தாஜ்மஹால் ராம்/சிவ மஹால் ஆக மாறும் எனப் பேசிய பாஜக எம்எல்ஏ.. தொடரும் சர்ச்சை கருத்து !

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பைரியா தொகுதியின் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், ஆக்ராவில் உள்ள இந்தியாவின் வரலாற்று நினைவுச் சின்னமும், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பெயர் ” ராம் மஹால் ” அல்லது ” சிவ மஹால் ” என மாற்றப்படும் எனப் பேசியது சர்ச்சையாகி வருகிறது.
மார்ச் 13-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திர சிங், ” முஸ்லீம் படையெடுப்பாளர்கள் இந்திய கலாச்சாரத்தை அழிக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தினர். ஆனால், தற்போது உத்தரப் பிரதேசத்தில் சிவாஜியின் வம்சாவளியின் வடிவத்தில் பொற்காலம் வந்துவிட்டது. அது(தாஜ்மஹால்) மாறும்… இது ஒரு சிவன் கோவிலாக இருந்தது. தாஜ்மஹால் மீண்டும் ஒரு தேசிய பாரம்பரியமாக மற்றும் ராம் கோவிலாக மாறும். யோகி(ஆதித்யநாத்)ஜி காரணமாக இது அனைத்தும் மாறும் ” எனக் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
மேலும், ” உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வலித்தோன்றல் என்றும், முஸ்லீம் படையெடுப்பாளர்கள் இந்திய கலாச்சாரத்தை அழிக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தினாலும், அது தற்போதைய பொற்கால ஆட்சியில் மாறும் ” என்றும் கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க : ஹத்ராஸ் பெண்ணின் நடத்தை பற்றி உ.பி பாஜக தலைவரின் மோசமான பேச்சு !
பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் சர்ச்சையான கருத்துக்களை கூறுவது புதிதல்ல. கடந்த ஆண்டு, ஹத்ராசில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போது, ” பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், சடங்குகளையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து வளர்ப்பதன் மூலமாகவே பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும். அரசும், நல்ல பண்புகளும் இணைந்தால் நாடு சிறப்பாக செய்யப்பட முடியும் ” என சர்ச்சையான கருத்தை பேசியவர். தற்போது தாஜ்மஹால் குறித்து அவர் கூறிய சர்ச்சையான கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில் என தொடர்ந்து எழும் சர்ச்சை கருத்து :
உலக அதிசயமான தாஜ்மஹால் ஒரு சிவன் கோவிலாக இருந்ததாகவும், ஷாஜகான் அதை இடித்து மாற்றியதாகக் கூறும் சர்ச்சையான கருத்துக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவினராலும், வலதுசாரி ஆதரவாளர்களாலும் பேசப்பட்டு வருகிறது. ஏன், வடஇந்திய சமூக வலைதளங்களில் தாஜ்மகால் சிவன் கோவிலாக இருந்ததற்கான குறியீடுகள் என பல வீடியோக்கள், பதிவுகளை வெளியிடவும் செய்கிறார்கள்.
2017ம் ஆண்டு பாஜக தலைவர் வினய் கதியார், முகலாய பேரரசர் ஷாஜகான் தேஜோ மஹாலயா எனும் கோவிலை இடித்து தாஜ்மஹால் நினைவு சின்னத்தை கட்டியதாக பேசி இருந்தார். 2019-ல் தாஜ்மஹால் விரைவில் தேஜ் மந்திராக மாற்றப்படும் என எம்பி வினய் கதியார் சர்ச்சையாக பேசியதாகவும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
2019 ஜனவரியில் மத்திய அமைச்சராக இருந்த ஆனந்த்குமார் ஹெக்டே, ” தாஜ்மஹால் முஸ்லீம்களால் கட்டப்படவில்லை. ஷாஜகான் தனது சுயசரிதையில் இந்த அரண்மனையை ஜெயசிம்ஹா மன்னரிடம் இருந்து பெற்றதாகக் கூறினார்.
தேஜோ மஹாலயா என அழைக்கப்படும் இந்த சிவன் கோவில் மன்னர் பரமதீர்த்தாவால் கட்டப்பட்டது. பின்னர் தேஜோ மஹாலயா தாஜ்மஹால் ஆனது. நாம் இப்படி தூங்கிக் கொண்டிருந்தால் நமது வீடுகள் மசூதிகளாக மறுபெயரிடப்படும். எதிர்காலத்தில், பகவான் ராமர் ஜஹபனாவாகவும், சீதா பீபியாவும் அழைக்கப்படுவர் ” என சர்ச்சையாக பேசி இருந்தார்.
Taj Mahal – A Hindu Temple
All scientific evidences prove that Taj Mahal is Tejo Mahalaya, ancient Hindu vedic temple
For 300 years the world was fooled to believe that Taj Mahal was built by the Shahjahan#TajMahal
Read on @KreatelyMediahttps://t.co/bCRYT61Foh
— Kapil Mishra (@KapilMishra_IND) July 24, 2020
இதற்கெல்லாம் முன்பாக, 2015-ல் வழக்கறிஞர் ஹரிஷங்கர் தலைமையில் 6 வழக்கறிஞர்கள் ஆக்ரா நீதிமன்றத்தில், தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் 1212 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட “தேஜோ மஹாலயா” என்ற சிவன் கோவிலை இடித்து முகலாய கட்டிட முறையில் மாற்றம் செய்து தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டினார். எனவே, தாஜ்மஹாலை சிவன் ஆலயமாக அறிவித்து வழிபாடு நடத்த அனுமதிக்குமாறு ” மனு தாக்கல் செய்தனர்.
2017-ல் இந்த மனுவின் விசாரணையின் போது, ” தாஜ்மஹால் கல்லறை மட்டுமே, கோவில் இல்லை ” என இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையானது அறிக்கை தாக்கல் செய்தது. 2015-ல் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் மக்களவையில், ” தாஜ்மஹாலில் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை ” என பதில் அளித்து இருந்தது.
விரிவாக படிக்க : தாஜ்மஹால் ” தேஜோ மகாலயா” எனும் புராதான சிவன் ஆலயமா ?
பாஜகவைச் சேர்ந்தவர்கள் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் தாஜ்மஹால் ஒரு சிவன் கோவிலை இடித்து கட்டப்பட்டது, சிவன் கோவிலாக இருந்து மாற்றப்பட்டது என தொடர்ந்து பல ஆண்டுகளாக சர்ச்சையான கருத்தை முன்வைத்து வருகின்றனர். எதிர்வரும் காலங்களில், இதை முழுமையாக நம்ப வைக்க தற்போதே விதை போட்டு வருகிறார்கள் என ஆர்வலர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார்கள்.
Links :
UP: BJP MLA sparks row: ‘Rename ‘Taj Mahal after Ram or Shiva’
Taj Mahal will soon be converted into Tej Mandir: BJP MP Vinay Katiyar
Taj Mahal stands on razed Shiva temple: BJP leader Vinay Katiyar feeds fresh fuel to row
Taj Mahal not built by Muslims, it’s a Shiv Mandir: Union minister Anant Hegde
For the first time, ASI tells court Taj Mahal is not a temple but a tomb