை அமைக்கும் காண்ட்ராக்ட் ஒப்பந்தமானது.

சிலைக்கும் சீனாவிற்கும் தொடர்புண்டா ?

சிலை நிறுவப்பட்ட பின்னர் படேல் சிலை “ Made in china “ சீனாவில் தயாரிக்கப்பட்டது, சீனாவில் தயாரானப் பொருட்களை வைத்து சிலை நிறுவி உள்ளனர் என சமூக வலைத்தளங்களில் அரசியல் சண்டைகள் மூண்டன. காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியும் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்தார்.

2015-ல் வெளியான எல்&டி நிறுவனத்தின் அறிக்கையின்படி, படேல் சிலையின் அனைத்து பணிகளும் இந்தியாவிலேயே நடைபெறும், சிலை மீது பொருத்தப்படும் வெண்கல தகடுகள் மட்டும் சீனாவில் இருந்து பெறப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இது மொத்த சிலை பணியில் 9 சதவீதத்திற்கும் குறைவுதான் என்கிறார்கள்.

படேல் சிலையின் பணியில் மொத்தம் 4,076 தொழிலாளர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலைக்கு வெண்கல தகடு பொருத்தும் பணியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றியுள்ளனர். சில நூறுகளில் சீனர்கள் இருந்துள்ளனர். இப்பணிகள் செப்டம்பர் 2017-ல் இருந்து தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

சிலை குறித்த பிரிட்டனின் சர்ச்சைக்குரிய கருத்து :

இங்கிலாந்திடம் இருந்து இந்திய பெற்ற 1 பில்லியன் யூரோக்கும் அதிகமான நிதி உதவியில் உலகின் மிக உயரமான சிலை நிறுவப்பட்டு உள்ளது என daily mail-ல் செய்தி வெளியாகி இங்கிலாந்து ஊடகங்களை அதிர்ச்சியடையச் செய்தது.

படேல் சிலை அமைந்த தருணத்தில் இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி பீட்டர் போன், “ நம்மிடம் இருந்து 1 பில்லியன் யூரோவை நிதியாக பெற்ற அதே தருணத்தில் 330 மில்லியன் யூரோ செலவில் சிலை முட்டாள்தனமாகும் மற்றும் இது போன்றவை மக்களை முட்டாளாக்கும் செயல் “ என விமர்சனம் செய்து இருந்தார்.

சிலைக்கான நிதி :

சிலைக்கு நிதி வழங்கிய எண்ணெய் நிறுவனங்கள் என பல பதிவுகள் பகிரப்படுகின்றன . நிதி அளித்தது உண்மையாக இருந்தாலும் அதில் குறிப்பிட்டுள்ள எண்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக இருக்கிறது .

குஜராத்தில் அமைக்கப்பட்ட படேல் சிலைக்கான நிதி “ படேல் ராஷ்ட்ரீய ஏக்தா அறக்கட்டளை “ மூலம் பெறப்பட்டது. இதற்கு மத்திய அரசின் சார்பில் 200 கோடி வழங்கப்பட்டது. குஜராத் மாநில அரசு 2013-2019 வரையிலான நிதியாண்டு கணக்கில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுகள் தவிர சில பொதுத்துறை நிறுவனங்களும் படேல் சிலை அமைய நிதியுதவி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CAG (comptroller and auditor general of India) அறிக்கையின்படி, ஐந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி, பிபிசிஎல், ஐஓசிஎல், எச்பிசிஎல் மற்றும் ஓஐஎல் ஆகிய நிறுவனங்கள் ரூ.146.83 கோடி நிதியை படேல் சிலை நிறுவ வழங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது ஆண்டுதோறும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்படும் CSR நிதி மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அளித்த நிதி விவரம் :

1.       எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் ரூ.50 கோடி
2.       இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ.21.83 கோடி
3.       பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ.25 கோடி
4.       இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ.25 கோடி
5.       ஆயில் இந்தியா லிமிடெட் ரூ.25 கோடி

 

எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி குஜராத் மினரல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்(GMM) படேல் சிலைக்கு ரூ.11 கோடி அளித்துள்ளது.

ஆனால், பொதுத்துறை நிறுவனங்கள் 2500 கோடி நிதி அளித்ததாக சமூக வலைத்தளத்தில் வதந்திகள், தவறான தகவல்கள் பரவி வருகின்றது.

சிலைக்கான நிதியால் செய்யக் கூடியவை :

சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைய ரூ.2989 கோடி செலவிடப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்த நிதியில் புதிதாக 2 ஐஐடி, 2 எய்ம்ஸ் மருத்துவமனை, 75 மெகாவார்ட் உற்பத்தி செய்யும் 5 சூரிய மின் உற்பத்தி ஆலை, 5 ஐஐஎம், 6 முறை செவ்வாய் கிரகப் பணியை இஸ்ரோவில் மேற்கொண்டு இருக்கலாம் என மேற்கோள்காட்டி வருகின்றனர்.

இத்தொகை மூலம் 40,192 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுத்து இருக்கலாம், 162 சிறிய நீர்ப்பாசத் திட்டங்களை புனரமைத்து மற்றும் மறுசீரமைப்பு செய்து இருக்கலாம். 425 சிறிய தடுப்பணைகள் கட்டலாம்.

இந்த திட்டம் தொடங்கிய முதல் அங்குள்ள பழங்குடியினர் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் 72  கிராமத்தைச் சேர்ந்த 75,000 பழங்குடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கடிதங்கள் வாயிலாகவும், கிராம கூட்டமைப்பு வாயிலாகவும் தெரிவித்து வந்தனர்.

குஜராத் மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்தியாவின் இரும்பு மனிதர் தேசிய அடையாளமாக இருக்கிறார். இது பெருமையான விசயமாக இருந்தாலும் அதற்கான தொகையில் பல திட்டங்கள் செயல்படுத்த முடியும், நிதி இல்லாமல் பாதியில் நிற்கும் திட்டங்கள் பற்றி நினைக்கையில் சிலை அவசியம் தானா என்றும் நினைக்கத் தூண்டுகிறது.

ReportNo 18 of 2018 – Compliance Audit on General Purpose Financial Reports of Central Public Sector Enterprises of Union Government Commercial

GMDC 53rd-Annual Report 2015-16

Sardar VallabhbhaiPatel Statue: Statue of Unity location, height, cost, other facts

Statue of Unity could have paid for 2 IITs, 5 IIMs and many agri projects

Statue of Unity: CSR Funds from Several PSUs Diverted for Construction

Statue of Unity inauguration: 8 astonishing facts about world’s tallest statue dedicated to Sardar Patel

Statue of Unity hits green hurdle

Please complete the required fields.




Back to top button