This article is from Oct 05, 2019

சுந்தர் பிச்சையின் கருத்து என பரவும் வதந்திகளின் தொகுப்பு !

கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சுந்தர் பிச்சையை வைத்து கொண்டாடுபவர்களும், அவரின் பெயரை வைத்து வதந்திகளை பரப்பி வருபவர்களும் ஏராளம். இங்கு சுந்தர் பிச்சை பெயரில் பரவிய வதந்திகளின் தொகுப்பை விரிவாக காணலாம்.

சீமான் எதிர்ப்பு : 

தமிழ் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழர் குறித்தும், மதம் குறித்தும் சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்து இருப்பதாக ஓர் பதிவு பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

”  திரு.சீமான் அவர்க தமிழர் என்றால் இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன் உருது பேசும் இஸ்லாமியர்கள் எப்படி தமிழர் ஆவார்கள் , ஆங்கிலம் பேசும் கிறிஸ்தவர்கள் எப்படி தமிழர் ஆவார்கள். இதை ஏன் தமிழில் பதிவிடுகிறேன் என்றால் சீமான் தமிழராயிற்றே.. வேசம் உங்கள் ஆதாயத்துக்காக வேண்டாம் சீமான் அவர்களே. தமிழர்களை கொச்சைப்படுத்தாதீர்கள் ” என சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு பதிவு 2017-ல் இருந்தே பரவி வருகிறது. இன்றும் நின்றபாடில்லை.

இந்த கருத்தில் உண்மைத்தன்மை இல்லை என்பதை மேலோட்டமாக பார்த்தலே புரிந்து கொள்ளலாம். அடுத்ததாக, சுந்தர் பிச்சை சீமானுக்கு எதிராகவோ, அரசியல் குறித்தோ கருத்து தெரிவித்ததாக எந்தவொரு முதன்மை செய்திகளிலும் வெளியாகவில்லை. சில சமயங்களில் செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளை போட்டோஷாப் செய்து பதிவிடுகிறார்கள்.

இறுதியாக, சுந்தர் பிச்சை பெயரில் தங்களின் கருத்துகளை பரப்பி வருபவர்கள் அவரின் பெயரை சரியாக குறிப்பிட வேண்டும். ” Sundar pichai  ” என்ற பெயரை ” sundar pitchai ” எனக் குறிப்பிட்டு உள்ளனர். போட்டோஷாப் முறையில் வதந்திகளை பரப்புபவர்கள் எழுத்து பிழை, பெயர் பிழையை கூட கவனிக்கவில்லை என்பதற்கு இந்த பதிவு ஓர் உதாரணம். இதுபோன்ற பதிவுகளை நீங்கள் எளிதாக வதந்தி என அடையாளம் காணலாம்.

இதை வதந்தி என அறியாமல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 2017 ஜூன் 1-ம் தேதி பகிர்ந்து, பிறகு நீக்கப்பட்டு உள்ளது.

இந்திய வேலைவாய்ப்பின்மை : 

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி நகர வேண்டுமே தவிர மதத்தை நோக்க அல்ல என சுந்தர் பிச்சை கூறியதாக ஆங்கிலம் மற்றும் தமிழ் என பல மொழிகளில் பரவியது. ஆனால், சுந்தர் பிச்சை இந்திய வேலைவாய்ப்பின்மை குறித்து பேசியதற்கு எங்கும் ஆதாரங்கள் இல்லை. மேற்காணும் பதிவிலும், அவரின் பெயரில் எழுத்து பிழை.

நீட் எதிர்ப்பு : 

மேலும் படிக்க : நீட் தேர்விற்கு சுந்தர் பிச்சை எதிர்ப்பு தெரிவித்தாரா ?

நீட் தேர்விற்கு எதிரான கருத்தை சுந்தர் பிச்சை தெரிவித்து இருந்ததாக பரவிய வதந்தி சமூக வலைதளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மேற்காணும் நீட் தொடர்பான பதிவிலேயே சீமானுக்கு எதிராக கூறியதாக பரவும் கருத்தை போட்டோஷாப் செய்து இருக்கிறார்கள்.

வாக்கு செலுத்த இந்தியா வருகை : 

2019 தேர்தலில் தன் வாக்கை செலுத்த சுந்தர் பிச்சை இந்தியா வந்ததாக சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. ஆனால், மேற்காணும் புகைப்படம் சுந்தர் பிச்சை 2017-ல் ஐஐடி கரக்பூருக்கு வருகை தந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம். மேலும் , சுந்தர் பிச்சை அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவருக்கு இங்கு வாக்கு செலுத்த அனுமதியில்லை.

இப்படி ஏராளமான வதந்திகள் தொடர்கிறது ! சுந்தர் பிச்சை இந்திய மற்றும் தமிழக அரசியல், திட்டங்களுக்கு எதிராக, ஆதரவாக கருத்துக்கள் கூறுவதாக அவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரல் செய்கின்றனர்.

ஓர் செய்தியை காணுகையில், உண்மையா அல்லது பொய்யா என மக்கள் சிந்திக்க தொடங்கினால் வதந்திகளை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

Please complete the required fields.




Back to top button
loader