மதன் கௌரி சொன்னது உண்மையா ?

Youtube சமூக வலைத்தளத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெற்றி பெற்று விட்டோம் என மதன் கௌரி என்பவர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், என்னவெல்லாம் கூறினார் மற்றும் அவற்றில் எதுவெல்லாம் பொருந்தாத செய்தி என்பதை விளக்கமாக காண்போம்.

மதன் கௌரி : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால், இதை எந்தவொரு ஊடகமும் பேசவில்லை.

உண்மை விளக்கம் : 2018-2023-ம் ஆண்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை இயக்குவதற்கான அனுமதி புதுப்பித்தல் ஆணையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வழங்கவில்லை. இந்நிலையில், மே 18-19 தேதிகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்திய சோதனையில் அனுமதி பெறாமல் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடப்பதை அறிந்து ஆலையை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், 24-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த செய்தி அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளியாகின. ஆனால், எந்தவொரு ஊடகத்திலும் இந்த செய்தி வெளியாகவில்லை என்பது முற்றிலும் தவறான ஒன்று. அதேபோல் இதற்கு முன்பாகவே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் மூட உத்தரவு பிறப்பித்தது. எனினும், உச்ச நீதிமன்றத்தால் மீண்டும் ஆலை இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இது நிரந்தர தீர்வு அல்ல.

மதன் கௌரி : சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைடின் புதிய ஆலைகளை கட்டக் கூடாது என ஆணை பிறப்பித்துள்ளது.

உண்மை விளக்கம் : ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. எனினும், இதற்கான முடிவுகள் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் எடுக்கப்படும். ஸ்டெர்லைட்டின் 2-வது ஆலையின் சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பங்கள் பற்றிய முடிவை சம்பந்தப்பட்ட ஆணையம் எடுக்கும். அதற்கான காலக்கெடு செப்டம்பர் 23-ம் தேதி வரை உள்ளது.

மதன் கௌரி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெற்றி பெற்றும் ஏன் அதை பற்றி பேசாமல் பதற்றமாகவே உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி பெற்றும் போலீசால் தாக்கப்பட்டது போன்று ஸ்டெர்லைட் போராட்டத்திலும் தாக்கப்பட்டதற்கு அரசியலே காரணம். மீடியாக்களும் போராட்டம் குறித்தே பேசுகிறார்கள், வெற்றி பெற்றதை கூறுவதில்லை.

உண்மை விளக்கம் : மின்சாரம் துண்டிக்கப்பட்ட செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. இந்த போராட்டம் வெற்றி பெற்றது என்பது தவறானது. தவறான செய்தியை ஏன் ஊடகம் வெளியிட வேண்டும்.

மதன் கௌரி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நாம் வெற்றி பெற்றதை அரசியல்வாதிகள் மற்றும் மீடியாக்கள் கூறாமல் இருக்கலாம். ஆனால், வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் குறைந்து வருகிறது.

உண்மை விளக்கம் : மே 24-ம் தேதி மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆலை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் குறைந்தன. ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவமான வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் குறைவது ஒன்றும் புதிதல்ல.

வேதாந்தா பங்குகள் 4.95 சதவீதம் குறைந்து ஜூன் 28,2017-ல் ரூ.240.15 ஆக இருந்த குறைந்தபட்ச மதிப்பை நெருங்குகிறது. இந்த ஆண்டு மட்டும் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 23.4 சதவீதம் சரிந்துள்ளது. எனினும், பங்குகள் ஏறுவதும், சரிவதும் மாறி மாறி நிகழ்கின்றன என்பதை இதிலிருந்து அறியலாம்.

மதன் கௌரி : தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக வதந்திகள் பரவுவதை தடுக்க இணைய சேவை 5 நாட்களுக்கு அரசு தடை செய்து வைத்துள்ளனர். இன்டர்நெட் இல்லாமல் மின்னணு பரிமாற்றம், ஏ.டி.எம் போன்றவை இயங்காததால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களை மட்டும் தடை செய்து இன்டர்நெட் சேவை வழங்க வேண்டும். Cambridge Analytica முறைகேடுக்கு பின் ஃபேஸ்புக் நிறுவனம் அரசாங்கத்திற்கு உதவி செய்வதாக கூறியுள்ளனர். ஆகையால்,  மும்பையில் உள்ள ஃபேஸ்புக் மற்றும் கூகுள் அலுவலகத்திற்கு அரசு சார்பில் போன் செய்து பேசினால் அவர்கள் உதவி செய்வார்கள்.

உண்மை விளக்கம் :  ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை மட்டும் தடை செய்வதால் செய்திகள் பரவாமல் இருக்குமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. இன்டர்நெட்க்கு இருந்தால் VPN சேவையைப் பயன்படுத்தி location மாற்றி சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த இயலும். எனவே, இன்டர்நெட் சேவையை தடை செய்துள்ளனர். இதனால் மக்கள் பணம் எடுக்க முடியாமலும் வர்த்தக ரீதியாகவும் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீதிமன்றமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பல தடைகளை விதித்து ஆலையை மூட உத்தரவிட்ட போதிலும், உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியுடன் ஆலை இயங்கியதை அறிந்திருப்போம். மக்களும் பல ஆண்டுகளாக போராடியும், பல உயிர்களை தியாகம் செய்தும் இன்று வரை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக பூட்டி சீல் வைக்கப்படவில்லை. தற்போது கிடைப்பது அனைத்தும் தற்காலிக வெற்றி என்று கூட சொல்ல முடியாது. அரசியல் மற்றும் பெரும் முதலாளிகளின் ஆட்டத்தில் உயிரை விடுவது அப்பாவி பொதுமக்களே. எப்பொழுது மக்களின் உயிரை பறிக்கும் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறதோ அன்றே வெற்றி கிடைத்ததாக அர்த்தம்.

மதன் கௌரி தாம் வெளியிட்ட பதிவில் ஸ்டெர்லைட் போராட்டம் வெற்றி பெற்றதாக கூறியது தவறு என்று அறிந்தும் வீடியோ பதிவை நீக்காமல் இருப்பது தவறானது. மக்களுக்கு தவறான செய்தி சென்றடைய கூடாது என்று நினைத்து இருந்தால் வீடியோவை நீக்கி இருப்பார் அல்லது இதற்காக மறுப்பு செய்தி கூறி இருந்தால் எற்புடையதாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக வீடியோவின் thumbnail போட்டோவில் Temporarily என்று மாற்றியுள்ளார். எனவே, இந்த வீடியோவை நீக்கி சரியான தகவலை மக்களுக்கு சென்றடையும் விதத்தில் சமூக பணியில் ஈடுபடுவதே சிறந்தது.

 

TNPCB orders closure of sterlite plant in thoothukudi 

Vedanta mess: Madras HC stop constructions at sterlite’s

vedanta stocks hits near 1-year low 

Please complete the required fields.




Back to top button