திட்டமிட்ட படுகொலையா.. உண்மைகளும் புரளிகளும்..!

திட்டமிட்ட படுகொலையா என்ற கேள்வி எழும் போது முதலில் எப்போது குண்டுகள் காலுக்கு கீழ் குறி வைக்காமல் கழுத்து, நெற்றி, இதயம் என குண்டுகள் பாய்ந்ததோ அப்போதே இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். போராடிய மக்கள், இனி போராட்டத்தை கனவிலும் நினைத்து பார்க்க கூடாது என்ற நோக்கத்தோடே இது அரங்கேறியுள்ளது. போராட்டம் கலவரம் ஆனது வாகனங்களை கொளுத்தினார்கள் என அடுக்கடுக்காக ஆயிரம் குற்றச்சாட்டை வைத்தாலும், கலவரத்தை அடக்க எத்தனையோ யுக்திகள் இருக்க முட்டிக்கு கீழ் சுடாமல் உயிரைப் பறிக்கும் காரியத்தில் இறங்கியது ஏன்? கொன்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதனால் பிறந்தது. இது ஏதோ காவல் துறைக்கும், மக்களுக்கும் நடந்த கலவரம் அல்ல. யார் உத்தரவின் பேரில் இந்த வெறியாட்டம் நிகழ்ந்தது என்பதற்கு பதில் வேண்டும்.
ஒரு கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு. அதை களத்தில் இருந்து செயல்படுத்தும் போது தாசில்தார் முன்னிலையில் செயல்படுத்த வேண்டும். ஆனால், இங்கு வாகனத்தின் மீது ஏறி சுட்டுத் தள்ளுகிறார் ஒரு அதிகாரி. இதையெல்லாம் எப்படி பார்ப்பது ? இப்படி கேள்விகள் பல பல, குற்றச்சாட்டுகளும் பல வைக்க வேண்டிய நேரம் எனினும், சமூக வலைத்தளத்தில் பலவிதமான கற்பனைக் கதைகளையும், உண்மைக்கு புறம்பான செய்திகளையும் பரப்புவதையும் பார்க்க முடிகிறது. கேள்வி கேட்க வேண்டும் அது சரியானதாகவும் இருக்க வேண்டும் அல்லவா..! அதனால் இந்த விளக்கங்கள்.
இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த குழு துப்பாக்கிச் சூடுக்கு முன் எடுத்தப் புகைப்படம் என்று. அதில் இருப்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்றும் வருகிறது. ஆனால், இவர் இதற்கு முன் இங்கு இருந்த எஸ்.பி அஸ்வின் கோட்னிஸ் IPS ஆவார். தற்போது தூத்துக்குடி எஸ்.பியாக வேறு ஒருவர் உள்ளார். ஆக, இந்த தகவல் முற்றிலும் தவறு.
மேலும், பயன்படுத்திய துப்பாக்கி sniper ரக துப்பாக்கி என்று பலரும் பகிர்வதை பார்க்க முடிகிறது. அதுவும் தவறு.. அதுSLR ரக துப்பாக்கி. இது 800 மீட்டர் வரை effective ஆக சுடும் தன்மை உடையது. அதன் குண்டுகள் 7.62 mm. பொதுவாக .303 riffle பயன்படுத்தியே துப்பாக்கிச் சூடு நடத்தப்படும். அந்த ரக துப்பாக்கியை விட இது திறன் கூடியது.
போலீஸ் உடையை அணிவதற்கே வெட்கமாக உள்ளது என்றும், திட்டமிட்ட படுகொலை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த போலீஸ் எனவும் ஒரு வீடியோ உலாவுகிறது. அது உண்மையான போலீஸ் அதிகாரி அல்ல. அவர் சீரியல் நடிகை நிலானி. அவர் அந்த வீடியோவிலேயே தான் படப்பிடிப்பில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதையும் கவனிக்காமல் பரப்பி வருகிறார்கள்.
இப்படியான தவறான தகவல்களால் எதிர் தரப்பின் கேலிக்கும், திசை திருப்புதலுக்கும் ஆளாக நேரிடும். ஒரே ஒரு அதிகாரியின் புகைப்படத்தை வைத்து இவர்தான் அனைவரையும் கொன்றார் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. அதுவும் தவறு. ஏனென்றால், அந்த காணொளிப் பதிவிலேயே இருவர் மாற்றி மாற்றி சுடுவதைப் பார்க்க முடிகிறது. இது மட்டுமின்றி ஒரே இடத்தில் நடந்த துப்பாக்கி சூடு அல்ல. வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்தவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போராட்டத்தில் முதலில் கல் எறிந்தவர்கள் திமுக மாவட்ட நிர்வாகிகள் என ஊடகங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. ஆனால், அதில் குறிப்பிட்ட நேரத்தில் இதுபோன்ற பதிவானது இரு செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகவில்லை. மேலும், இரண்டிலும் விசாரணையில் ஒரே மாதிரியாக எழுத்து பிழை உள்ளதை காணலாம்.
இன்று நாம் செய்ய வேண்டியது இவ்வாறான தவறான தகவல்களை பேசாமல் நடந்த மனித உரிமை மீறலை கடுமையாக எதிர்ப்பதும், இது போன்ற நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று கொண்டு இருக்கும் கட்சிகளையும் ( ஆதாரம்: ஸ்டெர்லைட் ஆலையிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற கட்சிகள் ), மத்திய மாநில அரசின் மெத்தனத்தையும், மக்களின் மீது அக்கறை இன்மையையும் சரியாக கேள்வி எழுப்புவதே. எப்போதும் வன்முறை தீர்வாகாது. இன்றும் அங்கு கலவரம் அடங்கவில்லை. அப்பாவி மக்களின் உயிரே போராட்டங்களில் இரையாகிறது. எந்த அரசியல் தலைவரும் மக்களுக்காக உயிரை விடுவதில்லை.
மண்ணிற்காக, நல்ல காற்றிற்காக போராடும் மக்களை கலவரக்காரர்கள் என்று பெயர் சொல்லி வேட்டையாடப்படுவது ஜனநாயக நாட்டின் அழகல்ல. ஒரு தனியார் மருத்துவமனைக்குள் அதிரடிப் படையினர் அத்துமீறி நுழைந்து அடிபட்டு இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற சம்பவங்கள் கேள்விக்கு உட்பட வேண்டும். இதை போன்ற சரியான கேள்விகளை முன் வைத்து இந்த படுகொலைக்கு நீதி கேட்போம்.
Updated :
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை :
தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 13 என்று தவறான செய்தியை கூறுகின்றனர். ஆனால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுட்டுக் கொல்லப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 67 பேர். இதை ஊடகங்கள் மூடி மறைக்க உதவுகின்றன என்ற செய்தி ஃபேஸ்புக்கில் அதிகம் வைரலாகியத்தை பார்க்க முடிந்தது.
தூத்துக்குடி சம்பவத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 67 என்றுக் கூறி பகிர்ந்த படங்கள் உத்திரப்பிரதேசத்தில் நடந்த விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள். ஏப்ரல் 28-ம் தேதி காலை 5.30 மணி அளவில் Shanjahapur-ல் இருந்து sitapur-க்கு19 பேருடன் சென்று கொண்டிருந்த மினி வேன் தேசிய நெடுஞ்சாலை 24-ல் செல்லும் பொழுது நின்றுக் கொண்டிருந்த ட்ரக் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களை எடுத்த புகைப்படத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எடுத்ததாகக் கூறி வதந்தியை பரப்பியுள்ளனர்.
சிறு குழந்தையின் மீது போலீசார் தாக்குதல் :
தூத்துக்குடி போராட்டக் களத்தில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தினர். மேலும், சிறுக் குழந்தை என்றுக் கூடப் பார்க்காமல் போலீஸ் அடித்ததாகக் கூறி சிறு குழந்தையின் உடலில் காயங்கள் நிறைந்த படம் ஒன்று ஃபேஸ்புக்கில் அதிகம் வைரலாகியத்தை பார்த்திருப்போம்.
படுகாயங்களுடன் காணப்படும் குழந்தையின் புகைப்படங்கள் யாவும் உண்மையே. ஆனால், இதற்கும் தூத்துக்குடி சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாற்றந்தாய் ஒருவர் குழந்தையை தூணில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட காயங்களை குழந்தையின் உடலில் காணலாம். இந்த சம்பவம் நடந்து 2 வருடங்கள் ஆகியுள்ளன, மேலும் இந்த கொடூர சம்பவம் எந்த மாநிலத்தில் நிகழ்ந்தது என்று விவரமாக தெரியவில்லை. தூத்துக்குடியில் குழந்தை தாக்கப்பட்டதாக கூறிய படம் தவறானதாக இருந்தாலும், வயது வித்தியாசம் இன்றி அனைவரது மீதும் தாக்குதல் நடைபெற்றதை வீடியோக்களில் பார்க்க முடிந்தது.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுவது போன்று காண்பித்துக் கொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தார் என்று சமூக வலைத்தளங்களில் ஓர் செய்தி வெளியாகின.
2009-ம் ஆண்டில் தூத்துக்குடியின் ராமனூது என்று பகுதியில் அமைக்கப்பட்ட சமத்துவப்புரத்தை அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே இது.
கம்யூனிஸ்ட் எம்.எல்,ஏ பாலபாரதி :
ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று போராடும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட போவதாக உத்தரவிட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்று கம்யூனிஸ்ட் எம்.எல்,ஏ பாலபாரதி தலைமையில் போராடினார்கள் என்று ஒரு வதந்தி சமூக வலைத்தளத்தில் பரவின.
ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினரோ, எம்.எல்.ஏ பாலபாரதி அவர்களோ போராடவில்லை. ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் எனப் போராடியவர்கள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரே. இந்த படங்களை வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது கோபத்தை திருப்பி அரசியல் லாபம் பார்க்க முனைகின்றனர்.
தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயம் :
தூத்துக்குடி தேவாலயத்தில் காவல்துறையை தாக்க கற்கள், சோடா பாட்டில்கள் உடன் பதுங்கியிருந்த பனிமயமாதா தேவாலய ஊழியர்களளை உள்ளே சென்று வெளுத்து வாங்கிய காவல்துறை. சமூக விரோதிகள் தேவாலயத்தில் மறைந்து உள்ளனர் என்று சமூக வலைத்தளத்தில் தவறான மத வெறுப்புணர்வு செய்தியை பகிர்ந்து உள்ளனர்.
2008 ஆம் ஆண்டில் கர்நாடகா மங்களூரில் உள்ள குலசேகர் தேவாலயத்தில் மங்களூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.கே. கணபதி தலைமையில் தேவாலயத்தில் இருந்தவர்களை வெளியேற எச்சரிக்கை செய்தும் வெளியேற மறுத்ததால் அவர்களின் மீது லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர் குண்டுகள் வீசிய போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவே இது.
தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்பவும், போராடும் மக்களின் மீது தவறான எண்ணத்தை தோற்றுவிக்கவும் பல வதந்திகள் வெளியாகின. அவற்றை எல்லாம் கடந்து மக்களின் கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தற்போது நிறைவேறியுள்ளது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்துள்ளது. இந்த வெற்றி போராட்டத்தில் உயிர் கொடுத்த மக்களுக்கு சமர்பணம்.