உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் மொழிகளில் தமிழ் இடம்பெறவில்லை ?

ஒரு நாட்டில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலம் அல்லது அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் மட்டுமே வெளியாகின்றன. இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கில மொழியில் வெளியாகி வந்தன. இனி தீர்ப்புகள் மாநில மொழிகளிலும் வெளியாக உள்ளன.
மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல் முறையாக இந்தியாவில் தான் வெளியாக உள்ளது. அதற்கான மென்பொருள் ஆனது உச்சநீதிமன்ற மென்பொருள் பிரிவு மூலம் உருவாக்கி உள்ளனர். இது இன்னும் ஒரு வாரத்திற்குள் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் நிகழும் வழக்குகளின் தீர்ப்புகளின் விவரமானது ஆங்கில மொழியில் நீதிமன்றத்தின் இணையதளத்தில் இடம்பெற்று வந்தன. இனி ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, அஸ்ஸாமி, ஒடியா, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட 6 மொழிகளில் வழக்கின் தீர்ப்புகள் மொழிப்பெயர்க்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில், தென்னிந்தியாவில் இருந்து தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெற்று உள்ளன. தமிழ் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மொழிப்பெயர்ப்பு செய்யப்படும் மொழிகளில் தமிழ் இடம் பெறாதது வருத்தமளிப்பதாக தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடனே தமிழையும் இந்தப் பட்டியலில் சேர்க்கவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்திருக்கிறேன். pic.twitter.com/421S1EyqV8
— Dr Ravikumar M P (@WriterRavikumar) July 3, 2019
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ் மொழியிலும் மொழிப்பெயர்க்க வலியுறுத்தி விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
” எந்தவொரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் இருந்து அதிக அளவில் மேல்முறையீடு வழக்குகள் வருகின்றதோ அதன் அடிப்படையில் அந்த மாநிலத்தின் மொழி உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புகள் வெளியாகும் மொழிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இது முதற்கட்ட முயற்சி மட்டுமே. இரண்டாம் கட்டமாக மற்ற மொழிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ” என உச்ச நீதிமன்றத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து மாநில மொழிகளிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியாகினால் மட்டுமே அனைத்து மாநில மக்களாலும் ஓர் முக்கிய வழக்கு பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
proof :
SC to translate orders in vernacular languages for non-English speakers