வதந்தியால் பீகாரில் 5ரூ பார்லே ஜி பிஸ்கெட் ரூ50-க்கு விற்ற சம்பவம் !

90-ஸ் குழந்தைகள் வாழ்க்கையில் பிரபலமான பிஸ்கெட் நிறுவனமாக இன்றளவும் நினைவுக்கூறப்படுவது பார்லே ஜி. அந்த பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டில் இருக்கும் குழந்தையின் படத்தை வைத்தே பலமுறை வதந்திகள் பரவி இருக்கிறது. ஆனால், தற்போது மக்கள் மத்தியில் பரவிய வதந்தியால் ரூ.5க்கு விற்ற பார்லே ஜி பிஸ்கெட் ரூ50க்கு விற்கப்பட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்து இருக்கிறது.
பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் மைதிலி, மகதி மற்றும் போஜ்புரி பேசும் பகுதிகளில் மூன்று நாள் விழாவாக ஜித்தியா எனும் திருவிழாக் கொண்டப்படுகிறது. இந்த திருவிழாவில், தாய்மார்கள் தங்கள் மகன்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் மற்றும் வளமான வாழக்கையுடன் வாழ்வதற்காக பிரார்த்தனை செய்ய 24 மணி விரதம் இருப்பார்கள்.
பீகாரின் சீதாமரி மாவட்டத்தில் ஜித்தியா திருவிழாவின் போது, ” விரதம் இருக்கும் தாய்மார்களின் மகன்கள் பார்லே-ஜி பிஸ்கெட் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் விரும்பத்தகாத சம்பவங்களை எதிர்கொள்ள நேரிடும் ” என பரவிய வதந்தியால் மக்கள் கூட்டம் கூட்டமாய் கடைகளுக்கு படையெடுத்துள்ளனர்.
பரவிய தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறியாமல் மக்கள் நேரடியாக கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றுள்ளனர். பல கடைகளில் பார்லே-ஜி பிஸ்கெட்கள் கையிருப்பில் இல்லை. இதனால் ரூ.5-க்கு விற்க வேண்டிய பிஸ்கெட் பாக்கெட் ரூ.50 என அதிக விலைக்கு மக்களிடம் விற்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
வதந்தியின் தாக்கம் கிராமப்புற பகுதிகளில் அதிகம் காணப்பட்டது. எனினும், நகர்புறத்தில் கூட சிலர் வதந்தி பற்றி அறிந்து பிஸ்கெட் பாக்கெட்களை வாங்கி சென்றுள்ளனர். வதந்தியால் பல மாதங்களாக விற்பனையாகாமல் மற்றும் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்கள் கூட விற்கப்பட்டதாக ஏபிபிலைவ் இந்தி செய்தியில் வெளியாகி இருக்கிறது.
இந்த வதந்தியானது சீதாமரி மாவட்டத்தின் பார்கானியா, தேங், நன்பபூர், பாஜ்பட்டி, தும்ரா உள்ளிட்ட பல பகுதிகளில் பரவியது. தேவையைக் கருத்தில் கொண்டு கடைக்காரர்கள் பார்லே-ஜி பிஸ்கெட்களை அதிக அளவில் வாங்கி வருவதாகவும், இந்த வதந்தியை மக்கள் இன்னும் நம்பி வாங்கி செல்வதாகவும் அக்டோபர் 1-ம் தேதி அமர் உஜாலா எனும் செய்தி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக, பீகாரில் உப்பு குறித்த வதந்தி பல மாவட்டங்களில் பரவியதால் 4-5 உப்பு பாக்கெட்களை மக்கள் வாங்கி சென்ற சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. மக்கள் எளிதில் வதந்தியை நம்பி விடுகிறார்கள். இதுபோன்ற விற்பனை சார்ந்த வதந்திகளால் கடைக்காரர்கள் தங்களிடம் தேங்கி இருக்கும் பொருட்களை விற்பது மட்டுமல்லாமல் அதிக விலைக்கும் விற்கவும் செய்கிறார்கள்.
Links :