This article is from Apr 26, 2021

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி.. அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள் !

கொரோனாவால் ஆக்சிஜன் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் மனு அளித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தமிழக அரசே ஆலையை எடுத்து நடத்தலாம் என நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. ஆனால், இதை வேதாந்தா நிறுவனம் ஏற்க மறுக்கிறது.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தாவின் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில், தமிழக அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர், திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு, எம்.பி ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணை செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ செளந்தரராஜன், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன், கே.டி.ராகவன், பாமக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ கணேஷ், தேமுதிக சார்பில் கேப்டன் மன்ற செயலாளர் அன்புராஜ் வழக்கறிஞர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே 4 மாதங்களுக்கு தற்காலிகமாக திறக்கலாம் என அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை காண்போம்.

முதல்வர் பழனிச்சாமி : 

” ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது அரசின் நோக்கமல்ல, அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஸ்டெர்லைட்டில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம். ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் அடங்கிய குழு மூலம் கண்காணிக்கப்படும் ” எனத் தெரிவித்து உள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி :

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, ” தற்போதைய ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தலாம் என முடிவெடுத்துள்ளது. அதைத் தவிர்த்து, அங்கு மற்ற அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட வேண்டும். ஆலைக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை தமிழக அரசாங்கம் தான் வழங்க வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பது தற்காலிகமானதே. இதை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவோ, தொடர்ந்து நடத்த எந்தவித முயற்சிகளும் எடுக்கப்பட கூடாது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், போராட்டக் குழுவினர், பொதுமக்கள்  உள்ளிட்டோர் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் ஆக்சிஜன் தயாரிப்பு நடைபெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்  ” எனக் கூறியுள்ளார்.

மதிமுக வைகோ : 

தமிழக அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்து இருக்கிறார். ஸ்டெர்லைட்டை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் என்றும், எக்காரணம் கொண்டும் ஆலையை இயக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனத் தெரிவித்து இருக்கிறார்.

பாஜக எல்.முருகன் :

மத்திய பாஜக அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என்ற நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. நெருக்கடியான சூழ்நிலையில் யார் ஆக்சிஜன் வழங்கினாலும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பதால் தமிழக பாஜகவும் ஸ்டெர்லையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறி வந்தது.

” மனித உயிர் மிக முக்கியமானது. கொரோனா இரண்டாம் அலையால் ஆக்சிஜன் தேவை அதிகம் இருக்கிறது. ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழகத்திற்கு போக மீதமுள்ள ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம் என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது ” என தமிழக பாஜகத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரன், ” தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழக அரசின் அனுமதியில்லாமல் பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு தரக்கூடாது. வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது கவலைக்குரியது. ஆக்சிஜன் பற்றாக்குறையை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் முயல்கிறது. இதை அரசு அனுமதிக்கக்கூடாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும். ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 4 மாதங்களுக்கு அரசு ஆக்சிஜன் தயாரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை ” எனக் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ” ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமையாக கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளலாம். ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த நடவடிக்கையிலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மக்களின் ஒத்துழைப்புடன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கூறியுள்ளார்.

விசிக திருமாவளவன் :

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் எம்.பி திருமாவளவன், ” மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். நாடே ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கிறது. அதேசமயம், அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது ஏன் எனத் தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஸ்டெர்லைட்  ஆலையை திறந்து விடலாம் என முடிவு செய்தது போல் இருக்கிறது. காற்றை நாசமாக்கிய ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் ஆக்சிஜன் உற்பத்தி கோருவது முரணானது. ஆனால், ஸ்டெர்லைட்டை திறக்க உடன்பாடு இல்லையெனினும் ஆக்சிஜன் உற்பத்திக்காக வரவேற்கிறேன் ” எனக் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் : 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ” தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்து இருக்கும் சூழலில், அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி உயர் நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும். அதேநேரத்தில், தமிழகத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பாமல் இங்குள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்துவற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் ” எனக் கூறியுள்ளார்.

நாதக சீமான் :

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

Twitter link 

” கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் ” என சீமான் தரப்பில் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

Please complete the required fields.




Back to top button
loader