This article is from Mar 01, 2018

சிரியாப் போரை இழிவுபடுத்தும் செய்திகளும், தவறான படங்களும் ஒரு பார்வை..

சிரியா போர் பற்றிய செய்திகளும், படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரது மனமும் கலங்கி கொண்டிருக்கும் வேளையில் சிலர் அதை இழிவுபடுத்தி, ஏளனமாக செய்திகளை வெளியிடுகின்றனர். சிரியாவில் இவ்வாறு போரே நடக்கவில்லை , அனைத்தும் நாடகம் என்றும், அங்குள்ள மதத்தை சார்ந்தவர்களுக்கு  இது தேவை தான் என்றும் கூறி சின்னஞ்சிறு குழந்தையின் இறப்பைக் கண்டு  நகைத்துக் கொண்டிருக்கின்றனர். 

எனினும், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படங்கள் அனைத்தும் சிரியாவின் போரில் எடுக்கப்பட்டவையா என்றால், பதில் ஏதும் இல்லை. அதற்கு காரணம், வலைத்தளத்தில் போரின் பழைய படங்களும், வேறு நிகழ்வுகளின் படங்களும், டாகுமென்டரி வீடியோவில் உள்ள படங்கள், சில போலியான படங்களும் கூடப் பகிரப்படுகின்றன. 

ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ?  

சிரியா உள்நாட்டுப் போர் எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சிரியாவின் கிழக்கு கௌட்டா நகரில் அரசு ஆதரவு படைகளின் வான் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். இதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் ஏதுமறியா சின்னஞ்சிறு குழந்தைகள். சிரியாவில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும், 30 நாட்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று பல நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து , பொதுமக்களுக்கு  மருத்துவ உதவி, உணவு, பாதுகாப்பு அளித்து வேறு இடங்களுக்கு மற்ற தற்காலிகமாக 30 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஓம்ரன் டக்நீஷ் :

2016-ல் சிரியாவின் அலேப்போ நகரில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில்  இடிந்தக் கட்டிடங்களில் இருந்து மீட்கப்பட்ட ஓம்ரன் டக்நீஷ் என்ற 5 வயதான சிறுவன் முகத்தில் கை வைத்து கொண்டு, உடல் முழுவதும் தூசி படிந்து, முகம் மற்றும் விரல்களில் இரத்தக் கரைகள் படிந்த நிலையில் ஆரஞ்சு நிற ஆம்புலன்ஸ் சேரில் அமர்ந்து இருக்கும் படமானது உலகளவில் அதிகம் வைரலாகியது. சிரியாவில் நடைபெறும் தாக்குதல் பற்றி மக்களுக்கு அறிய வைத்த படங்களுள் இப்படமும் மிக முக்கியமானது. 

 

ஆனால், சென்ற ஆண்டு சிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் குடும்பத்தை இழந்த இச்சிறுவனின் படங்கள், புரட்சியாளர்கள் தனது மகனுக்கு மேக்கப் போட்டு எடுக்கப்பட்டவை என அச்சிறுவனின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

2016-ல் அலேப்போ நகரின் அருகில் உள்ள கடெர்ஜி என்ற பகுதியில் அரசு ஆதரவு படைகளின் விமானத் தாக்குதலில் ஓம்ரன் டக்நீஷ் வசிக்கும் இடம் பாதிப்படைந்தது. உடனடியாக இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனையும், அவனது குடும்பத்தையும் காப்பாற்றிய தருணத்தை அலேப்போ பகுதியின் பத்திரிகையாளரான முஸ்தபா-அல்-சரௌட் என்பவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.  

2017-ல் ஓம்ரன் டக்நீஷ் தந்தை முஹம்மத் கெயர் டக்நீஷ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ தாக்குதல் நடைபெற்று மீட்கப்பட்ட போது எந்தவொரு மீடியாவையும் பார்க்கவில்லை. நான் மேல் தளத்தில் மாற்றி விட்டேன், அந்த புகைப்படங்கள் என் அனுமதியின்றி தான் எடுக்கப்பட்டது. என் மகனுக்கு முதலுதவி அளிப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். என் மகனின் பெயரையும், விவரங்களையும் மாற்றிக் கூறினேன். அவன் குணமாகி வீட்டிற்கு வந்த பிறகு எவ்வித பிரச்சனைகளும் இல்லை. நாங்கள் தற்போது சிரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதியில் உள்ளோம். தாக்குதலின் போது பத்திரிகையாளர்கள் தங்கள் பிரச்சாரத்திற்காக தனது மகனை புகைப்படம் எடுத்ததாகக் கூறியுள்ளார் “. 

இந்நிகழ்வு குறித்து முஸ்தபா-அல்-சரௌட் கூறுகையில், “ அலேப்போ தாக்குதலில் இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட பல குழந்தைகளை நான் பார்த்து புகைப்படங்கள் எடுத்துள்ளேன். உடல் முழுவதும் தூசியாலும் இரத்தக்கறை படிந்த முகத்துடன் என்ன நடக்கிறது என புரியாமல் உறைந்து போயிருந்தான் அச்சிறுவன் . இப்படங்கள் எப்படி வைரலானது என்று தெரியவில்லை. இதைவிட மோசமாக நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.  

“ இது ஒன்றும் அபூர்வமான நிகழ்வு அல்ல. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் குண்டுவீச்சில் பாதிக்கப்படுகின்றார்கள். இது ரஷ்ய மற்றும் சிரிய படைகள் தினந்தோறும் சிரியாவின் மக்கள் மீது நடத்தும் தாக்குதல்களின் உண்மை முகம். இக்குழந்தை சிரியாவில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகளின் பிரதிநிதி ஆவான்.  “ என்று கூறியுள்ளார்.  

புகைப்பட தொகுப்புகள் : 

கிழக்கு கௌட்டா தாக்குதலுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் சிரியா குழந்தைகளின்  படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், உண்மையான படங்களுடன், சில தவறான படங்களும் பகிரப்படுகின்றன. அதற்காக பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்துவது மனிதாபிமானமற்ற செயலாகும். 

உள்நாட்டுப் போரில் பெற்றோர்களை இழந்த குழந்தை என்ற வாசகத்துடன் வலம் வந்த குழந்தையின் பெயர் சிட்ரா. இதற்கு வருந்தி பல நாடுகளில் இருந்து, அக்குழந்தையை படமெடுத்து வெளியிட்டவரின் பதிவில் சென்று அக்குழந்தை நலமா? குழந்தையை நாங்கள் தத்து எடுத்து கொள்ளலாமா ? என்றெல்லாம் பதிவிட்டுள்ளனர். இது நம் மக்களின் உள்ளத்தில் உள்ள அன்பை வெளிபடுத்துகிறது. 

அதற்கு பதிலளித்த புகைப்பட கலைஞர், தற்போது இக்குழந்தை சிரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதியில் தனது பெற்றோருடன் பாதுகாப்பாகவும், அச்சுறுத்தல் இன்றியும் வாழ்ந்து வருகிறாள்  என்றுள்ளார்.

மார்ச் 2017-ல் ஈராக்கின் இஸ்லாமிக் மாநிலத்தின் மொசுல் பகுதியில் 100 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த போரில் ஈராக் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாதிப்பில் தனது மகளை தூக்கி அழுதுக் கொண்டே செல்லும் தந்தையின் புகைப்படங்கள் தான் இவை.

2014-ல் மதங்கள் பற்றி குருநடைபோடும் சுகுமான் என்பவரின் பக்கத்தில் நாத்திக கருத்துடன் துப்பாக்கியுடன் இருக்கும் இப்படங்கள் பகிரப்பட்டன.. ஆனால், இவை சிரியாவில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவை என தவறாக நினைத்துள்ளனர். 

கன்னம் மற்றும் வாயில் இரத்தத்துடன் மனிதக் கையை பிடித்துக் கொண்டு இருக்கும் படங்கள், 2010-ல் ஹல்லோவீன் என்னும் திருவிழாவின் போது மனிதக் கறியை உண்ணும் ஜோம்பி போன்று உடையணிந்த குழந்தையின் புகைப்படமாகும்.

பெற்றோரின் கல்லறைக்கு இடையில் உறங்கும் சிறுவன் என பரவிய புகைப்படம் உண்மையில் அப்துல் ஆசிஸ் அல் ஒட்டாபி என்னும் புகைப்படக்கலைஞரால் சவூதியில் எடுக்கப்பட்டது. அவரது உறவுக்கார பையன் தான் அச்சிறுவன். சிரியாவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பெற்றோரின் மீதுள்ள அன்பை வெளிபடுத்துமாறு அந்த படத்தை எடுத்தேன். அது உண்மையில் கல்லறை இல்லை. சிறுவனின் பெற்றோர் நலமாக இருக்கின்றனர் என்று அவர் கூறினார். 


சிரியாவில் நிகழும் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் எத்தகையரின் உள்ளத்தையும் கலங்கடிக்கும். ஆனால், இரக்கமற்ற சில மத வெறி பிடித்தவர்கள், லட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட ஒரு போரை நாடகம் என்றும், அவர்களின் பதிவில் மதம் சார்ந்த கருத்துகளையும் திணிக்கின்றனர்…. 

இருப்பினும், சிரிய போரில் தொடர்பற்ற சில படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது என்பதை அறிந்து பகிருமாறு கேட்கிக்கொள்கிறோம்.

சிரிய போரை கொச்சைப்படுத்தும் முயற்சி, போலி என கிளம்பும் புரளி- பகுதி 1 

I filmed the syrian boy pulled from the rubble 

Media using my son for their purpose 

Please complete the required fields.




Back to top button
loader