ஸ்டெர்லைட் ஆக்சிஜன் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படாது : தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் !

ஆக்சிஜன் தேவையைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை மட்டும் தொடங்க தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வின் போது, ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் பெரிதும் மருத்துவப் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் தெரிவித்து உள்ளார்.
வேதாந்தாவின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்திக்கான ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய ஏதுவாக உள்ளது. அது மருத்துவத்திற்கு உகந்ததாக இல்லை. அங்கு உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் தூய்மைத் தன்மை 92-93% மட்டுமே உள்ளது. ஆனால் மருத்துவ தேவைக்கு 99.4% அளவு கொண்ட தூய்மையான ஆக்சிஜனே தேவை. ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிந்தாலும் அவற்றில் பெரும்பாலான அளவு தொழிற்சாலை பயன்பாட்டிற்கானதே.
Vedanta Sterlite’s Oxygen Capacity Is For Industrial Use; Not For Medical Use, Tamil Nadu Govt Tells Madras High Court https://t.co/cVAGtuglgL
— Live Law (@LiveLawIndia) April 26, 2021
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி கொள்ளளவில் 35 மெர்டிக் டன் மட்டுமே திரவநிலையாக உற்பத்தி செய்ய இயலும். திரவ நிலை ஆக்சிஜன் தான் மருத்துவ தேவைக்கு பயன்படுத்த முடியும்.
இரண்டு விசயங்களை உறுதிப்படுத்த வேண்டும்: ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் 99.4% தூய்மையை அடைய வேண்டும். வாயு ஆக்ஸிஜனை திரவ வடிவமாக மாற்றுவதற்கும், அவற்றை சேமிப்பதற்கும் அவர்கள் ஒரு கம்ப்ரெசென் மற்றும் பாட்டிலிங் ஆலையை அமைக்க வேண்டும்.
அங்கு வாயு நிலையில் உள்ள ஆக்சிஜனை திரவ நிலைக்கு மாற்றும் கருவி மற்றும் உள்கட்டமைப்பு அமைக்க 9 மாத காலம் எடுக்கும். ஒருவேளை, மத்திய மற்றும் மாநில அரசு தலையிட்டு இது விரைவுப்படுத்தப்படலாம். எனினும், இதற்கு 6 மாதங்களாகும்.
இந்த விஷயத்தை உச்சநீதிமன்றம் நாளை பரிசீலிக்க பட்டியலிட்டுள்ள நிலையில் தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் சென்னை நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்து இருப்பதாக livelaw தளத்தில் வெளியாகி இருக்கிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.