ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நிபந்தனை உத்தரவு – தேசிய பசுமை தீர்ப்பாயம்.

தேசிய பசுமை தீர்ப்பாயமானது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக அனுமதி புதுப்பித்தலுக்கான புதிய உத்தரவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூன்று வாரத்திற்குள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களுக்கு சுகாதாரப் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதாகக் கூறி 100 நாள் போராட்டம் நடைபெற்றது.
மே மாதம் மக்களின் போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டு போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் விளைவாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட ஆணைப் பிறப்பித்தது.
இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆலையை திறக்க வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தீர்ப்பாயம் ஓய்வுப் பெற்ற நீதிபதி தருண் அகர்வால் சார்பில் ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சில நிபந்தனைகளுடன் ஆலையை இயக்க அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்தனர். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் தமிழகத்தில் எழுந்தன.
ஆய்வுக் குழுவின் பரிந்துரைக்கு பின்னர் டிசம்பர் 15-ம் தேதி (இன்று) வெளியான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பில்,
- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த ஆணையில் நியாயமில்லை எனக் கூறி அதனை ஒதுக்கி வைத்து ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு.
- அமர்வின் நீதிபதி ஆதர்ஸ் குமார், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வேதாந்தா நிறுவனம் அப்பகுதியில் உள்ள மக்களின் பொதுநலப் பணிக்காக ரூபாய் 100 கோடியைப் பயன்படுத்த வேண்டும். இதைக் கொண்டு அப்பகுதி மக்களுக்கான குடிநீர், சுகாதார சேவைகள், திறன் மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
- உலோகம் உருக்கிய பின்னான கசடுகளைப் பொருத்தமற்ற முறையில் கையாளுவதற்கு வேதாந்தா நிறுவனம் ரூ.25 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும்.
- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை இயக்குவதற்கான அனுமதி புதுப்பித்தலுக்கான புதிய உத்தரவை மூன்று வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் விநியோகமானது ஆலை மூடப்பட்ட போது நிறுத்தி வைக்கப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் குழு பரிந்துரைத்த சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது போன்ற சில நிபந்தனைகளுக்கு சம்மதித்தால் ஆலைக்கு மின் விநியோகம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகி நிபந்தனையுடன் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வாங்கியுள்ளது. இது தமிழக அரசிற்கு மிகப்பெரிய பின்னடைவு எனலாம்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அடுத்து தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், “ தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசின் சார்பில் மேல் முறையீடு செய்யப்படும். எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. உருக்கு ஆலை மீண்டும் திறக்க விருப்பம் இல்லை “ என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் மீண்டும் திறக்க இருப்பது அப்பகுதி மக்களுக்கு வேதனையை அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் நிலத்தடி நீர் மாசடையும், மக்கள் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவர் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளும் மேல் முறையீடு வழக்கில் தமிழக அரசு தன் நிலைப்பாட்டை உறுதியாகவும், தீவிரமாகவும் மேற்கொண்டால் மட்டுமே மக்கள் விரும்பாத ஆலையை நிரந்தரமாக மூட வாய்ப்புள்ளது.
அவை சாத்தியமா என்பதும் கேள்விக்குறியே !
Sterlite Thoothukudi plant: NGT sets aside Tamil Nadu government’s closure order