This article is from Sep 13, 2019

இளம்பெண் சுபஸ்ரீ உயிரை பறித்த பேனர் கலாச்சாரம்| கேள்வி கேட்கும் மக்கள் !

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சென்று கொண்டு இருக்கும் பொழுது சாலையின் மீடியனில் இருந்த பேனர் சாய்ந்து சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த உடன் பின்னே வந்து கொண்டிருந்த லாரியில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார். இளம்பெண்ணின் உயிர் பலி தமிழகம் முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

கட்சிக் கூட்டம், திருமண விழா என எந்த நிகழ்ச்சி என்றாலும் விளம்பர பதாகைகள், பேனர்கள் வைப்பது தமிழகத்தில் ஓர் கலாச்சாரமாகவே மாறி விட்டது. அதிமுகவின் பள்ளிக்கரணை முன்னாள் நகரமன்ற உறுப்பினரான சி.ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையின் மீடியன் பகுதி மட்டுமின்றி சாலையின் இருபுறங்களின் வழி நெடுக கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்ற பேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பி.டெக் முடித்த சுபஸ்ரீ கனடா செல்வதற்கான நேர்காணலை முடித்து உள்ளதாக கூறப்படுகிறது. சுபஸ்ரீ தன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று சரிந்து அவரின் மீது விழுந்ததே அவரின் உயிரிழப்பிற்கு காரணமாகியது. சுபஸ்ரீ அவரின் பெற்றோருக்கு ஒரே மகள் என்பது வேதனையின் உச்சம்.

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பறந்து பறந்து பிடிக்கும் காவல்துறை அதிமுக கட்சியின் பிரமுகர் வீட்டின் திருமணத்திற்கு அனுமதியின்றி சாலை நெடுக பேனர்களை வைத்தது மட்டுமல்லாமல் சாலையின் நடுவிலேயே பேனர்கள் வைத்ததை காவல்துறை கவனிக்க தவறியது ஏனோ என மக்களிடம் கண்டனம் எழுகிறது.

இறுதியாக, அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் 5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறைத்தண்டனை என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், அனுமதி இல்லாத பேனர்களை அச்சடித்துக் கொடுக்கும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, மூடி சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்து இருந்தது. பேனர்கள் அச்சிடும் பொழுது அதற்கான அனுமதி எண், அனுமதி வழங்கப்பட்ட நாள், கால அவகாசம் உள்ளிட்ட விவரங்களை அதன் கீழ் குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இளம்பெண் மரணத்திற்கு பிறகு அனுமதி இல்லாத பேனர்களை அச்சடித்து தந்த அச்சகத்தின் உரிமத்தை ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து உள்ளனர். இந்த செயல் சமூக வலைதளங்களில் கோபத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. பேனர்களை வைத்தவர்கள், வைக்க சொன்னவர்களை கைது செய்யாமல் அதனை அச்சடித்த அச்சகத்தை மூடுவதில் நியாயம் என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக நீதிமன்றம் தொடர் கருத்துக்களை கூறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்கள் அதனை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்தது. பேனர்கள் வைப்பதில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் கூறியது.

சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழக அரசின் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபகள், உத்தரவுகள் பிறப்பித்தும் பயனில்லை என்றும், தமிழக அரசின் நிர்வாகத்தை நாங்கள் செய்ய முடியாது என்றும் தெரிவித்து உள்ளனர்.

” அரசு அதிகாரிகளை குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், மக்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் போல அரசு அதிகாரிகள் உள்ளனர், இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தை பொதுமக்கள் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்றும் நீதிபதிகள் தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர் ” .

இதனிடையே, இளம்பெண் சுபஸ்ரீ தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளார் என அவரின் மீதும் கேள்விகள் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் முன் வைக்க துவங்கினர். ஆனால், சுபஸ்ரீ தலைக்கவசம் அணிந்தே சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

சுபஸ்ரீ விபத்தை சந்திக்கும் பொழுது ஹெல்மெட் உடன் இருந்துள்ளார் ” என செ.தாமஸ் மவுண்ட் போக்குவரத்து விசாரணையின் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் டிஎன்எம் செய்திக்கு தெரிவித்து இருக்கிறார். சட்டவிரோத பேனர் மூலம் ஓர் உயிர் போனாலும் கூட இறந்தவரின் மீது குறை சொல்ல சிலர் இருக்கவே செய்கின்றனர்.

இதேபோல், நியூஸ் 18 ஊடகத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் மகாலிங்கம் பொன்னுசாமி, சுபஸ்ரீ சிவப்பு நிறத்தில் தலைக்கவசம் அணிந்து இருந்தார் என்பதை உறுதி செய்து உள்ளார்.

இதற்கு முன்பாக 2017-ல் கோயம்பத்தூரில் ரகு என்ற இளைஞர் அதிமுகவின் பேனர் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழப்புகள் நிகழ்ந்தால் மட்டுமே சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து வெளி உலகிற்கு தெரிய வருகிறது. சுபஸ்ரீ மரணத்திற்கு ஆளும் கட்சியை குற்றம்சாட்டிய சமூக வலைதளவாசிகள் #Admkkilledsubasri என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து முதலிடத்தில் கொண்டு வந்தனர்.

சட்ட விரோதமாக பேனர்களை வைப்பது யார் ஆட்சியில் இருந்தாலும் நிகழவேச் செய்கிறது. ஆளும் கட்சியான அதிமுக பிரமுகர்களின் இல்ல நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு வழி நெடுக பேனர்களை வைத்து மக்கள் செல்லும் நடைபாதையையும் மறைத்து விடுகின்றனர். இது எதிர் கட்சியினருக்கும் பொருந்தும்.

எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் இனி கட்சிக் கூட்டங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு பேனர்களை வைக்க கூடாது, அப்படி வைத்தால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். எனினும், ஸ்டாலின் அவர்களின் முடிவு காலம் தாழ்ந்த முடிவாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக தரப்பில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிச்சாமி இணைந்து வெளியிட்ட அறிக்கையில், வரவேற்பு என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை தொண்டர்கள் நிறுத்தி விட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதேபோன்று, அமமுக கட்சியின் சார்பில் தொண்டர்கள் பேனர்களை வைக்க வேண்டாம் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இளம்பெண் சுபஸ்ரீ மரணம் ஒருநாள் செய்தியாக மாறக்கூடும், ஆனால் மீண்டும் ஓர் உயிர் பலி நிகழாமல் இருக்க மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சட்டவிரோத பேனர்கள் வைக்க அனுமதிக் கூடாது.

Please complete the required fields.




Back to top button
loader