ஏதோ வேலையிலிருந்து ‘தகுதிக்கேற்ற’ வேலை பெற்றனர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோர் !

2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு பணி வழங்கும் பணிநியமன ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் வழங்கி இருந்தார்.

Advertisement

ஆனால், 2018-ம் ஆண்டே முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணையை வழங்கி இருக்கிறார். பின்னர் ஏன் மீண்டும் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்குகிறார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

2018 செப்டம்பர் 27-ம் தேதி வெளியான தினகரன் செய்தியில், ” ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பலியானோர் மற்றும் காயமடைந்தரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கல்வித் தகுதி குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 10 வாரிசுகளுக்கும், பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுகளுக்கும் என மொத்தம் 19 நபர்கள் அரசு வேலை வழங்க தேர்வு செய்யப்பட்டனர் ” என எடப்பாடி பழனிச்சாமி பணி நியமன ஆணை வழங்கும் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.

Twitter link 

2020 நவம்பர் 24-ம் தேதி தமிழக முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில், ” ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்த திரு.அந்தோணி செல்வராஜ் அவர்களின் மகன் செல்வன் அ.அஜய் ஜோன்ஸ்க்கு கருணை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான நியமன ஆணையை வழங்கினேன் ” என வெளியாகி இருக்கிறது.

2018 செப்டம்பர் தொடங்கி 2020 நவம்பர் காலக்கட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது.

2020 ஆகஸ்ட் 27-ம் தேதி கலைஞர் செய்தியில், ” தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கப்பட அரசு வேலையில் பாரபட்சம் இருப்பதாகவும், வழங்கப்பட்ட வேலையை மறுபரிசீலனை செய்து கல்வித்தகுதிக்கு ஏற்றபடி இளநிலை உதவியாளர் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஒரு நபர் ஆணையத்தில் நீதிபதி அருணா ஜெகதீசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் ” என வெளியாகி இருக்கிறது.

” கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்காமல் அரசின் மிக கடைநிலை பணியாளர்களாக, அரசு ஊழியர்களிலேயே மிகக் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களாவே பணி வழங்கியிருப்பது கருணை அடிப்டையிலானது அல்ல, ஏதோ கண் துடைப்புக்காக கொடுக்கப்பட்டதாகவே உணருகிறோம்.

எங்கள் குடும்ப உறவுகளுக்கு மட்டும் அரசு வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. எனவே, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபு உள்ளிட்டோருடன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக 2020 செப்டம்பர் மாதம் இந்து தமிழ் திசை செய்தியில் வெளியாகி இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றும் பலத்த  காயமடைந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்க கோரி மனு, கோரிக்கை வைத்த செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ” தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 17 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணைகளை ” வழங்கியதாக தந்திடிவி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

17 பேரில் 8 பேருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளராகவும், 4 பேருக்கு இளநிலை உதவியாளராகவும், 3 பேருக்கு ஊர்நல அலுவலர் நிலை-2, ஒருவருக்கு காசாளர் பணியும், ஒருவருக்கு ஈப்பு ஓட்டுநர் பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது

(17 பேரின் தற்போது உள்ள பதவி மற்றும் அலுவலக விவரங்களின் பட்டியல்).

2018ல் நிகழ்ந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியது உண்மையே. ஆனால், அப்போது வழங்கப்பட்டது கல்வித் தகுதி அடிப்படையில் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை, மனு அளிக்கப்பட்டு இருந்தது. 2021 மே மாதம் அவர்களின் கோரிக்கையின்படி கல்வித்தகுதிக்கு ஏற்ற பணிக்கான நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார் எனத் தெளிவாகிறது.
.
Links : 
.
.
.
.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button